தேவதையை கண்டேன்... - பிந்து வினோத்
இது ஒரு காதல் கதை!
கதாநாயகன் விஷ்ணுவும், கதாநாயகி மீராவும் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவருக்குமே முன்பே பரிச்சயம் இருக்கிறது...
மீரா விஷ்ணுவிடம் சாரி சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடனே இருக்கிறாள்...
விஷ்ணுவோ மீராவைப் பற்றிய கேள்வியுடனே இருக்கிறான்...
அப்படி என்ன தான் இவர்களின் மனதில் இருக்கிறது???
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!!!!
தேவதையை கண்டேன்...
மீரா அன்று அலுவலகத்தை அடைந்த போது ஏனோ என்றும் இல்லாத விதமாக மனதில் ஒருவித பரபரப்பு இருந்தது. ஏதோ நடக்க போவதாக உள்ளுணர்வு கூறியது! உள்ளுணர்வின் காரணமாகவோ என்னவோ எண்ண வட்டத்தில் இருந்து வெளியில் வந்தவள், பழக்க தோஷத்தில் மனம் வேறு சிந்தனையில் இருந்த போதும், கால்கள் தானாக அவளை லிப்ட் பக்கம் அழைத்து வந்திருப்பதை உணர்ந்தாள். கிழே வந்த லிப்ட்டில் மற்றவர்களோடு ஏறி நான்காம் மாடி அடைய காத்திருந்தவளின் கண்கள், ஆர்வமின்றி லிப்ட்டில் அருகில் இருந்தவர்கள் பக்கம் சென்றது. அலுவலகம் தொடங்கும் நேரம் என்பதால் கூட்டம் இருந்தது. தெரிந்தவர்கள் அவளை பார்த்து புன்னகைத்தனர். பதிலுக்கு புன்னகைத்த படி பார்வையை திருப்பியவளின் கண்களில் அவன் தெரிந்தான். இது அவனே தானா??? சந்தேகமே இல்லாமல் அவன் தான்! அவனுக்கு அவளை நினைவிருக்குமா? அவள் திகைத்து போய் கேள்வியோடு அவன் முகத்தை மீண்டும் பார்த்தாள். அவன் பக்கம் அவள் பார்வை இருந்த உள்ளுணர்வில் தானோ என்னவோ அவனும் அவள் பக்கம் திரும்பினான். அவன் முகத்திலும் வியப்பும், திகைப்பும் தோன்றியது. அவனுக்கும் அவளை நினைவிருக்கிறது!!!!!
"மேடம், போர்த் ப்ளோர் வந்தாச்சே நீங்க இறங்கலையா?",
அருகில் ஒலித்த குரலில் சிந்தனை கலைந்து, நினைவுபடுத்தியவளுக்கு நன்றியை ஒரு புன்னகையின் மூலம் தெரிவித்து விட்டு, அவசரமாக லிப்டில் இருந்து வெளியேறினாள் மீரா. அவனும் அவளை போலவே தாமதமாக உணர்வு பெற்று வெளியே வந்தான்.
"ஜி.எம் ரூம் இந்த ப்ளோர் தான் விஷ்ணு...",
அந்த பெயரிலும், அதை சொன்ன பெண் குரலையும் கேட்டு, திரும்பி பார்த்தாள் மீரா. அவன், அது தான் விஷ்ணுவின் அருகில் நடந்த படி பேசிக் கொண்டிருந்தாள் அவள். மீராவிற்கு தன்னையும் மீறி சற்றே பொறாமை தலை தூக்கியது. அவனுக்கு திருமணமாகி விட்டதா???,
அவனின் நினைவு வருவது அவளுக்கு புதிதில்லை. இந்த மூன்று வருடங்களில் பலமுறை அவனிடம் ஒரு சாரியாவது சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறாள். வழக்கத்திற்கு வினோதமாக கம்ப்யுட்டர் திரையில் ஸ்க்ரீன் சேவர் ஓடிக் கொண்டிருக்க அதை வெறித்த வண்ணம் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மீராவை பார்த்து ஆச்சர்யப் பட்டாள் கண்மணி.
"ஹாய் மீரா, என்ன இது அதிசயம்?",
கண்மணியின் குரலில் சிந்தனையில் இருந்து வெளிப்பட்ட மீரா, அவளுக்கே உரிய புன்னகையோடு,
"ஹாய்.. குட் மார்னிங்... ஒன்னுமில்லைப்பா ஏதோ யோசிச்சிட்டு இருந்தேன்...",
"அது சரி மீராவுக்கு ஆபிஸ் வந்த பின் வேற விஷயம் எல்லாம் யோசிக்க கூட நேரமிருக்கா? சரி அது போகட்டும் இன்னைக்கு எங்க வீட்டு குட்டி வாலு ரிஷப் என்ன செய்தான் தெரியுமா?...",
கண்மணியின் முதல் வரியில் சிணுங்கிய மனதை கட்டுபடுத்தி, அவளின் மகன் செய்த குறும்பை கேட்க ஆரம்பித்தாள் மீரா.