Chillzee KiMo Books - ஒரு நொடி! - லதா : Oru Nodi! - Latha

ஒரு நொடி! - லதா : Oru Nodi! - Latha
 

ஒரு நொடி! - லதா

சிறுகதை.

 

 

ஒரு நொடி!

  

“அம்மா!”

  

கொஞ்சலாக அழைத்து வந்த என் மூன்று வயது குழந்தையை பார்த்து புன்னகைக்க கூட நேரமில்லாமல் அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பினேன்.

  

“அம்மா ஈவ்னிங் வந்து பேசுறேன், கண்ணா”

  

வழக்கமான என் பதிலில் அந்த பிஞ்சு முகம் வாடிப் போனது கண்ணில் பட்டாலும் நிற்க நேரமில்லாமல அவசரமாக கிளம்பினேன். அலுவலகத்தில் இன்று முடிக்க வேண்டிய நிறைய வேலைகள் நிலுவையில் இருந்தன.

  

குழந்தையுடன் சில மணி நேரமாவது செலவிட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நானும் நினைப்பதுண்டு. ஆனால், இன்று நேற்று என்றில்லாமல எப்போதுமே இதே ஓட்டம் தான்.

  

அலுவலகத்தை அடைந்த பின் மற்றவை எல்லாம் என் கருத்தில் இருந்து மறைந்துப் போனது.

  

பின் மாலையில் சோர்வுடன் பேருந்தில் ஏறி வீட்டின் அருகில் இருந்த நிறுத்தத்தில் இறங்கினேன்.

  

அங்கே இருந்து பத்து நிமிடங்கள் நடக்க வேண்டும் என்ற நினைவே சோர்வை தந்தது.

  

வீட்டிற்குப் போய் வேலையாள் செய்து வைத்திருக்கும் இரவு உணவை சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்க முடிந்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், இன்று அலுவலகத்தில் முடிக்க முடியாமல் போன சில வேலைகள் காகிதங்களாக கையில் இருந்தன.

  

வேலையைப் பற்றி நினைக்கும் போதே காலையில் வாடிப் போன குழந்தையின் முகம் மனதில் நிழலாடியது. ஆனால் இன்று(ம்) அவளுடன் என்னால் நேரம் செலவிட முடியும் என்று தோன்றவில்லை.

  

மனதுள் அலுப்பு தோன்றியது.