சுழலும் மர்மம் - சுபஸ்ரீ முரளி
முன்னுரை
சராசரி இளைஞன் வினய்,
பிரபல நடிகை யாமினி மற்றும்
ஒரு திருநங்கை மஹி.
வெவ்வேறு இடத்தில் பிறந்து வளர்ந்த இம்மூவரையும் ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்கிறது. ஏன்? எதற்கு? என்பதே கதை.
இந்த கதையில் வரும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.
நன்றி
சுபஸ்ரீ முரளி
**********
1
வருடம் 1898
தஞ்சாவூரை ஒட்டி இருந்தது அந்த கிராமம். பச்சை வயல்களும், தோப்புகளும் காண்பதற்கு . . பூமி அன்னை பச்சை நிற சேலை உடுத்தியது போல காட்சியளித்தது. மிக விசித்திரமான நிகழ்வுகளை தன்னுள் அடக்கி . . மலர்களையும் மண்வாசனையோடு அள்ளி தெளித்தது..
“செண்பகா” என அழைத்தார் சிவன் கோயில் பூசாரி சிவநேசன்.
“வந்துட்டேன் தாத்தா” என ஓடி வந்தாள் அவர் பேத்தி.
“நான் கோயிலுக்கு போயிட்டு வரேன் . .” சுற்றும் முற்றும் பார்த்தவர் “ஆமா சென்னி எங்க?” என்றார்.
“தாத்தா இங்கயேதான் இருக்கேன்” எனக் குறும்பு புன்னகையுடன் வந்தாள் அவரது மற்றொரு பேத்தி சென்னி.
பத்து வயது சென்னி மற்றும் அவள் அக்கா பதினான்கு வயது செண்பகவள்ளி. இவர்களோடு தாத்தா சிவநேசன். இதுதான் இவர்கள் குடும்பம்.
“நான் கோயிலுக்கு போயிட்டு வரேன்மா நீங்க இரண்டு பேரும் ஜாக்கிரதையா இருங்க..“ என்றார் பாசம் ததும்பிய குரலில். அக்காவும் தங்கையும் தலையசைத்து “சரி தாத்தா” என்றனர். சென்னி குறும்பு புன்னகையுடன் தினமும் இதைச் சொல்லாமல் கிளம்ப மாட்டார் தாத்தா என நினைத்துக் கொண்டாள். சென்னி வளர்க்கும் பாசமிகு குதிரை ஐராவதியும் அதை ஆமோதிப்பதுப் போல் கணைத்தது.
பாசம் அன்பு இந்த பெயர்களைத் தாங்கிக் கொண்டு இருக்கும் அழகான உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதன் ஆழத்தை எந்த கருவியாலும் கண்டுபிடிக்க இயலாது.
சென்னை வருடம் 2012
கடிகாரத்தின் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் நீண்ட நாட்களாக பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்ததை போல் கட்டி அணைத்து இரவு மணி பணிரெண்டு எனக் காட்டியது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வினையை ஒரு கை உலுக்கியது. அலறியடித்து எழுந்தான். கண்முழித்து பார்த்தபோது கும்மிருட்டும் நிசப்தமும் கூட்டணியில் இருந்தது. “ச்சே கனவா“ எனப் படுத்தான். மீண்டும் அந்த கை அவனை உலுக்கியது. அவனுக்கு தூக்கிவாரி போட்டது.
தன் அறைக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்க வெளி வந்தான். ஒரு உருவம் ஹாலில் தெரிந்தது மெல்ல நகர்ந்து. நைட்லேம்ப் வெளிச்சத்தில் அதன் முகம் கோரமாக வெள்ளையாகவும் உதட்டில் ரத்தம் வழியப் படுபயங்கரமாக இருக்க வினய்க்கு மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது. அந்த உருவம் அவனருகில் மெல்ல நகர்ந்தது. அவன் தன் கண்களை இருக்க மூடிக் கொண்டான். இதுவே தன் வாழ்க்கையின் கடைசி நொடி என எண்ணியவனை “ஏண்டா இப்படி பேய் மாதிரி நிக்கற?” என்ற பழக்கப்பட்ட குரல் அதட்டியது. கண்ணை மெல்லத் திறந்து பார்க்க எதிரில் அவன் தங்கை ரம்யா நின்றிருந்தாள். ஹால் லைட்டை போட்டபடி.
“பிசாசு நீதானா …மூஞ்சில எதுக்குடி பெயிண்ட் அடிச்சிருக்க?” என எரிச்சலுடனும் கஷ்டப்பட்டு பயத்தை வெளிக்காட்டாமலும் கேட்டான்.
“டேய் இது கோல்ட் பேஷியல்டா முண்டம்”
“உதட்டுல ரத்தம் மாதிரி….”
“பயத்தை பாரு ..இது லிப்ஸ் அழகா இருக்க மாதுளம் பழத்தை எடுத்து …” என்றவளை
“போதும் போதும் நிறுத்து … இந்த டிங்கரிங் வேலைய காலையில செய்யேன்டி பேய் மாதிரி நடு ராத்திரியில அலையற”
“காலேஜ்க்கு எனக்குப் பதில் நீ போரையா? நீ தான் பேய் .. பூதம் ” எனப் பதிலுக்கு திட்டினாள்
“ஹேப்பி பர்த்டே டூ யூ“ என வினையோட நண்பர்கள் தீபக் மற்றும் நரேன் அவன் அறையிலிருந்து வெளி வந்தனர். தன் வீட்டுக்குள்ள இந்த நேரத்தில் இவர்கள் எப்படி என்பது போலப் புருவம் உயர்த்தி ஆச்சரியமாக அவர்களைப் பார்த்தான். அதைப் புரிந்துக் கொண்ட தீபக் “உனக்கு பர்த் டே விஷ் பண்ணிட்டு கிளம்பலானுதான் ரொம்ப நேரமா உன்ன நரேன்