உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - சசிரேகா : Unnai nannariven ennaiyanri yararivar - Sasirekha
 

உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - சசிரேகா

முன்னுரை:

ஆத்மார்த்தமான காதல் என பலரும் சொல்லி தங்களின் காதலை பெருமைப்படுத்துவார்கள் ஆனால் இங்கு ஒருவன் ஆத்மாவுடனே காதல் புரிகிறான் தன் காதலுக்காக அவன் என்னென்ன செய்கிறான் என்பதே இக்கதையாகும்.

 

 

பாகம் -1,

  

ஏற்காடு,

  

”விக்ராந்த் என்ன முடிவு எடுத்திருக்க” என ராகுல் கேட்க அதற்கு விக்ராந்தோ,

  

”ஒரே முடிவுதான், அதைதான் அன்னிக்கே சொல்லிட்டேனே அடிக்கடி முடிவுகளை மாத்தற பழக்கம் எனக்குக் கிடையாது நண்பா” என்றான்,

  

இவர்கள் இருவரும் ஒரு பார்ட்டி ஹாலில் அவர்களின் தோழியின் பிறந்த நாளுக்காக வந்திருந்தார்கள்.

  

”நீ செய்றது அநியாயம், கொஞ்சம் யோசிச்சிப் பாரு, இது அவசியம் தேவையா”,

  

”எனக்குத் தேவைதான்”,

  

”அப்படி என்ன அந்த இடத்து மேல அவ்ளோ விருப்பம் உனக்கு”,

  

”அது எங்க பூர்வீக சொத்து, நடுவில அது கைநழுவி போயிடுச்சி, இப்பதான் திரும்ப கிடைச்சிருக்கு, அதை மறுபடியும் என்னால இழக்க முடியாது”,

  

”ஆனா அந்த இடத்தை பத்தி மக்கள் பேசிக்கறது உன் காதுல விழுதா இல்லையா”,

  

”அதையெல்லாம் நான் நம்பறதாயில்லை” என விக்ராந்த் சொல்லும் போதே கீர்த்தி வந்தாள்,

  

”ஏய் விக்ராந்த், தாங்க்யூ ஸோ மச், நீ வருவேன்னு நான் நினைச்சேப் பார்க்கலை, எனக்காகவே அப்ராட்ல இருந்து வந்திருக்க, தாங்யூ” என சொல்லி அவனை கட்டியணைக்க அவனும் ஒரு நொடி அவளை அணைத்து பின் அவளை தள்ளி நிப்பாட்டியவன்,

  

”இட்ஸ் ஓகே, போ போய் உன் பர்த்டேவை என்ஜாய் பண்ணு, நான் கிளம்பறேன்” என விக்ராந்த் சொல்ல அதற்கு அவளோ,

  

”என்ன கிளம்பறியா, சொல்லப்போனா நீ வந்ததுக்காகதான் இந்த பார்ட்டியையே நான் அரேன்ஜ்டு பண்ணேன் தெரியுமா, ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் என்கூட இரு ப்ளீஸ்” என கெஞ்ச அவனோ,

  

”இல்லை இப்பவே ரொம்ப நேரமாயிடுச்சி” என விக்ராந்த் சொல்ல அவள் கேட்கவில்லை,

  

அவனது கையை பற்றி இழுத்துக் கொண்டு சென்று அவனுடன் நடனமாட ஆரம்பிக்க விக்ராந்தோ ராகுலைப் பார்த்து என்னடா இது என்பது போல் சைகை செய்ய ராகுலோ சிரிப்புடன் என்ஜாய் என சைகையில் சொல்ல தலையில் அடித்துக் கொண்ட விக்ராந்த் பேருக்கு அவளுடன் அப்படி இப்படி என நடனமாடிவிட்டு,

  

”ஓகே கீர்த்தி, எனக்கு டைம் இல்லை, இப்பவே டயர்டா இருக்கு நான் கிளம்பனும் பை பை”,

  

”என்னப்பா அதுக்குள்ள கிளம்பனுமா” என வருந்தினாள் கீர்த்தி,

  

”உனக்காக இங்க நிறைய பேர் வந்திருக்காங்க, அவங்களோட நீ பார்ட்டியை கன்டினியூ பண்ணு, இப்ப நான் கிளம்பறேன்” என சொல்லியவன் ராகுலைப் பார்த்து வா என்பது போல் கையை அசைக்க அவனும் விக்ராந்துடன் இணைந்துக் கொள்ள கீர்த்தியோ,

  

”ராகுல் நீயும் கிளம்பறியா”,

  

”ஆமாம்”,

  

”இது அநியாயம்”,