2. Melody survives...
“உன் இதயம் பேசுகிறேன்” என்னுடைய “கண்ணின் மணி’ கதையின் அடுத்த பாகம். முதல் பாகத்தில் விட்ட இடத்தில் இருந்து இங்கே தொடரப் போகிறோம். முதல் பாகத்தை படித்திருக்காதவர்களுக்கும் புரியும் விதத்தில் தான் இந்த கதை ஓட்டம் இருக்கும். இருந்தாலும் தெளிவான புரிதலுக்காக கண்ணின் மணி கதையை முதலில் படித்து விட்டு இந்த கதையை தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- ஸ்ரீலேகா D.
அத்தியாயம் 1.
சூடாக இருந்த கடாயில் வெங்காயத்தை கொட்டியதும் பெரிய புகை எழுந்தது. அதைப் பற்றி கவலைக் கொள்ளாமல் வெங்காயத்தை வதக்கத் தொடங்கினாள் பூர்வி.
அவளின் இரு பிள்ளைகள் விளையாடி கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
“ஈஷான், நிரவி, நாளைக்கு ஸ்கூல் இருக்கு. தூங்குங்க!” பூர்வி குரலை உயர்த்தி அதட்டிச் சொன்னாள்.
ஈஷான், நிரவி இரண்டுப் பேரும் வேண்டா வெறுப்பாக இரவு தூக்கத்திற்கு தயாராக தொடங்கினார்கள்.
“அம்மா, அப்பா எப்போம்மா வருவார்?” நிரவி கேட்ட கேள்வி காதில் விழாததுப் போல பூர்வி அடுத்த நாளுக்கான சமையல் செய்துக் கொண்டிருந்தாள்.
எல்லாமே சீக்கிரமாக முடிக்கும் இன்ஸ்டன்ட் சமையல் மட்டுமே. காலையில் இதை செய்வதற்கும் நேரம் கிடைப்பதில்லை.