Chillzee KiMo Books - மாறிப்போன மாப்பிள்ளை - சசிரேகா : Maari pona mappillai - Sasirekha

 

மாறிப்போன மாப்பிள்ளை - சசிரேகா : Maari pona mappillai - Sasirekha
 

தாய் தேர்வு செய்தவன் காவலானாகவும் தந்தை தேர்வு செய்தவன் மணமகனாகவும் மாறிப் போய் வந்ததில் நாயகியும் நாயகனை விரும்பினாள் ஆனால் நாயகன் வெறும் காவலன் என்ற உண்மை தெரிந்ததும் அவளின் முடிவு என்ன நாயகனையே காவலனாகவும் காதலனாகவும் தேர்வு செய்வாளா அல்லது பெற்றோரின் விருப்பத்திற்கு தன் காதலை இழப்பாளா இதுதான் இக்கதையின் கருவாகும்.

 



 

 

 

பாகம் 1.

  

ஊட்டி.

  

காலை வேளையில் கடிகாரம் நேரம் தவறாமல் சரியாக 6 மணிக்கே அலாரத்தை ஒலிக்க அந்த சப்தத்தில் தனது உறக்கத்தை கலைத்து கண்கள் திறந்தாள் ஜீவிதா. பஞ்சு மெத்தையில் நோகாமல் படுத்துறங்கி எழுந்ததில் களைப்பு மொத்தம் நீங்கிவிட்டது. கொட்டாவி விட்டபடியே கடிகாரத்தின் அலாரத்தை நிப்பாட்டிவிட்டு எதிரில் இருந்த சுவற்றைப் பார்த்தாள். அதில் டைம்டேபிள் வரையப்பட்டிருந்தது. அவள்தான் அதை வரைந்தாள். அதில் எந்த தேதியில் தாய் சுபாஷினியுடன் இருக்க வேண்டும், எந்தெந்த தேதியில் தனது தந்தையுடன் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அவளுக்கு என சில தேதிகளும் குறிப்பிடபட்டிருக்க அதைக்கண்டபடியே எழுந்து அதன் அருகில் சென்று நின்றாள்,

  

”இன்னிக்கு என்ன தேதி ம்ம் ஓ 10 ஆஆ ஓகே பத்தாம்தேதி நாம எந்த வீட்ல இருக்கனும்” என டைம்டேபிளில் தனது வலதுகை விரலை வைத்து தூக்க கலக்கத்தில் பார்வையிட்டாள், அதில் கோவை என இருக்கவே,

  

”ம் கோவையா அப்ப அம்மாகிட்ட போகனுமா ரைட்டு” என சொல்லியவள் அப்படியே கைகளை தூக்கி சோம்பல் முறித்துவிட்டு அக்கம் பக்கம் நோட்டமிட்டு தனது செல்போனை தேடிப்பிடித்துப் பார்த்தாள் அதில் ஏற்கனவே அவளது தாய் சுபாஷினியின் மெசேஜ் வந்திருந்தது, அந்த மெசேஜ் கூட என்னவென பார்க்க விரும்பவில்லை, அதை உதாசீனப்படுத்தியவள் வேறு ஏதாவது தனக்கு மெசேஜ் வந்துள்ளதா என பார்வையிட்டாள் அப்படி ஏதும் வராமல் போகவே ஏமாற்றத்துடன் செல்போனை சரியாக படுக்கையில் விழுமாறு எறிந்துவிட்டு குளிக்கச் சென்றாள்.

  

அவள் சென்ற 5 நிமிடத்திற்கு எல்லாம் அவளின் செல்போன் அலறியது, அவளின் தாய்தான் அழைத்திருக்கிறார். ஆனால் ஜீவிதாவோ அதை கண்டுக்கொள்ளாமல் நிம்மதியாக குளித்து முடித்துவிட்டு வந்தாள், வந்தபின்பும் செல்போன் அலறியது, என்னவென செல்போனை தொடமலே பார்த்தாள் அதில் ஸ்கீரினில் அவளின் தாயின் படம் வரவும் அவளுக்கு சலிப்பே வந்தது. உச் கொட்டிவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டவள் ஒரு ட்ராவல் பேக்கில் ஒரு வாரத்திற்கு தேவையான உடைகளை அடுக்கலானாள். அதே நேரம் அவளின் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்கவும் புரிந்துக் கொண்டாள்,

  

”வரேன்” என சொல்லிவிட்டு தனது ட்ராவல் பேக்கை தள்ளிக் கொண்டே கதவைத் திறந்தாள், மறுபக்கம் சமையல்காரி அன்னம் இருக்க அவளின் கையில் ஒரு ட்ரேயில் ஜீவிதா குடிப்பதற்கு ஜூஸ் கூடவே சாப்பிட பிரட் ஆம்லெட் கூடவே செல்போனும் இருந்தது. ஜீவிதாவுக்கு புரிந்துவிட்டது, தான் போன் எடுத்து பேசாத காரணத்தால் தன் தாய் சமையல்காரிக்கு போன் செய்துள்ளாள் என்று அதனால் அதை மட்டும் தொடாமல் ஜூஸும் பிரெட் ஆம்லெட்டும் சாப்பிட்டு முடித்துவிட்டு நகர சமையல்காரியோ,

  

”சின்னம்மா” என தயக்கத்துடன் இழுத்து அழைக்க ஜீவிதாவோ கையால் சைகை செய்து,