(Reading time: 2.75 - 5.5 hours)
கண் வாசல் கனவுகள் - முகில் தினகரன் : Kan vasal kanavugal - Mukil Dinakaran
 

கண் வாசல் கனவுகள் - முகில் தினகரன்

முகில் தினகரனின் புதிய நாவல்.

 

அத்தியாயம் 1

     அவன் பாலாஜி.

 

     காற்றில் பறந்து கொண்டிருந்த தலைமுடி அவனை “பரட்டை என்கிற பாலாஜி” ஆக்கியிருந்தது. முகத்தில் ஒரு வார தாடி.  கண்கள் இடுங்கிப் போய், குழிக்குள் பதுங்கியிருந்தன.  ஏனோதானோவென்று அவன் அணிந்திருந்த சட்டையும் பேண்ட்டும், அவனது விரக்தி மனநிலையை ஊருக்கெல்லாம் பறை சாற்றிக் கொண்டிருந்தன.

 

     பார்க் பெஞ்சில், கால்களை நீட்டியபடி அமர்ந்திருந்த அவனுடைய முகத்தில் மாலை நேர வெயில் மஞ்சள் பூசிக் கொண்டிருந்தது.

 

     அது ஞாயிறு மாலையானதால் பார்க்கில் கூட்டம் சற்று அதிகமாகவேயிருந்தது.  குழந்தைகளுக்கான பகுதியிலிருந்து  “காச்...மூச்”சென்று ஏக சத்தம்.  ஊஞ்சல்...சறுக்கு...சீசா பலகை...என எல்லாவற்றிலும் குழந்தைகள் தொங்கிக் கொண்டிருந்தன.  சில தின்னிப் பண்டாரக் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வமின்றி, தங்கள் அம்மாமார்களை நச்சரித்து, எக்கச்சக்கமாய் தீனிகளை வாங்கி மடியில் வைத்துக் கொண்டு, நிதானமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

 

சில செடி மறைவுகளிலிருந்து “கிசு...கிசு”வென்ற பேச்சு சப்தமும், அவ்வப்போது சில்லரைச் சிதறலாய் சிரிப்புச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன.

ஜோடி செட் ஆகாத விடலைப் பயல்கள், ஆங்காங்கே ஜோடி வேண்டி  ஒற்றைக்காலில் கொக்கு போல் தவமிருந்தனர்.

ஒன்றிரண்டு பெண்கள் தங்களின் லவ்வருக்காக நகம் கடித்தபடி காத்துக் கொண்டிருக்க, அவர்களையும் விடாமல் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன ஒற்றைக்கால் கொக்குகள்.   “அவன் வராவிட்டால் என்ன? நாங்கள் இருக்கிறோம்?” என்று சொல்லாமல் சொல்லியது அவர்கள் பார்வை.

 

பார்க் காவலாளி ஏற்கனவே செடி மறைவுக் காதலர்களிடமிருந்து ஒரு அன்பளிப்புத் தொகையைப் பெற்றிருந்த காரணத்தால், தன் விசுவாசத்தைக் காட்டும் விதமாய், காதலர்கள் மறைந்திருக்கும் செடிகள் அருகே செல்லும் குழந்தைகளையும், வேறு சிலரையும் சின்சியராக விரட்டி விட்டார்.

 

கொழுத்த பணக்காரர்களான சிலர் தங்களது பருத்த உடம்பினைப் பராமரிக்கும் விதமாய் வாக்கிங்கில் ஈடுபட்டிருக்க, இளைஞர்கள் சிலர் எப்படியும் அடுத்த முறை நிகழும் “ஆணழகன் போட்டி”யில் நிச்சயமாக பரிசினை வென்றே ஆக வேண்டும் என்கிற தீவிர முனைப்பில், படு ஆவேசமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

 

நடுத்தர வயது “ஜொள்” மாஸ்டர்கள் பார்க் பெஞ்சில் அமர்ந்து, கையில் ஏதோவொரு பாடாவதிப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதைப் படிப்பது போல் பாவ்லா காட்டிக் கொண்டு, வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் பருத்த பணக்காரப் பெண்களின் உருண்டு திரண்ட அழகை திருட்டுத்தனமாய் விழியால் பருகிக் கொண்டிருந்தனர். 

 

கண்ணெதிரில் தெரியும் காட்சிகளையெல்லாம், இறுகிய முகத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்த பாலாஜிக்கு, தன்னைத் தவிர இந்த உலகில் எல்லோருமே சந்தோஷமாய்...மகிழ்ச்சியாய்...உற்சாகமாய்...இருப்பதாய்ப் பட்டது.

 “ஏன் எனக்கு மட்டும் இந்த உலகம் இப்படி கசக்கிறது?...யார் காரணம்?...என்ன காரணம்?...என் பிறப்பு தப்பா?...இல்லை வளர்ப்பு தப்பா?....”

 “சார்...முறுக்கு வேணுமா?” கேட்டபடி தன் அருகில் வந்து நின்ற சிறுவனைப் பரிதாபமாய்ப் பார்த்து,

 

“வேண்டாம்ப்பா!” என்றான் பாலாஜி.