உனக்காகவே நான் வாழ்கிறேன் - சசிரேகா : Unakkagave naan vazhgiren - Sasirekha

முன்னுரை:

அன்பிற்காக ஏங்கும் நாயகிக்கு அவள் எதிர்பார்த்த அன்பு கிடைத்ததா தனிமையில் வாடிய அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி வந்ததா தனக்கான அன்பை அவள் எப்படி அடைந்தாள் என்பதே இக்கதையாகும்.

 

 

உனக்காகவே நான் வாழ்கிறேன் – சசிரேகா,

  

பாகம் 1,

  

சென்னை பைபாஸ் ரோடு ,

  

மாலை வேளையில்,

  

”அம்மா நான் நாளைக்கு வந்துடறேன்” என இளஞ்சேரன் செல்போனில் தன் தாய் ஜெயந்தியிடம் சொல்ல,

  

”உன் அப்பாகூட போயிருந்திருக்கலாம் தனியா போகனுமா” என ஜெயந்தி கேட்க,

  

“அம்மா நான் என்ன சின்ன பையனா சென்னைக்குதானே வந்திருக்கேன் நாளைக்கு வந்துடுவேன் வேலை விசயமாதானே வந்தேன் வந்துடறேன் ஃபோனை வை” என சொல்லிவிட்டு இளா ஃபோனை வைத்தான்.

  

அவனுடைய காரை டிரைவர் ஓட்ட பின்னாடி சீட்டில் கண்கள் மூடி படுத்திருந்தான். சில நொடிகள் கூட சென்றிருக்காது, அவனுடைய கார் சட்டென பிரேக் அடித்து நின்றது. எதன் மேலயோ மோதியது போல இருக்கவே அதிர்ந்தான் இளா,

  

”என்னாச்சி?” என டிரைவரை கேட்க,

  

”அண்ணா சின்ன ஆக்சிடெண்ட்” என சொல்ல உடனே காரை விட்டு இறங்கினான்,

  

அவனது வண்டி ஒரு ஸ்கூட்டியை இடித்திருந்தது. ஒரு பெண் கீழே விழுந்து மயங்கியிருந்தாள்,

  

”முட்டாள் இப்படியா வண்டி ஓட்டுவ”,

  

“2 நாளா தூங்கலைண்ணா கண்ணு திடீர்னு சொக்கிடுச்சி” என சொல்ல அவனோ அவனது நிலைமையை உணர்ந்து,

  

”தூங்கனும்னு சொல்லியிருந்தா நானே காரை ஓட்டியிருப்பேனே, இப்ப பாரு என்னாச்சின்னு அந்த ஸ்கூட்டியை தூக்கு முதல்ல” என கத்த டிரைவர் ஸ்கூட்டியை  தூக்க மயங்கி கிடந்த பெண்ணிடம் வந்தான் இளா. ,

  

கான்வென்ட் படிக்கும் பெண் போல சின்ன ஸ்கர்ட்டும் சர்ட்டுமாக யூனிபார்ம் அணிந்திருந்தாள். கீழே விழுந்த நிலையில் அவளது ஸ்கர்ட் விலகியிருப்பதைக்கண்டு சட்டென உடையை சரிசெய்தவன் அவள் முகத்தை பார்த்தான். கண்கள் மூடியிருந்தாள். அழகி பேரழகி ஒரு முறை பார்த்து விட்டு கண்கள் கூட திருப்ப முடியாத அளவுக்கு அழகி ஆனாலும் அவளது உடையைக் கண்டவன் பள்ளி மாணவி என நினைத்து அவளது கன்னத்தை தட்டினான்,

  

”பாப்பா பாப்பா எழு இதப்பாரு பாப்பா” என அவளை தட்டி தட்டி எழுப்பியும் எழாமல் இருக்கவே அவளது உடல் முழுவதும் பார்த்தான் பலத்த ரத்த காயம் இருக்கிறதா என எங்கும் அது போல இல்லாமல் போகவும் சிராய்ப்பு மட்டும் ஆங்காங்கு இருப்பதைக் கண்டவன் டிரைவரிடம்,

  

”தண்ணி கொண்டா” என சொல்ல அவனும் தண்ணீர் பாட்டிலுடன் வந்தான். அவளது தலையை பிடித்து தன் மடியில் படுக்க வைத்தவன் தண்ணீரை வாங்கி மெல்ல சிறிது எடுத்து அவள் முகத்தில் தெளித்தான். தண்ணீர் படாரென முகத்தில் படவும் லேசாக அவள் உணர்வு பெற்று அசைந்தாள். அவனது மடியில் அவள் புரளவும் அவனுக்கு கஷ்டமாகிப் போனது.

  

”பாப்பா பாப்பா இதப்பாரு பாப்பா” என சொல்ல அவளோ மயக்கம் தெளிந்தும் எழ முடியாமல் கண்கள் மூடி முனகவும் டிரைவரிடம்,

  

”ஸ்கூட்டியில ஏதாவது பையிருக்கான்னு பாரு அட்ரஸ் இருந்தா அவள் வீட்ல கொண்டு போய் விட்டுடலாம்” என சொல்ல அவனும் பார்த்தான்,