அறிவழகன் ஒரு கோடீஸ்வரன். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், உலகமெங்கும் கோலோச்சும் ஆக்ரோ-ஃபார்ம் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவன். காதல், கல்யாணம் என்பதில் எல்லாம் அவனுக்கு விருப்பமும் இல்லை, நேரமும் இல்லை. ஆனால், தான்யா’வை சந்தித்ததும் அவன் மனம் நிலைத் தடுமாறுகிறது. பணக்கார குடும்பத்தை சேர்ந்த தான்யா அழகி என்றாலும் அறிவழகன் கண்ணுக்கு செல்லமாக வளர்ந்து ‘குட்டிச்சுவராகி’ப் போன பெண்ணாக தெரிகிறாள். ஆனாலும் அவனின் மனம் அவளுக்காக ஆசைப்படுகிறது. தான்யாவின் அழகும், நேரடியான பேச்சும், இனிய புன்னகையும் அவனை அவளிடம் மயங்க வைக்கிறது. மனம் என்ற ஒன்றை பற்றி யோசிக்காமல் இருக்கும் அறிவழகனால் தான்யாவின் மனதை வெல்ல முடியுமா? தான்யா அதற்கு இடம் கொடுப்பாளா??
தான்யா தன் சொந்த பிரச்சனைகளில் மூழ்கிப் போயிருப்பவள். வாழ்வில் ஏற்பட்ட துயரத்தால் இனி கல்யாணம் என்ற உறவு வேண்டவே வேண்டாம் என்ற முடிவுடன் அமைதியான வாழ்வை வாழ முயற்சி செய்துக் கொண்டிருப்பவள். அறிவழகனை சந்தித்ததும் அவள் வேண்டாம் என்று மறந்திருந்த மெல்லிய உணர்வுகள் அவளின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் அவளுள் மலர்கின்றது. எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனே இருக்கும் தான்யா அறிவழகனின் வசீகரத்தில் ஈர்க்கப்படுவாளா? அவன் சொல்லாமல் சொல்லும் “ஹாப்பிலி எவர் ஆஃப்ட்டர்” வாழ்க்கை சாத்தியமானது தானா??