Chillzee KiMo Books - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - ஜெபமலர் : Olithu kollathe mellisaiye - Jebamalar

ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - ஜெபமலர் : Olithu kollathe mellisaiye - Jebamalar
 

ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - ஜெபமலர்

 

 

அத்தியாயம் 1

மாப்பிள்ளை வீட்டார் வந்திட்டாங்க என்று ஒருவர் சத்தம் கொடுக்க அந்த சத்தத்தை மிஞ்சி வரவேற்றது வெடி சத்தம்.

தன் அறையில் அமர்ந்து இருந்த மணப்பெண் தேவியின் தோழிகள் மாப்பிள்ளையை பார்த்து விட்டு , தேவி செமயா இருக்காருடீ உன் ஆளு.. என்று ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் கூற தேவியின் முகம் மருதாணி இல்லாமலே சிவந்தது.

பெண்கள் கூடி இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கும் பேச்சுக்கும் குறை இருக்குமா என்ன.. அதுவும் மணப்பெண்ணின் தோழிகள் என்றால் சும்மாவா.. அந்த அறையே சிரிப்பொலியில் நிறைய, சீக்கிரம் அழைச்சிட்டு வாங்க என்று சொல்லி சென்ற மங்கலத்தின் குரல் கேட்டு அறையே அமைதி ஆனது.

என்ன தேவி, உங்க பெரியம்மா இன்னைக்காவது கொஞ்சம் சிரிக்கலாம்ல என்று ரேகா கேட்க

விடு ரேகா அம்மா பற்றி தான் உனக்கு தெரியுமே... சீக்கிரமே என் தங்கையை அழைச்சிட்டு வாங்க என்று வந்து நின்றான் குணசேகர்.

சரிண்ணா ரெடி ஆகிட்டா வந்திடுவா என்று திவ்யா சொல்ல அங்கிருந்த தங்கையை பார்த்து கையால் நெட்டி முறித்து விட்டு சென்று விட்டான்.

குணசேகர் அண்ணா உன் பெரியம்மாவோட பையன் என்று நம்பவே முடியவில்லை என்று திவ்யா சொல்லவும் தேவியின் சித்தி வந்து அவளை அழைத்து சென்றார்.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் பட்டு கட்டும் வைபவம் நடைபெற வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் உறுதியாக சொல்லி விட்டதால் முகூர்த்ததன்றே மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள்.

தேவியின் முகத்தில் தெய்வீக களை தெரிய சொந்த பந்தங்கள் அனைவருக்கும் நிறைவாக இருந்தது. அப்பா அம்மா இல்லாத பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்கு. இனியாவது சந்தோசமா இருக்கட்டும் என்று கூட்டத்தில் இருந்தவர்கள் சொல்லி கொண்டார்கள். 

மாப்பிள்ளை பரத் பக்கத்தில் அமர்ந்து இருந்த பிரபாகரோ டேய் மச்சான்... பொண்ணுக்கு தங்கச்சி இருந்தா சொல்லுடா நான் கரெக்ட் பண்ணிக்கறேன் என்று சொல்ல அவனை பார்த்து முறைத்தான் பரத்.

ஏன்டா மச்சான் முறைக்கிற... நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று சொல்லவும் பொண்ணையே பார்க்காத மாதிரி இப்படி பார்த்து மானத்தை வாங்கதடா என்று சொல்லவும் தான் பிரபாகரனுக்கே உரைத்தது. ச்ச எப்படி பார்த்து வைத்திருக்கோம் அதுவும் கல்யாண பொண்ணை என்று சொல்லி தலையை தட்டி கொண்டான்.

அன்றைய நிகழ்வுகள் எல்லாம் நல்லபடியாக முடிய ஓய்வு எடுக்க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தனர். மாப்பிள்ளையும் அவன் தோழனும் ஓய்வெடுக்க ஒரு அறையும், மாப்பிள்ளையின் பெற்றோருக்கு ஒரு அறையும் பெண் வீட்டின் பின்புறம் ஒதுக்கி இருந்தார்கள். நடுவில் சிறியதான ஒரு முற்றம் மட்டும் இருந்தது. 

அறைக்குள் வந்ததும் பிரபாகர் படுத்து உறங்கி விட்டான். 

அறைக்கு வந்த பரத் அங்கு இருந்த ஆள் உயர கண்ணாடியில் தன்னையே பார்த்து சிரித்து கொண்டான். ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம்... அடர்த்தியான கேசம் காற்றோடு கதை பேச, உடற்பயிற்சி செய்து ஏற்படுத்திய கட்டுடல், பரந்த மார்பு, கண்களில் ஒரு தீர்க்கமான பார்வை, எதிர் இருப்பவரை அளந்து விடும் கூரிய பார்வை, இளம் வயதிலேயே சாதித்து விட்டதால் ஏற்பட்ட சிறு கர்வம், இவையெல்லாம் மீறி எப்போதும் இறுகி இறுக்கும் உதட்டில் இப்போது இருக்கும் மந்தகாச புன்னகை அவனுக்கு இன்னும் அழகை கூட்டி தன்னையே ரசித்து கொண்டு இருந்தான். 

அவன் மனம் அவனோடு ஏதோ பேச என்ன என்று புரியவில்லை. ஆனால் அவனது முகம் மாற்றம் அவனுக்கு புரிகிறது என்று தோன்றுகிறது. 

அவனது நண்பன் பிரபாகர் தூக்கத்தில் இரண்டாம் உலகை கடந்திருக்க அமைதியான அறையில் கண்ணாடி பார்த்து பேசி கொண்டு இருந்தவனை தொல்லை செய்வது போல அறை கதவு தட்டப்பட வேண்டா வெறுப்பாக கதவை திறந்தான். 

இன்னும் தூங்கலையாடா, சீக்கிரம் தூங்கு காலை நான்கு மணிக்கு எழும்பனும். லைட் எரியுதேனு வந்தேன் என்றதும் சரிம்மா என்று சொல்லி விட்டு லைட் ஆப் செய்து விட்டு படுக்கையில் விழுந்தவன் நிம்மதியாக தூங்கி விட்டான். 

அவன் படுத்து விட்டதை உறுதி செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி தன் அறைக்குள் சென்றாள் மனோகரி.. மாப்பிள்ளையின் தாயார்.