சிறுகதை - குறுக்கு வழிகள் - சசிரேகா,
”வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும், எந்தவொரு முன் அனுபவம் தேவையில்லை, கல்வித்தகுதி கூட தேவையில்லை, முன்பணம் அளிக்கவேண்டிய அவசியமே இல்லை, இந்த கேம் ஆப் மூலம் உங்களின் கனவு நினைவாகும், இந்த ஆப் டவுன்லோட் செய்து பணத்தை சம்பாதிக்கலாம்” என்ற விளம்பரத்தை பார்த்து ஆர்வமாகிப் போன சூர்யாவோ உடனே அந்த ஆப்பை டவுன்லோடு செய்தான், எளிமையான முறையில் சிறிதும் சிரமப்படாமல் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் அவனின் அறிவை மழுங்கடித்தது. ஆர்வமாக ஆப்பை டவுன்லோடு செய்ததோடு அதில் இருந்த விளையாட்டை விளையாடினான், முதல் 3 முறை ஜெயித்தான், அடுத்தடுத்து விளையாட்டில் தோல்வியே மிஞ்சியது, இதில் அவன் வெற்றி பெற்ற பணம் கரையவும் அதிர்ந்தான், அடுத்த ஆட்டம் விளையாட வேண்டுமென்றால் பணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வரவும் குழம்பினான் ,
”என்ன செய்யலாம் விளையாட்டு நல்லாதான் இருக்கு, நம்மால ஜெயிக்க முடியும் ஆனாலும் குழப்பமா இருக்கே” என குழம்பி தவித்து சில நிமிடங்கள் வீணாக்கியவனின் எண்ணம் திடமாக இருந்தது கண்டிப்பாக தனக்கு வெற்றி கிட்டும் என்ற தன்னம்பிக்கையில் தனது தந்தையின் பேங்க் அக்கவுண்ட் நெம்பர் மூலமாக எப்படியோ அவர்கள் சொன்ன பணத்தை செலுத்தி மீண்டும் விளையாடத் தொடங்கினான், முதல் முறையே தோல்வி அதற்காக கலங்கிவில்லை, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான். வெற்றி தோல்வி வெற்றி தோல்வி என மாறி மாறி வந்தது, அதற்காகவே தந்தையின் பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி விடாப்பிடியாக விளையாடினான். முடிவு தந்தையின் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் கரையத் தொடங்கியது, அதை ஆரம்பித்திலேயே கவனிக்காத அவனின் தந்தையோ அனைத்தும் கைமீறி போன பின்பு கவனித்து அதிர்ந்தார். இது குறித்து மகனிடம் கேள்வி கேட்க அவனோ தோல்வியினால் வந்த பண இழப்பை பற்றிக் கூறாமல் வெற்றியால் வந்த பணம் குறித்து உற்சாகமாக பேசினான் அவனின் பேச்சு செயல் மாறிவிட்டதை உணர்ந்த அவனின் தந்தை சட்டென ஒரு முடிவுக்கு வந்தார்,
”போதும் விளையாடினது நீ ஜெயிச்சி பணம் சம்பாதிச்சது கொஞ்சம் ஆனா, நீ தோத்து பணத்தை இழந்தது அதிகம், இனிமேல என் அக்கவுண்ட்ல இருந்து ஒரு பைசா கூட நீ எடுக்க கூடாது”,
”அப்பா நான் இப்ப இப்பதான் இந்த விளையாட்டை நல்லா புரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டேன், இனி பாருங்க பணம் நஷ்டமாகாது, நான் வரிசையா ஜெயிச்சி நிறைய பணத்தை சம்பாதிச்சி உங்களுக்கு தருவேன்ப்பா என்னை நம்புங்க”,
”உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு ஆனா உன்னோட எண்ணம் சரியில்லை”,
”என்னப்பா சொல்றீங்க”,