டீனேஜ் எனப்படும் பதின் பருவம் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சோதனையான காலம். அந்த நேரத்தில் தான் ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். வீட்டில் இருக்கும் பெற்றோர் அவர்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற வேண்டியது அவசியம். அப்படி இல்லையென்றால் என்ன ஆகும்? எனச் சொல்கிறது எனது அடுத்த நாவலான "மலருக்குத் தென்றல் பகையானால்...".
தனுஜா பள்ளியில் படிக்கும் இளம் பெண். அவளது வீட்டின் நிலை ஏன் சரியில்லை? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்பதையெல்லாம் யோசித்துக் குழம்பி, வெளியில் ஆறுதல் தேடுகிறாள். தோழி மீரா கூடப் பகையாகத் தெரிகிறாள் ஒரு கட்டத்தில். தனுஜாவின் அந்த நிலையைப் பயன் படுத்தப் பார்க்கிறான் ஒரு கயவன்.
இறுதியில் தனுஜா என்ன ஆனாள்? அவளது எதிர்காலம் என்ன ஆகும்? அவளது தாய் தனது தவற்றை சரியான நேரத்தில் உணர்ந்து கொண்டாளா?
இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளப் படியுங்கள் புதிய நாவல் "மலருக்குத் தென்றல் பகையானால்.." உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.
நெருப்பில் கரையும் பனித்துளிகள் திருமணமாகாத ஒரு இளம்பெண் தவறு இழைத்ததால் அவள் குடும்பமே நசிந்து போனதைப் பற்றிப் பேசுகிறது.
தன் தங்கையை ஏமாற்றியக் கயவன் பணக்காரன் என்பதால் அவனைப் பழி வாங்க அண்ணன் குமாரும் அவனது நண்பன் ஆனந்தும் தொழில் ஆரம்பிக்கிறார்கள். எப்படியாவது தங்கையை ஏமாற்றியவனின் கம்பெனியை விலைக்கு வாங்கி அவனை நடு ரோட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே குமாரின் லட்சியம் கனவு எல்லாமே!
அதில் அவன் வெற்றி கண்டானா? அவனது பழிக்கு ஆளான தினேஷ் என்னவானான்? குமாருக்குக் காதல் வருமா?
இப்படிப் பல கேள்விகளுக்குப் பதிலாக அமைகிறது இந்த நாவல்.
விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படைக்கப்பட்டிருக்கிறது "நெருப்பில் கரையும் பனித்துளிகள்" என்ற இந்த நாவல்.