நூலைப் பற்றி ...
ஊரெங்கும் பூ வாசம் என்ற இந்த நாவல் நான் என் வாழ்க்கையில் சந்தித்த ஒரு பெண்மணியின் சொந்த அனுபவங்கள்.
இக்கதையின் நாயகியான வடிவு ஆச்சி சாதாரண காய்கறி விற்கும் பெண்மணி. வாழ்க்கையில் பல துன்பங்களையும் சோதனைகளையும் சந்தித்தவள். அவளுக்குத் துன்பங்களைக் கொடுத்தவர்கள் சொந்தக் கணவன், மகன் என்றான போதிலும் அவள் மனம் தளரவில்லை. மகள் அர்ச்சனாவை எப்படியாவது மருத்துவராக்கிப் பார்த்து விட வேண்டும் என்ற அவளது கனவிலிருந்தும் பின் வாங்கவில்லை. "என்னை விட்டுப் பிரியும் போது ஒரே ஒரு ஆண் குழந்தையுடன் தானே இருந்தது. அவன் என் மகன் தினேஷ். ஆனால் இப்போது இப்போது மகள் ஒருத்தி இருக்கிறாளே? அவளை யாருக்குப் பெற்றாய்? என்ற கணவனின் கேள்வியால் உள்ளம் புண் பட்டாலும் உண்மையான பதிலைச் சொல்லவில்லை ஆச்சி.
அர்ச்சனா உண்மையிலேயே யார்? அவளுக்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம்? என பல கேள்விகள் வருகின்றன இந்தக் கதையில்.
மனிதாபிமானம், இரக்கம், கருணை அதே நேரத்தில் தைரியம், துணிச்சல் இவைகளின் மொத்த உருவம் தான் ஆச்சியும், அர்ச்சனாவும். குடும்பக் கதைகளைக் கூட இத்தனை விறுவிறுப்பாக சொல்ல முடியுமா? என பலரையும் வியக்க வைத்தது இந்த நாவல்.
படித்து விட்டுக் கருத்தைப் பகிருங்களேன் வாசகர்களே!