Chillzee KiMo Books - பிணை வேண்டும் பன்மாய கள்வன் - சாகம்பரி : Pinai vendum panmaaya kalvan - Sagampari

பிணை வேண்டும் பன்மாய கள்வன் - சாகம்பரி : Pinai vendum panmaaya kalvan - Sagampari
 

TEN CONTEST 2019 - 20 - Entry # 15

Story Name - Pinai vendum panmaaya kalvan

Author Name - Sagampari

Debut writer - No


பிணை வேண்டும் பன்மாய கள்வன் - சாகம்பரி

முன்னுரை

காதலோ... அன்போ... பாசமோ… நல்ல உறவுகளை நாம் தேடித் தேடி அலைவோம். அப்படி தேடித்தேடி அலைந்து காத்திருந்து கிடைத்த ஒன்றை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறோமா என்றால்... இல்லை. ஏனெனில் ஒவ்வொரு உறவிற்கும் ஒரு வரையறையை கொடுத்த தந்து கொண்டு அந்த வரையறைக்குள் அந்த உறவு இருக்கிறதா அவர்களது போல நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் ஆராய்ந்து கொண்டே இருக்கிறோம்.

எதுவாக இருந்தால் என்ன?. உறவு... உறவுதான்!. அதை நாம் முதலில் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

ரோஜாபூவிற்கென்று லரையறை எதுவும் இருக்கிறதா…?. இதுதான் அதன் நிறம்… இதுதான் அதன் மணம்… இதுதான் அதன் அளவு என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா? அது கொடி வகையா செடி வகையா என்று கூட தெரியாது. அத்தனை வகைகள் இருக்கின்றன. ஆனால் அவை அத்தனையையும் ரோஜா என்றுதானே எடுத்துக் கொள்கிறோம்.

அதுபோலத்தான் ஒவ்வொரு உறவிற்கும் அன்பும் அக்கரையும் இருந்தால் போதும். அது நீடித்து நலமுடன் இருந்து நம்மையும் வாழ வைக்கும். காதலுக்கு இது மிகவும் பொருந்தும். நாம் நேசிப்பவரிடம் உண்மையான அன்பு கொள்வதும் அவர் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று அக்கரை கொள்வதும்தான் அந்த காதலை சிறப்பிக்கும்.

இது ஒரு காதல் கதைதான். கதாநாயகன் ஹிதேஷிற்கும் கதாநாயகி பிரமோதாவவிற்கும் இடையேயான காதல்… அந்தப் பாதை.. அதை அவர்கள் கடந்து வந்த விதம்… ஆகியவற்றைப் பற்றிய கதைதான். பிணை வேண்டும் என்றால் அடிமையை தேடும் என்றும் கொள்ளலாம்.. அடிமையாக வேண்டும் என்றும் கொள்ளலாம்.. யார் யாராகிறார்கள் என்றூ கதையை படித்து தெரிந்து கொள்வோமா?

 

 

பகுதி-1

வில்லேந்தல்… மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில்   இருக்கும் ஒரு சிறிய கிராமம். வயலும் வயல் சார்ந்த இடமாக அது ஒரு அழகிய கிராமம். அங்கு பழமையான ஒரு கோவிலும் சுற்றி நிறைய சிறிய மச்சு வீடுகளும் இருந்தாலும்…  பளிச்சென்று கண்ணில் பட்டது  ஒரு அழகிய ஜமீன் பங்களா.

பெரிய இரும்பு கேட்… அதை கடந்தால் பூந்தோட்டம்….ம்… ரோஜா தோட்டம்… அதற்கு வலது பக்கத்தில் மூன்றடி உயர கிருஷ்ணர் சிலை… கழுத்தில் ரோஜா பூமாலை ஆட  நின்றார். அவ்விடத்தில துளசி செடிகள் அவரை சுற்றி பாதுகாப்பு வளையமிட்டு நின்றன. மினி பிருந்தாவனம்.. அதை கடந்தால் வெளிர் பச்சை நிறம் பூசி பளபளத்தது நாட்டாமை வீரய்யன் தாத்தா வீடு.

எப்போதும் அமைதியாக இருக்கும் அந்த இடம் இன்று பேச்சு குரல்களால் கலவரப்பட்டு கொண்டிருந்தது. அங்கே என்ன நடக்கிறது?

"இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்"  என்று ப்ரமோதா  கிறீச்சிட்டாள்.. அவள்தான் வீரய்யன் தாத்தாவின் பேத்தி.

"எனக்கும் இதுல சம்மதம் இல்லை. ஆனால் இப்போதைக்கு எனக்கு வேற வழி இல்லை. பாப்பா. நம்மளோட நிலைமையை யோசித்துப் பார்க்கணும்"

"தாத்தா நமக்கு வயல் இருக்கு. அதுல விளைச்சலும் நல்லா வருது. தென்னந்தோப்பு, மாந்தோப்பு…  இதிலிருந்தும் அப்பப்ப வருமானம் வருது. அப்புறம்  பண பிரச்சனைனு ஏன் சொல்றீங்க?'

" நீ முக்கியமான ஒரு விஷயத்தை மறந்துவிட்ட. இந்த வருஷம் தென்னந்தோப்புல சரியா காய் விடலை. வருமானம் வரலை"

" சரிதான். ஆனால்  நாம பேங்க்ல கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கோம்ல. அதை  யூஸ் பண்ணிக்கலாம்ல"

" இல்லை. அதைத் தொடக்கூடாது பாப்பா. அதை உன்னுடைய கனவை நிறைவேற்ற நான் சேர்த்துட்டு இருக்கேன்."

" அதுக்கு என்ன இப்ப அவசரம்?"

" நான் உயிரோட இருக்கிறப்பவே  நீ விரும்பிய விஷயத்தை செய்யணும்னு நினைக்கிறேன். அதனால தான் அந்த பணத்தை சேர்த்துட்டு  இருக்கேன்".

"அதுக்காக இப்படி செய்யணுமா?.  எனக்கு இதில் இஷ்டமே இல்லை தாத்தா"

" இங்கே பாரு நாம கிராமத்தில் இருக்கோம். இதுபோல வாய்ப்பு எப்போதாவதுதான் வரும். அதை பயன்படுத்திக் கொள்ளணும்."

"வரவு செலவு எல்லாம்  சரியாதான் இருக்கு. இப்ப என்ன திடீர்னு பணத்தேவை என்று சொல்றீங்க."

"ஊர் திருவிழா வருது. கோயில் கும்பாபிஷேகம் நடக்க போகுது. உனக்கே தெரியும்... பெரிய மாமா, சின்னமாமா, பெரியம்மா எல்லோரும் வருவாங்க. மொத்தம் எத்தனை பேரு இங்க வருவாங்க தெரியுமா?"

"வருஷா வருஷம் வர்றதுதானே தாத்தா. பெரிய மாமா வீட்டுல நாலு பேரு... சின்ன மாமா வீட்டில் மூணு பேரு... பெரியம்மா வீட்டில் இருந்து மூணு பேரு வருவாங்க. மொத்தம் பத்து பேரு வருவாங்க"

"அவங்க இங்கே பதினஞ்சு நாள் தங்குவாங்க. அப்புறம் அக்கம் பக்கத்துல இருந்து…  பக்கத்து ஊரில் இருந்துணு  சொந்தக்காரங்க வருவாங்க.  எப்படியும் அஞ்சு நாள் இங்கு தங்குவாங்க. பெரிய விருந்து தயார் பண்ணணும். அஞ்சு  நாளைக்கு எவ்வளவு செலவாகும்?"

"எப்பவுமே நீங்க தானே செலவு பண்ணிட்டு இருக்கீங்க.  இந்த வருஷம் மாமாவை   பார்க்க  சொல்லலாமே. ஏன்னா அது நம்ம குடும்பத்து விசேஷம்.  எல்லாரும்  பொறுப்புகளை ஏற்றுக் கொண்டால் நல்லதுதானே."

"அது சரி இல்ல பாப்பா. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் நான்தான் எல்லா செலவையும் செய்வேன். என் பிள்ளைகளை அதற்கு அனுமதிக்க மாட்டேன்"

" பெரிய கெத்து" உதட்டைப் பிதுக்கினாள்.

" ஆமா…  மீசைக்கார பண்ணையார்னா சும்மாவா?"

" அதுக்காக நம்ம வீடு.  ஜமீன் பங்களா இல்லையா.  ரொம்ப கலையம்சத்தோட இருக்கு. பாரம்பரியமான நிறைய அலங்காரங்கள் இருக்கிறது. இதை போய் சினிமாகாரங்களுக்கு வாடகைக்கு விட நான் ஒத்துக்க மாட்டேன்"

"அடடா இந்த பொண்ணோட என்ன ஒரே பிரச்சினையா இருக்குது?. அவங்க நடிக்க ஒத்துகிட்டா நமக்கு கூடுதல் வருமானம் வரும். அது இப்போதைய தேவைக்கு உதவியா இருக்கும்னு நினைக்கிறேன் . "என்று தாத்தா அருகில் நின்ற சீனுவிடம் புலம்பினார். சீனு தாத்தாவின் உதவியாளர். ஐம்பதை நெருங்கியவர்.