ஒரு சிறு கதை.
காணி நிலம் வேண்டும்.
அரசாட்சி மாறியது, நெடுஞ்சாலை போடுவதற்காக அரசு எடுத்துக் கொண்ட நிலங்கள் அனைத்தும் அந்தந்த உரிமையாளரிடம் திருப்பித் தரப்படுவதாக தகவல் ஊரெங்கும் பரவ துள்ளிக் கொண்டு எழுந்தார் 70 வயதான அஞ்சப்பன். அவரின் நிலம் கூட திரும்பி வந்துவிடும் என்ற மகிழ்ச்சியில் அதற்காக காத்திருந்தார், நாட்கள் சென்றதே ஒழிய பெரிதாக மாற்றம் வரவில்லை. என்ன ஏது என விசாரிக்கலானார், அவரவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களை கொட்டினார்களே தவிர வழிகாட்ட யாரும் முன்வரவில்லை, அவரை போலவே நிலத்தை இழந்தவர்கள் புலம்பினார்களே தவிர என்ன செய்வதென தெரியவில்லை. அதற்காக அஞ்சப்பன் அமைதியாகவில்லை, விடாமுயற்சியுடன் களத்தில் இறங்கினார் அதிகாரிகளை கண்டு தனது கோரிக்கையை முன் வைத்தார்,
அவரின் நிலம் ஒன்றும் பெரிய அளவு இல்லைதான் ஆனாலும் அந்த சின்ன நிலத்திலேயே விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தியவர், இன்று அவரின் பிள்ளைகள் பெரிய இடங்களில் வேலை செய்துக் கொண்டு குடும்பம் குழந்தைகளுடன் இருக்கின்றனர், தந்தையை தங்களிடம் வந்துவிடுமாறு கூறியும் ஏனோ அஞ்சப்பன் தன் ஊரை விட்டு வர சம்மதிக்கவில்லை ஆனால், அஞ்சப்பனின் மனைவிக்கு பிள்ளை பாசம் கண் முன்னே வர அவர் கணவரை விட்டு மகன்களிடம் சென்றுவிட்டார். அதற்காக அஞ்சப்பன் தன் மனைவியை கோபிக்கவில்லை, வழக்கமாக தன் வீடு உண்டு தன் நிலம் உண்டு என விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்,
ஆனால் ரோடை அகலப்படுத்தும் பணி எப்போது நடைமுறைக்கு வந்ததோ அப்போதே அவரின் நிலத்திற்கு ஆபத்தும் வந்தது அவரது நிலம் மட்டும் அல்ல மற்றவர்களின் நிலமும் கையகப்படுத்தப்பட்டது ஆனால், மற்றவர்களை விட அதிகமாக கஷ்டப்பட்டது, கவலையடைந்தது அஞ்சப்பன்தான், அனைத்து சொந்தங்களையும் விட்டவருக்கு அந்த விவசாய பூமிதான் எல்லாமே, அதுவே அவரின் கையை விட்டு போகவும் உயிரே போனது போல துடித்துப் போனார்.
மற்றவர்கள் அவ்வளவுதான் தங்கள் நிலம் இனி திரும்பாது என்ற நம்பிக்கையில் வேறு வேறு வேலைகளைப் பார்த்து பிழைக்கத் தொடங்கினார்கள் ஆனால், பிறந்தது முதல் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த அஞ்சப்பனுக்கு பிழைப்புக்காக சட்டென வேறு வேலையை தேடிக் கொள்ள மனம் வரவில்லை, சாகும் போது கூட தான் ஒரு விவசாயியாகவே இறக்க வேண்டும், அந்த ஆசையை பற்றி அந்த ஊரே அறியும் அவரின் பிடிவாதத்தைக் கண்டு சிலர் எள்ளி நகையாடினார்கள், சிலரோ வருத்தப்பட்டார்கள் ஏதோ அவரவர்களால் முடிந்தது அவ்வளவுதானே அதையாவது செய்தார்கள்.