TEN CONTEST 2019 - 20 - Entry # 01
Story Name - Thaaikkinaru
Author Name - Archana Nithyanantham
Debut writer - No
தாய்க்கிணறு - அர்ச்சனா நித்தியானந்தம்
தனது ஜமீன் பரம்பரைக் கோட்டையையும், உறவுகளையும் தேடி வருடங்கள் பல கழித்து ஊருக்கு விஜயம் செய்பவனை, எதிர்பாரா நிகழ்வுகள் அவனை அவ்வூரை விட்டுச்செல்ல முடியாதபடி கட்டிப்போடுகின்றன. அவன் அவ்வூருக்கு வரவில்லை, தனது கடமைகளை ஈடேற்ற வரவழைக்கப்பட்டான் என்று உணர்ந்து, தன்னைச் சூழ்ந்த மர்மங்களிலிருந்து தன்னையும், தனது மனைவியையும் எவ்வாறு விடுவித்துக்கொள்கிறான் என்பதே இக்கதை.
பகுதி 1
“பாரி, இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? என்னால முடியல… கிராமம்னா ஏதோ கொஞ்சம் வயல்வெளி, தோப்பு, சின்னதா ஒரு ஆறு, ஒரு ரயில்வே ஸ்டேஷன், அழைச்சுட்டு போக ஒரு மாட்டுவண்டி இருக்கும்னு பார்த்தா ஆளில்லாத பொட்டல்காடு, அதைத் தாண்டினா ஒரு பாழடைஞ்ச பில்டிங், அடுத்து ஒரு தோப்பு… தோப்பு இல்ல, தோப்பு மாதிரி செடியும், கொடியுமா சின்ன அமேசான் காடு, நடுவுல இதோ இந்தக் கிணறு... என்னய்யா இது?”
“என்னை கேட்டா?! நானும் இப்ப தான இந்த ஊருக்கு வரேன்…”
“என்னப்பா இப்படி சொல்ற?”
“எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் திரும்பத் திரும்ப இதையே கேட்கற?”
“ஏன்னா நாம நடக்க ஆரம்பிச்சு ஒன்றரை மணி நேரம் ஆச்சு. எனக்கு கால் பயங்கரமா வலிக்குது. இதுக்கு மேல என்னால நடக்க முடியாது. கொஞ்ச நேரம் இந்தக் கிணத்து மேல உட்கார்ந்திருந்துட்டு வரேன்” என்றவள், கிணற்றின் அருகே சென்று உள்ளே நோக்கினாள். ‘தண்ணி இருக்கா இல்லையா?! இருந்திருந்தாத்தான் எட்டாவது அதிசயம் ஆயிருக்குமே…’ என்று எண்ணிக்கொண்டாள். அவளது கண்கள் வியப்போடு சுற்றத்தை ஆராய்ந்தது. நெடுநெடுவென வளர்ந்திருந்த தென்னை மரங்கள் பராமரிப்பின்றி கிடந்தன. கிணற்றை சுற்றி செடிகளும், புதர்களும் மண்டிக்கிடந்தன. தூரத்தில் தெரிந்த பாழடைந்த கட்டிடம், தீக்கு இரையாகி உபயோகமற்று போயுள்ளதை சொல்லாமல் சொன்னது அதன் உடைந்த ஜன்னல்களும், கருப்பு பூசிய சுவர்களும், கருப்பினை துடைக்க கைகள் நீட்டியபடி நீண்டு செல்லும் கொடிகளும். ஆச்சர்யங்கள் மெல்ல மடிய, அச்சங்கள் துளிர்க்கத் தொடங்கின. அந்தி நேரம், ஆர்பாட்டமின்றி மெல்ல கவ்வும் இருட்டில், ஆளரவம் இல்லாத தோப்பின் நடுவில், ‘ஊருக்குள் எப்படி செல்வது?!’ என முழித்துக்கொண்டு நிற்கும் பாரியைக் கண்டதும் தான் வாழ்விலே பெரும்பிழை இழைத்துவிட்டதாக எண்ணியவள், அதற்கு மேல் அக்கட்டிடத்தைக் காண சகியாமல், வேறு புறம் நோக்கியபடி கிணற்றின் மேல் அமர்ந்துகொண்டாள். ‘ஸ்ஸ்ஸ்…’ எனும் பேரொலியோடு வீசிய இளந்தென்றல் குளுமை கூட்டினாலும், அதனை அனுபவிக்கும் நிலையில் அவள் இல்லை.
“என்ன பாரி, என்ன யோசிக்கற? அடுத்து எப்படி போகப்போறோம்?”
“யாருக்குத் தெரியும்?! கால் போன போக்குல போகவேண்டியதுதான்…”
“நான் ஒன்னு சொல்லட்டா?”
“சொல்லு”
“வந்த வழியே திரும்பிப் போய், டிரெயினோ பஸ்ஸோ பிடிச்சு ஊருக்கு போயிடலாம், பாரி!!”
“நீ வேணும்னா திரும்பிப்போ. நான் ஊருக்குள்ள போகப்போறேன்”
“என்னது, நான் தனியா திரும்பிப்போகவா?”
அவன் கூறியதைக் கற்பனை செய்தவளின் தொண்டைக்குழிக்குள், ஒரு ‘பய’ உருண்டை உருண்டு வந்து அடைத்துக்கொண்டது.
“ஆமா…” என்றான் பாரி, அவளது நிலையுணராமல்.
“கொஞ்சம் பய… பயமா இருக்கு…”
“என்ன பயம்? நீதான் ப்ளாக் பெல்ட் சாம்பியன் ஆச்சே?!”
“சாம்பியன் தான்... ஆனா, என் கராத்தே வித்தையெல்லாம் மனுசங்க கிட்ட தான் காட்ட முடியும், பேய் கிட்ட எப்படி காட்ட?”
“என்னது பேயா? ஏற்கனவே இந்த இடம் ஒரு மாதிரி இருக்குனு நானே குழப்பத்துல இருக்கேன். எனக்கு புத்தி தான் ஸ்ட்ராங்கு, பாடி ஸ்ட்ராங்கு இல்ல. அதனால தான் கராத்தே மாஸ்டர் உன்னை கூட்டிட்டு வந்தேன். நீயே இப்படி பயந்தா நான் என்ன செய்ய?”
‘இது வெறும் புகழ்ச்சியா, இல்லை வஞ்சப்புகழ்ச்சியா?!’ என்று அவனை ஊடுருவி நோக்கியவள்,
“நீதான் ஒரு அம்மாவோட ஆவி பத்தி சொன்னியே… அதையே யோசிச்சுட்டு வந்ததால…” என்றவளுக்கு ஏதோ நினைவில் பட, வெடுக்கென கிணற்றிலிருந்து எழுந்தவள், “அந்த அம்மா விழுந்து இறந்து போன கிணறு இதுவா இருக்குமோ?” என்றபடியே அவனருகே வந்து, அவன் கையினைப் பற்றிக்கொண்டாள்.
சற்றே யோசித்தவன்,
“இந்தக் கிணறா இருக்க வாய்ப்பில்லை. அது தெய்வமா வழிபடற கிணறு. அத இப்படி பாழடைஞ்சு போக விட்டிருக்கமாட்டாங்க. அந்தக் கிணற கண்டுபிடிச்சுட்டா ஊருக்குள்ள போயிடலாம்” என்றான் தீர்க்கமாக.
“வா போகலாம்” என்று அவன் அழைக்க,
“கால் ரொம்ப வலிக்குது. அஞ்சு நிமிஷம் உட்கார்ந்துட்டு போகலாமே?!” என்று அவள் தலைசாய்த்து குழந்தையென வினவ, மறுத்திட அவனுக்கு மனம்