சிங்கப்பெண்ணே... - பிந்து வினோத் : Singapenne... - Bindu Vinod
 
Second edition.

ஒரே தொடக்கத்தில் இருந்து இரண்டு வித கதைகள் என்று சில வருடங்களுக்கு முன் நான் செய்த முயற்சியில் ஒரு பகுதி தான் இந்தக் கதை.
[ அந்த முயற்சியின் இன்னொரு பகுதி ‘பனிப்பாறை’ என்றப் பெயரில் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது. ]

இந்தக் கதை, ஒரு நடுத்தர வயதுப் பெண் திடீரென குடும்பத்தில் ஏற்படும் கணவன் மனைவி சலசலப்பை, பண பற்றாக்குறையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதை சொல்கிறது. அச்சுறுத்ததலாக வருபவற்றையும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளும் ஹீரோயின் இவள்! அவளுக்கு அவளுடைய கணவனும் துணையாக இருக்கிறான்!

கதை உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். 

 

01

  

ஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில், வெட்கத்துடன் மின்னியப் படி, அழகாக விடிந்துக் கொண்டிருந்த வானத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் கல்பனா.

  

ஒவ்வொரு நாளும் சூரியனை வரவேற்க வானம் பூசிக் கொள்ளும் இந்த வெட்க வண்ணம் அவளை சுண்டி இழுத்தது.

  

அவள் தன்னை மறந்து இயற்கையின் எழிலில் மயங்கி இருக்க, பால் குக்கர், ‘ச்சு ச்சு..’ என ஒலி எழுப்பி அவளை அழைத்தது...

  

பிரிய தோழியிடம் விடை பெறுவது போல் வானத்திடம் பிரியா விடை பெற்று அவசரமாக சமையலறை வந்தவள், சத்தம் போட்டுக் கொண்டிருந்த குக்கர் இருந்த அடுப்பின் தணலை குறைத்தாள்.

  

“என்ன உனக்கு அப்படி அவசரம்? இப்படியா அலறுறது? உன்னால ஒரு நாள் எனக்கு காது கேட்காமல் போக போகுது, பார்த்துட்டே இரு... நான் தான் டைமுக்கு வந்திருப்பேனே, அப்படி என்ன உனக்கு அவசரம்?”

  

குக்கருடன் பேசிக் கொண்டே பக்கத்தில் இருந்த அடுப்பில் நான் ஸ்டிக் பேனை வைத்தவளின் கை பால் குக்கரில் இடித்தது... உடனே மீண்டும் சத்தமாக விசில் சத்தம் கேட்டது...

  

“அடடா, இன்னும் கோபமா? சாரிப்பா வானத்தை வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்... உனக்கு இருக்க கோபத்தில பால் டேஸ்ட்டை மாத்திராதே! எல்லோரும் காலையில் முதல்ல குடிக்குறது உன்னை தானே?”

  

குக்கருடன் செல்லம் கொஞ்சிக் கொண்டே, பாலை எடுத்து கணவனுக்கு ஹார்லிக்ஸ், குழந்தைகளுக்கு பூஸ்ட் தயார் செய்தாள். பிறகு, மதிய உணவிற்காக சாம்பார் தயாரிக்கும் வேலையில் ஈடுப்படத் துவங்கினாள்.

  

தாளித்து, காய்கள் சற்று வெந்த உடன், தனியே வேக வைத்து வைத்திருந்த பருப்பை எடுத்து கொட்டி கிளரியவள்,

  

“வீட்டில் எல்லோருக்கும் சாம்பார் ரொம்ப பிடிக்கும், நல்ல சுவையா இருக்கனும் சரியா?”

  

காலை உடல் பயிற்சி முடித்து வந்த சரவணன் மும்முரமாக அடுப்பில் இருந்த சாம்பாருடன் பேசிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து நின்றான்.

  

முகத்தில் புன்னகை மின்ன சமையலறையினுள் சென்றவன், மனைவியை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.

  

“என்னங்க இது! விடுங்க... குளிக்காமல்...”

  

“அது தான் எனக்கு பதில் நீ குளிச்சிட்டல்ல அப்புறம் என்ன? அது எப்படி எப்போதும் இப்படி ஃப்ரெஷ்ஷா இருக்க?”

  

“ப்ச்... முதல்ல கையை எடுங்க... தள்ளி நில்லுங்க!”

  

“ஹு ஹு ம்ம்ம்...”

  

“ப்ளீஸ்...”

  

அவளின் கெஞ்சலை ஏற்றுக் கொண்டவனாக சற்று தள்ளி நின்றவன்,