Chillzee KiMo Books - இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத் : Ithaya poo eppothu malarum... - Bindu Vinod

இதயப்பூ எப்போது மலரும்... - பிந்து வினோத் : Ithaya poo eppothu malarum... - Bindu Vinod
 

விவேக், பாரதி இருவரும் வித்தியாசமான ஒரு சூழலில் சந்தித்துக் கொள்கிறார்கள்... அப்போது நடக்கும் நிகழ்வுகள் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே இருவரும் ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சந்திக்கும் போது காதல் மலர வாய்ப்பு உண்டாகுமா???

 

 

இதயப்பூ எப்போது மலரும்...

  

செப்டம்பர் 2009.

  

பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை... கண்கள் கறுப்புத் துணியில் கட்டப் பட்டிருந்ததால் காரிருளாக இருந்தது...

  

சாலையில் நடந்துக் கொண்டிருந்தவளை வேகமாக அவளின் அருகே வந்த ஒரு காரில் இருந்த சிலர் கண்ணிமைக்கும் நேரத்தில் காரினுள் இழுத்து, கைகளை கட்டி விட்டு, கண்களையும் கட்டி எங்கோ அழைத்து வந்திருந்தனர்...

  

அவள் செய்ய நினைத்த காரியத்தை செய்ய இன்னும் சில மணித் துளிகளே இருந்தன... ஆனால் அதையும் விட அவள் இருக்கும் நிலை பயங்கரமாக இருக்கிறதே...

  

யார் இவர்கள்???

  

எதற்காக அவளை கடத்தி வந்திருக்கிறார்கள்?

  

“தண்ணி ஏதாவது கொடுத்தீங்களாடா?”

  

புதிதாக ஒரு கணீர் குரல் எங்கிருந்தோ ஒலித்தது...

  

“இல்லை பாஸ், கத்தி கித்தி ஊரை கூட்டிட்டா என்ன செய்றது?”

  

“அதெல்லாம் வெளியே கேட்காது. நீ அவ வாயில இருக்க துணியையும், கண்ணுல இருக்க கட்டையும் அவிழ்த்து விடு. கையும் காலும் கட்டி தானே இருக்கு... பிரச்சனையில்லை...”

  

இவன் தானா இந்த கூட்டத்திற்கு தலைவன்?

  

கடத்தல் கும்பலின் தலைவனாக இருந்து விட்டு பேசும் பேச்சை பார்... இவன் மட்டும் கையில் கிடைத்தால்...! எவ்வளவு வீராவேசமாக காலையில் வீட்டில் இருந்து கிளம்பினாள்... ச்சே எல்லாம் பயனில்லாமல் போய் விட்டதே...

  

பாரதி தனக்குள் அலுத்துக் கொண்டிருக்கும் போதே, அவள் வாயில் இருந்த துணி எடுக்க பட்டு, கண்களுக்கும் விடுதலை கிடைத்தது...

  

சட்டென வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்கள் கூசியது...

  

மெல்ல இமைகளை தட்டி வெளிச்சத்திற்கு கண்களை பழகியப்படி எதிரில் நின்றவர்களை பார்த்தாள் பாரதி...

  

அவள் எதிர்பார்த்தது போல் அங்கே ரவுடிகள் நிற்கவில்லை... மாறாக கல்லூரி மாணவர்கள் போல் தோற்றமுள்ள சிலர் நின்றிருந்தார்கள்.

  

“யாருடா நீங்க எல்லாம்?” என அதட்டலாக கேட்டாள் பாரதி.

  

“ஹோய், என்ன டாவா?”

  

சற்று முன் கேட்ட அதே குரல்! இவன் தானா அந்த தலைவன்!!! அவனை பார்த்து முறைத்த பாரதி,

  

“செய்றது எல்லாம் கிரிமினல் வேலை உனக்கு மரியாதை வேறயா? உங்களை எல்லாம் போலீஸ்ல மாட்டி விடுறேனா இல்லையா பாரு!” என்றாள்.

  

“நிஷாந்த் சொன்னது தப்பே இல்லை... என்ன மாதிரி நிலமையில என்ன மாதிரி பேசுறா பாரேன்...”