அமுதே நிலவே - சசிரேகா
சிறுகதை.
சிறுகதை – அமுதே நிலவே - சசிரேகா,
”அமுதினி நான் சொல்றதைக் கேளும்மா நான் உன்னோட அம்மா உனக்கு கெடுதல் நினைப்பேனா சொல்லு” என அமுதினியின் தாய் திலகா சொல்ல அதற்கு அவளோ,
”அம்மா ஏன்மா இப்படி எனக்கு வேணாம்மா” என கெஞ்ச,
”அப்படி சொல்லாதம்மா”,
”நீ செய்றது நியாயமா சொல்லு எனக்கு இது அநியாயமா படுதும்மா”,
”அமுதினி என்னை தப்பா நினைக்காதம்மா உன்னை இப்படியே எத்தனை நாள் வைச்சிக்க முடியும் சொல்லு”,
“நான் உங்களுக்கு பாரமா இருக்கேன்னு நேரடியா சொல்லுங்களேன், நான் தப்பா நினைக்க மாட்டேன், நானே இங்கிருந்து கிளம்பிடறேன், உங்களுக்கும் நிம்மதி எனக்கும் நிம்மதி” என வெறுப்பாக அமுதினி பேச திலகா ஒரு நொடி ஆத்திரப்பட்டு அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டுவிட்டு என்னவோ அவருக்கே அறைவிழுந்தது போல துடித்துப் போய் ஓவென அழலானார்.
அறை வாங்கிய அமுதினி கூட கன்னத்து வலியை பெரிதாக எண்ணவில்லை, தாயின் அழுகை அவளை கஷ்டப்படுத்தியது,
”அம்மா அம்மா அழாதம்மா ப்ளீஸ்மா அம்மா“ என கெஞ்ச அவரும்,
”எல்லாம் என்னாலதான்“ என தன்னையே குறை சொல்லி அழ அமுதினிக்கு சங்கடமாகிப் போனது, அதுவரை தாயின் பேச்சில் அசையாமல் திடமாக இருந்தவள் இப்போது அவரின் கண்ணீரைக்கண்டு அசைந்துக் கொடுத்தாள்,