அத்தியாயம் 8.
ப்ராஜக்ட்டில் வந்திருக்கும் கேள்வி ஒன்று பூர்வியின் மனதை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது.
ஒரு ப்ராஜக்ட் கிடைக்க ப்ரோபோசல் கொடுப்பது ஒரு வேலை என்றால், அப்படி அந்த ப்ரோபோசலில் சொன்னப் படி வேலையை செய்து முடிப்பது இன்னொரு வகையான வேலை.
சொன்ன பட்ஜெட்டுக்குள் அனைத்தையும் முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள்ளும் முடிக்க வேண்டும்.
பூர்வி எதையுமே முழுவதுமாக திட்டமிட்டு செய்பவள். அவள் எடுத்துக் கொள்ளும் எந்த வேலையையும் பொறுமையாக ஆராய்ந்து நிலைமைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பவள்.
அவள் தலைமை ஏற்று இருக்கும் புதிய பிராஜக்ட்டிற்கு வேண்டிய டீமை உருவாக்கும் வேலை இன்னமும் பாக்கி இருந்தது.
இத்தனை நாள் அவளுக்கு மேனேஜராக இருந்த சில்வியா மற்றும் ஜாவேத் இருவரும் சிலரை அவளின் புதிய டீமிற்காக சிபாரிசு செய்திருந்தார்கள்.
பிரச்சனை என்ன என்றால் சில்வியா, ஜாவேத் இருவரும் அவர்கள் சிபாரிசு செய்திருப்பவர்களை டீமில் சேர்த்துக் கொள்ளுமாறு பூர்வியை வற்புறுத்தவும் செய்திருந்தார்கள்.
சிபாரிசு இருக்கிறதோ இல்லையோ, அவளின் தேவைக்கு ஏற்ப சிறப்பாக வேலை செய்பவர்களை டீமில் சேர்க்க பூர்விக்கு எந்த தடையுமில்லை. ஆனால் அவள் இந்த ப்ராஜகடிற்காக எதிர்பார்க்கும் திறன்கள் இல்லாதவர்களையும் சில்வியா, ஜாவேத் இருவரும் சிபாரிசு செய்து, வற்புறுத்துவது தான் பூர்விக்கு தலைவலியை கொடுத்திருந்தது.