Chillzee KiMo Books - மனம் - பிந்து வினோத் : Manam - Bindu Vinod

மனம் - பிந்து வினோத் : Manam - Bindu Vinod
 

சிறுகதை.

 

 

மனம்.

   

"மனித  மனம்  சஞ்சலமுடையதுகலங்க  வைப்பதுவலிமையுடையதுஅடக்க  முடியாததுகாற்றை  அடக்குவது  போல்  அதை  அடக்குவது  கடினமானது...."

  

இன்று  வெள்ளிக்  கிழமை!  வரும்  திங்கட்கிழமை  அரசு  விடுமுறை.  தொடர்ந்து  மூன்று  நாட்கள்  விடுமுறை  என  நினைக்கும்  போதே  சந்தோஷமாக  இருந்தது.  மூன்று  நாட்களும்  நன்றாக  தூங்கி  ஒய்வு  எடுக்க  வேண்டும்  என  மனதில்  திட்டமிட்டுக்  கொண்டிருக்கும்  போது  என்  கை  பேசி  சிணுங்கி  நின்றது.  என்  கணவர்  என்னை  அழைத்து  செல்ல,  வந்து  விட்டதை  சொல்லும்  மிஸ்டு  கால்  அது.  அருகில்  இருந்த  உடன்  பணிபுரிபவர்களிடம்,  நீண்ட  வார  இறுதிக்கான  வாழ்த்தை  சொல்லி  விட்டு,  அவசரமாக  எழுந்து  கிளம்பினேன்.  வழக்கம்  போல்  என்  அலுவலகத்தின்  வாயில்  அருகே  பைக்குடன்  நின்ற  என்  கணவரை  பார்த்து  புன்னகையுடன்  அருகில்  சென்றேன்.

  

"நந்து...  சீக்கிரம்  வா...  இப்போவே  மணி  அஞ்சு  ஆயிடுச்சு...  நாம  எட்டு  மணி  ட்ரெயின்ல  கிளம்பனும்...."  என்றார்  என்  கணவர்  நரேந்திரன்.

  

"எட்டு மணி  ட்ரெயினா????  எங்கே  போறதுக்கு????"  என்று  பைக்கில்  ஏறியபடியே  கேட்டேன்.

  

"ஆமாம் உன்கிட்ட  சொல்லவே  மறந்து  போயிட்டேன்,  என்  பிரெண்ட்  ரகுக்கு  சண்டே  கல்யாணம்...  தர்வாத்  பக்கத்தில  ஒரு  கிராமத்தில  கல்யாணம்...  இன்னைக்கு  கிளம்பினால்  நாளைக்கு  எட்டு  மணி  மாதிரி  போயிடலாம்...  ஒரு  நாள்  சும்மா  சுத்தி  பார்த்துட்டு  சண்டே  மேரேஜ்  முடிஞ்ச  உடனே  கிளம்பிடலாம்.."  என்று  பைக்கை  கிளப்பியபடி  அவர்  சொன்னதை  கேட்டு  எனக்கு  கோபம்  வந்தது.

  

"டிக்கெட் புக் பண்றதுக்கு  முன்னாடி  என்கிட்டே  சொல்லனும்  தானே?  நீங்க  வேணா  போயிட்டு  வாங்க..  எனக்கு  விருப்பம்  இல்லை...  டெய்லி  அஞ்சு  மணிக்கு  எழுந்து  ஆபிஸ்  போக  வேண்டி  இருக்கு.  இந்த  மூனு  நாள்  தான்  கொஞ்சமாவது  ரெஸ்ட்  எடுக்கலாமுன்னு  நினைச்சேன்.."

  

"ப்ச்....  திங்கள்  வந்து  ரெஸ்ட்  எடுக்க  வேண்டியது  தானே?"

  

எங்களின்  அரை  மணி  நேர  பயணம்  இதே  வாக்குவாதத்திலேயே  சென்றது.  ஏற்கனவே  டிக்கெட்  பதிவு  செய்து  விட்டதால்  இன்று  போயே  தீர  வேண்டும்  என்றார்  நரேந்திரன்.  ஆனால்,  ஏற்கனவே  விடுமுறை  நாட்களில்  ஒய்வு  எடுப்பது  என  முடிவு  செய்திருந்ததால்,  நானும்  என்  மனதை  மாற்றுவதாக  இல்லை.