Chillzee KiMo Books - வானவில்லாய் - ச.சிந்தியா : Vanavillay - Sa.Sinthiya

வானவில்லாய் - ச.சிந்தியா : Vanavillay - Sa.Sinthiya
 

கயல்விழி தன் வாழ்க்கையின் சோகங்களில் இருந்து வெளி வந்து தைரியமாக நிமிர்ந்து நிற்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறாள். அவளை எதிர் கொள்ளும் நித்தேஷ் அவளின் குணத்தினால் கவரப் படுகிறான். நித்தேஷின் காதலை கயல் ஏற்றுக் கொள்வாளா?

    

1

  

யல்விழி காரை ஓரமாக நிறுத்தினாள். திரும்பவும் ஒருத் தடவை எதிரே இருந்த பில்டிங்கைப் பார்த்தாள். எடிசன் அட்வர்டைஸிங் ஏஜன்சி என்ற போர்ட் பெரிதாக இருந்தது. ஆனால் கட்டிடம் என்னவோ அவள் எதிர்பார்த்ததை விட ரொம்பவும் சின்னதாக இருந்தது.

  

நியூயார்க்கில் கயல்விழி முன்பு வேலை செய்த ஆட் ஏஜன்சி அலுவலகம் மிகப் பெரியது. அது அமெரிக்காவின் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஏஜன்சி.

  

இது லோக்கல் ஏஜன்சி!

  

பெருமூச்சை அவளால் தடுக்க முடியவில்லை.

  

மனதை தேற்றிக் கொண்டு காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றாள்.

  

இன்டர்வ்யூ என்ற உடன் அங்கு நிறைய பேரை எதிர்ப்பார்த்த கயல்விழிக்கு வியப்பு தான். ஏனெனில் அங்கே இன்டர்வ்யூவிற்கு அவளை தவிர வேறு யாரும் வந்திருப்பதாக தெரியவில்லை.

  

இந்த வேலைக்காக கொடுத்திருந்த அட்வர்டைஸ்மென்ட்டில், மேனேஜர் பதவி, மாதம் நாலாயிரம் டாலர் சம்பளம் என்று சொல்லி இருந்தார்களே என்று எண்ணிக் கொண்டாள். சரி பார்க்கலாம், என்ற முடிவோடு ரிசப்ஷனிஸ்ட் என்று தோன்றிய பெண்ணிடம் சென்று பேசினாள்.

  

“என்னை இன்டர்வியூக்கு வர சொல்லி இருக்காங்க.”

  

“நீங்க தான் கயல்விழியா?” என்று அவள் கேட்கவும், கயல்விழிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

  

“ஆமாம்.”

  

”இங்கே வெயிட் செய்ங்க. நீங்க வந்திருக்கதை இன்பார்ம் செய்றேன்.”

  

கயல்விழி அங்கிருந்த அலங்கார குஷன் நாற்காலியில் அமர்ந்தாள். அப்படியே அந்த இடத்தை பார்வையால் அலசினாள்.

  

இன்டீரியர் டெகரேஷன் அமர்க்களமாக இருந்தது.

  

சுவரில் இருந்த வால் பேப்பர் வண்ண மயமாக இருந்தது. அதற்காக கண்ணை பறிக்கும் விதத்தில் இல்லை. பார்த்து ரசிப்பதுப் போல இருந்தது.

  

ஓரமாக வைக்கப் பட்டிருந்த பூ ஜாடிகளில் இருந்த பூக்கள் பிரெஷ் ஆக இருந்தது.

  

அலங்காரதிற்காக வைக்கப் பட்டிருந்த இன்டோர் செடிகளும் பச்சை பசேல் என செழிப்பை காட்டியது.

  

மேகசின் ஸ்டான்டில் பத்துக்கும் அதிகமான மேகசின்கள் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

  

பரவாயில்லை, சிறியதாக இருந்தாலும் நல்ல விதத்தில் தான் ஆபீசை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

  

அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் உடனே அழைத்தார்கள்.

  

எந்த விதமான டென்ஷனும் இல்லாமல் ரிஷப்ஷனிஸ்ட் சொன்ன வழியில் சென்று அங்கிருந்த அறைக்குள் சென்றாள்.