Chillzee KiMo Books - சாரல் சாரல் காற்றே - சசிரேகா : Saral saral karre - Sasirekha

சாரல் சாரல் காற்றே - சசிரேகா : Saral saral karre - Sasirekha
 

ஒரு வித்தியாசமான சிறுக் கதை.

  


 

குற்றாலம்.

  

குற்றால அருவியின் சாரல் வீசி அது மேனி தழுவும் தூரத்தில் இருந்தது தாமரையின் வீடு, தாமரையும் அந்தி சாயும் நேரத்தில் மொட்டைமாடியில் நின்றபடியே அந்த அருவியின் சாரல் தன் மீது விழுமாறு நின்று ரசிப்பாள். இருள் கவியும் வரை அந்த சாரல் மழையில் நனைவாள், அப்படி நனைந்தால்தான் அந்த நாளே அவளுக்கு முடிந்தது போலாகும், என்னதான் குற்றால அருவியில் குளித்தாலும் இது போன்ற சாரல் மழையில் நனைவது அலாதி சுகம்தான்.

  

”தாமரை அடியேய் தாமரை இங்க வாடி, எப்ப பாரு மொட்டைமாடியில நின்னுகிட்டு வேடிக்கை பார்க்கறது, இப்ப வரப்போறியா இல்லையா” என அவளின் தாய் சத்தம் போட தாமரையும் மாடியை விட்டு இறங்கி வந்தாள்,

  

”ஏன்மா கத்தற, கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா”,

  

”ஆமாம்டி உன்னோட நிம்மதியை நான்தான் கெடுத்தேனாக்கும், துணிமணி அடுக்கி வைன்னு எப்ப சொல்லிட்டுப் போனேன், இன்னும் செய்யலை, அப்படி என்னதான் வேலை உனக்கு மொட்டைமாடியில”,

  

”ஏன் உனக்குத் தெரியாதா”,

  

”அதுசரி எப்ப பாரு சாரல்ல நின்னுக்க உடம்புக்கு முடியாம  போனா என்னாகிறது”,

  

”அப்படி ஏதும் ஆகாதும்மா நீ ஒண்ணு”,

  

”எத்தனை நாளுக்கு இதுபோல நீ நிப்ப, ஒரு நாள் இல்லை ஒரு நாள் உனக்கு கல்யாணம் ஆனா போற வீட்ல சாரல் அடிக்கலைன்னா என்ன செய்வ”,

  

”அப்ப சாரல் அடிக்கற வீட்ல இருக்கற மாப்பிள்ளையா பாரும்மா”,

  

”ஆமாம்டி இதான் என் வேலை பாரு, உன் அப்பா வர்ற நேரம், அவர்கிட்ட இப்ப நீ சொன்னியே அதை அப்படியே சொல்லு, அடி வெளுப்பாரு உன்னை” என சொல்ல தாமரையோ முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அவர்கள் பேசியதை கேட்டபடியே வந்தார் அவளின் தந்தை சதாசிவம்,

  

”பார்வதி எதுக்கு என் பொண்ணை திட்டற, அவள் என்ன பெரிசா ஆசைப்பட்டுட்டா, நகை வேணும் கார் வேணும்னா சொன்னா, இங்க எப்படியிருக்காளோ அப்படியே இருக்கனும்னு ஆசைப்படறா அது தப்பா”,

  

”நானும்தான் ஆசைப்பட்டேன், என் அப்பா எனக்கு நிறைவேத்தலையே எந்த அப்பன்தான் பொண்ணோட ஆசையை நிறைவேத்தியிருக்காரு“ என்றார் ஆதங்கத்துடன்,

  

”நீ என்னத்த ஆசைப்பட்ட“,

  

”ம் கவர்மெண்ட்ல வேலை பார்க்கற மாப்பிள்ளை வேணும்னு ஆசைப்பட்டேன் எங்க” என அலுப்பாக சொல்லிவிட்டு சமையல்கட்டுக்குச் செல்ல அவரின் பேச்சை கேட்டதும் சதாசிவத்தின் முகம் வாடிப்போனது அதைக்கண்ட தாமரையோ,

  

”அப்பா என்னாச்சிப்பா”,

  

”இத்தனை வருஷம் ஓடிப்போச்சி ஆனா, அவள் மனசு மாறலை பார்த்தியா, என்கிட்ட எந்த குறையும் இல்லை, ஒண்ணே ஒண்ணு நான் கவர்மெண்ட் வேலை பார்க்கலை அதான் அவளுக்கு குறைச்சலா தெரியுது”,