தனிமை - பிந்து வினோத் : Thanimai - Bindu Vinod
 

தனிமை - பிந்து வினோத்

 

 

சிறுகதை.
 

தனிமை.

  

"மீரா எனக்கு பேச டைம் இல்லை. நிறைய வேலை இருக்கு... நாளைக்கு சனிக்கிழமை தானே, நாளைக்கு ஸ்கைப்பில் கூப்பிடுறேன்... ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் வேணா பேசலாம்...”

  

"விவேக்..." அவள் பதில் சொல்லும் முன் அந்த பக்கம் இணைப்பு துண்டிக்கப் பட்ட சத்தம் கேட்டது. மீராவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கடந்த சில நாட்களாகவே இதே தான் நடக்கிறது. கணவனுக்கு தன் மீது ஏதும் கோபமா என்று ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மீரா.விவேக்கிற்கும் அவளுக்கும் ஒளிவு மறைவு என்று இதுவரை எதுவுமே இல்லை. திருமணத்திற்கு பின் நடந்தவை என்றில்லாமல் சிறுவயதில் நடந்த சின்ன சின்ன விஷயங்களை கூட இருவரும் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மீராவை விட அதிகம் அவளிடம் விஷயங்களை பகிர்பவன் விவேக் தான்...ஆனால் இப்போது என்ன?

  

என்ன என்று புரியாமல் சென்ற வாரம் விவேக்கின் உடன் பணிபுரியும் பரத்தின் மனைவியும் அவளின் தோழியுமான கோமதியை கைபேசியில் அழைத்து பேசினாள் மீரா. தோழியை அழைத்தாளே தவிர என்ன கேட்பது, எப்படி கேட்பது என்று அவளுக்கு புரியவில்லை.எனவே பொதுவாக,

  

"டைம் கிடைக்கும் போது, அங்கே எங்க வீட்டுக்கு சும்மா ஒரு விசிட் அடிங்க." என்றாள்.

  

"மீரா இதெல்லாம் சொல்லனுமா? நான் விவேக்கை இரண்டு நாள் முன்பு தான் பார்த்து அரை மணி நேரம் பேசினேன்... ஆனால் மீரா நீ ரொம்ப ஸ்ட்ராங் கேரக்டர், என்னால எல்லாம் இவரை விட்டுட்டு இத்தனை மாசம் இருக்க முடியாது.”

  

அதன் பிறகு எதையோ பேசி முடித்த போதும், கோமதி சொன்ன விஷயங்கள் அவளை மேலும் குழப்பியது. ஆனால் மறுநாள்,

  

"என்ன புதுசா ஸ்பை வேலை எல்லாம்?" என்று விவேக் ஒரு மாதிரியான குரலில் கேட்கவும், அதற்கு மேல் அவள் கோமதியை இந்த விஷயத்தில் இழுக்கவில்லை.