டும் டும் டும்...! - பிந்து வினோத் : Dum dum dum...! - Bindu Vinod
 

ஒரு சிறு கதை :-)

 


டும் டும் டும்...!

  

"சுமி... ப்ளீஸ்... புரிஞ்சுக்கோ..." கெஞ்சுவது போல் பார்த்த தாயை பார்த்து என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை சுமதிக்கு. திட்டமிட்டது போல் எல்லாம் நடந்திருந்தால், இந்நேரம் ராஜா தாலி கட்டி அவளை மனைவியாக்கி இருக்க வேண்டும். ஆனால் அவனோ தன் காதலியை மணக்க போவதாக, ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு திருமண மண்டபத்தில் இருந்து காணாமல் போய் விட்டான். அந்த திகைப்பில் இருந்து அவள் மீள்வதற்குள்ளேயே இன்னொரு ரெடிமேட் மாப்பிள்ளையை தயார் செய்து விட்டதாக சொல்லி அவளை உடனே மண மேடைக்கு வர சொல்லும் அம்மாவிடம் என்ன சொல்வது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. அவளை ரொம்ப யோசிக்க விடாது, சித்ராவே பேசினார்,

  

"சுமி... உனக்கு தெரியாதது இல்லை. ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து அப்பா உன்னை எப்படி வளர்த்தாருன்னு... இந்த கல்யாணம் பத்தி அவர் எவ்வளவோ கனவு வச்சிருந்தார்... இப்போ இது நின்னு போனால் அவர் தாங்குவாரா? யோசிச்சு பார்....",

  

அம்மா சொல்வது சரி என்பது சுமதிக்கு தெரியும் ஆனால் யார், என்ன என்று ஒன்றும் அறியாதவனை திருமணம் செய்வது எப்படி? ஆனால் அப்படி பார்த்தால் அவளுக்கு அந்த ராஜாவை பற்றியும் கூட பெரிதாக ஒன்றும் தெரியாது தான். அமெரிக்காவில் வேலை பார்ப்பதாகவும், ஊர் திரும்பியவுடன் திருமணம் என்றும் அவனின் பெற்றோர் சொன்னதை அப்படியே நம்பியது எவ்வளவு பெரிய தவறு... ஏதேதோ எண்ணி மனதில் குழம்பியவள்,

  

"ஆனாலும் அப்பாக்காக கூட எப்படி அம்மா எதுவுமே தெரியாத ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்குறது?" என்றாள்.

  

"இல்லை சுமி, இந்த விவேக் ரொம்ப தங்கமானவர். அந்த ராஜாவோட ஸ்கூல் ப்ரண்டாம். நம்ம ஊரில இருந்து கல்யாணத்திற்கு வந்தவங்க எல்லாம் அவரை பத்தி நல்லதா தான் சொல்றாங்க... ஒரே பையன்... அப்பா இல்லை.. அம்மா மட்டும் தான்... குடும்பமும் நல்ல நிலைமையிலே இருக்கு... தங்கமான குணம் அப்படின்னு தங்கராஜ் மாமா கூட சொல்றார்... ப்ளீஸ் அம்மா அப்பாக்காக உன் மனசை மாத்திக்கோ...",