Chillzee KiMo Books - இதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ முரளி : Idhaya siraiyil ayul kaithi - Subhashree Murali

  இதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ முரளி : Idhaya siraiyil ayul kaithi - Subhashree Murali
 

சதி கும்பலிடம் மாட்டியிருக்கும் தன் அக்காவை மீட்கும் தங்கை.

 

இதயச் சிறையில் ஆயுள் கைதி 1.

  

கதிரவன் தன் வேலை முடித்துத் துயில் கொள்ள சென்றான். மாலையும் இரவும் சங்கமித்துக் கொஞ்சி மகிழத் தொடங்கிய நேரமது. இருளா இல்லை இருளாத வேளையா? எனப் பறவைகள் தங்கள் சகாக்களிடம் வினவிக் கொண்டிருந்தன. 

  

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்த அந்த பிரமாண்ட அரங்கத்தில் செந்தமிழ் தன் கம்பீரமும் வீரமும் பொருமையும் தாங்கி அனைவரையும் தன் வசம் ஆக்கி கொண்டிருந்தது. 

  

தத்தம் நாட்டைவிட்டுத் தொலை தூரம் சென்றாலும் தங்கள் மொழி பண்பாடு கலாசாரம் போன்றவற்றை மறந்துவிடாத மக்கள் அரங்கம் முழுவதும் பரவசத்தில் ஆழ்ந்திருந்தனர். தமிழ்ப் பற்றுடைய வெளிநாட்டவரும் அங்கு அடக்கம்.

  

சிருங்காரத்துடன் சிறப்பாய் சிலப்பதிகாரம் பரத நாட்டிய வடிவில் மேடையில் அரங்கேறியது.

  

கண்ணகி கோவலன்த் திருமணம் நடக்கிறது. கோவலன் கண்ணகியின் அழகைப் பாராட்டி மகிழ்கிறான் கண்ணகி மயங்குகிறாள் நாணுகிறாள்.

  

"மாசறு பொன்னே வலம்புரி முத்தே!

  

காசறு விரையே கரும்பே! தேனே!

  

அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!

  

பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

  

மலையிடைப் பிறவா மணியே என்கோ

  

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ!

  

யாழிடைப் பிறவா இசையே என்கோ!'

  

புயல் காற்றென இல்லறத்தில் தன் கணவன் வேறொரு பெண்ணோடு உறவு கொண்டான் என்பதை அறிந்து துயரப்படுகிறாள். சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் தன் கணவன் தன்னோடு இணைய மகிழ்கிறாள்.

  

புதிய வாழ்க்கை தொடங்க வேறு ஊருக்குச் செல்கின்றனர். அங்கே தவறிழைக்காத கணவன் கொல்லப்பட்டதை அறிந்து பொங்கி எழுகிறாள். இப்படியாகக் கண்ணகியாக நடனமாடிய சாருலதா தன் அபிநயத்தால் அரங்கைத் தன்வசப்படுத்தினாள்.

  

கண்ணகி தன் கையிலிருந்த சிலம்பைக் கீழே போட்டு உடைத்தாள். சிலம்பு சிறையிருந்த மாணிக்க பரல்கள் விடுதலைப் பெற்ற மகிழ்ச்சியில் நாற்புறமும் தெறித்தன.

  

இதைக் கண்ட மதுரை அரசன் பாண்டிய நெடுஞ்செழியன் அதிர்ந்து தளர்ந்து

  

“யானோ அரசன்? யானே கள்வன்”

  

எனத் தவறான நீதியை வழங்கியமைக்காக மனமுடைந்து உயிர் துறக்கிறான். அவன் மனைவியும் அரசியுமான கோப்பெருந்தேவியும் கணவனோடு தன் இன்னுயிரைத் தியாகம் செய்கிறாள்.