Chillzee KiMo Books - இதற்குப் பெயர் தான் காதலா? - பிந்து வினோத் : Itharku peyar than kathala? - Bindu Vinod

இதற்குப் பெயர் தான் காதலா? - பிந்து வினோத் : Itharku peyar than kathala! - Bindu Vinod
 

ஒரு சிம்பிள் சிறுகதை :-)

 

 

இதற்குப் பெயர் தான் காதலா?

  

ன்று பிப்ரவரி பதினான்காம் தேதி! உலகமெங்கும் காதலர் தினம் கொண்டாடப் படும் நாள்...

  

சமையலறையில் கணவன் விஷ்ணுவிற்காக மதிய உணவை டிஃபன் பாக்ஸில் வைத்துக் கொண்டிருந்த பிருந்தா, உணவறையில் அவசர அவசரமாக காலை உணவான இட்லியை விழுங்கிக் கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். விஷ்ணு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறான். கை நிறைய சம்பளம் வந்தது... ஒரு சின்ன கெட்ட பழக்கமும் இல்லை... தோற்றத்திலும் எந்த குறையும் இல்லை… பார்க்க கம்பிரமாக மிடுக்குடன் இருந்தான்... அவள் மீதும், குழந்தைகள் இருவர் மீதும் அளவில்லாத அன்பு வைத்திருந்தான்... மொத்தத்தில் ஒரு சிறந்த குடும்ப தலைவனாக இருந்தான்...

  

ஆனாலும் பிருந்தாவின் மனதினுள் ஒரு சிறுக் குறை மட்டும் இருந்துக் கொண்டே இருந்தது... பிறந்தநாள், பண்டிகைகள் என எந்த சிறப்பு நாளிலும் விஷ்ணு எந்த விதமான குறையும் வைத்ததில்லை.... எப்போதும் அவள் கேட்பதை அவன் உடனே வாங்கி தருவான் என்பது அவளுக்கு தெரியும்... விலை உயர்ந்த பொருளாக கேட்டாலும் கூட முகத்தை சுழிக்காது வாங்கி தருவான்..

  

ஆனால் அவள் படித்த காதல் கதைகளில் அப்படி இல்லையே... மனைவி சொல்லாமலே கணவன் அவளின் மனமறிந்து அல்லவா பரிசுகளை வாங்கி தர வேண்டும்!

  

ஏனோ விஷ்ணு இன்று வரை எதையுமே அவள் சொல்லாது அவளுக்கென வாங்கி தந்ததில்லை... அவளாக கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வைர மோதிரத்தை விட அவனாகவே வாங்கி தரும் சின்ன ரோஜாப் பூவும் கூட அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும்... அது அவனுக்கு ஏன் இன்னமும் புரியவில்லை?

  

திருமணமான இந்த ஆறு ஆண்டுகளில், அவளுடைய பிறந்தநாள், அவர்களின் திருமணநாள் என்று ஒவ்வொன்றிருக்கும் அவனிடம் இருந்து ஏதாவது ‘சர்ப்ரைஸ் கிஃப்ட்டை’ எதிர்பார்த்து அவள் ஏமாந்துப் போய் கொண்டிருந்தாள்... ஒவ்வொரு வருடமும் அது போன்ற சிறப்பு நாட்களில் அவளை கடைக்கு அழைத்து சென்று அவளுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ள சொல்வான் விஷ்ணு...

  

பல பல கதைகளை படித்து, திரைப்படங்களை பார்த்து ஏதேதோ எதிர்பார்த்திருந்த பிருந்தாவிற்கு இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தன் கணவன் அது போல் ‘ரொமான்ட்டிக்’ ஹீரோவாக இல்லையே என்ற ஏமாற்றம் இருந்தது...

  

மனதினுள் வருத்தம் இருந்தாலும், அவள் இதுவரை அவனிடம் அதைப் பற்றி சிறு கோடிட்டு கூட காட்டியதில்லை...