Chillzee KiMo Books - தோழியா! என் காதலியா! - பிந்து வினோத் : Thozhiya! En Kadalaiya - Bindu Vinod

தோழியா! என் காதலியா! - பிந்து வினோத் : Thozhiya! En Kadalaiya - Bindu Vinod
 

தோழியா! என் காதலியா! - பிந்து வினோத்

இது ஒரு ஸ்வீட் குட்டிக் கதை :-)

 

 

தோழியா! என் காதலியா! 

  

ன் இப்படி என் உயிரை எடுக்குற? செத்துப் போயிடு! என்னால உன் இம்சையை தாங்க முடியலை!” விக்ரம் சத்தமாக கத்தினான்!

  

அதுவரை குனிந்திருந்த அவனின் மனைவி பாரதி முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். அவளின் கண்கள் கலங்கி இருந்தது... அது விக்ரமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவசரமாக மனைவி வைத்திருந்த மதிய உணவை எடுத்துக் கொண்டவன், கொஞ்சம் திகைப்பும் அதிர்ச்சியுமாக நின்றிருந்த குழந்தைகளையும், அவனுடைய அம்மா கல்பனாவையும் கண்டுக்கொள்ளாது நடந்து, காரை கிளப்பி கிளம்பினான்.

  

அன்று நடக்க வேண்டிய முக்கிய வேலைப் பற்றி எண்ணியப் படியே அவன் மாடியில் இருந்து இறங்கி வந்தால், பள்ளிக்கு செல்ல தயாராகி நின்றிருந்த இரண்டு குழந்தைகளும் ஒரு பக்கம் சத்தம் போட்டுக் கொண்டிருக்க, அவன் மனைவி பாரதியும், அம்மா கல்பனாவும் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். எதை பற்றிய விவாதம் என்று அவனுக்கு தெரியாது, யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்றும் அவனுக்கு தெரியாது ஆனால் அவனின் எண்ண ஓட்டம் தடைப் படவும் எப்போதும் போல் மனைவியிடம் எரிந்து விழுந்தான்.

  

அலுவலகத்தை அடைந்த விக்ரமிற்கு வேலையை தவிர வேறு எதுவுமே மனதில் தோன்றவில்லை. இது அவனுக்கே சொந்தமான நிறுவனம். அவன் அதை நிறுவி ஒரு வருடம் ஆகப் போகிறது. அவனுடைய உழைப்புக்கேற்ற வருமானம் வரத் தொடங்கி இருந்தது... ஆனாலும் அவன் இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையை எடுத்து செய்துக் கொண்டிருந்தான்.

  

அந்த பெரிய கட்டிட வளாகத்தில் மாடியில் வணிக வளாகம் (shopping mall) இருந்தது... கீழே அவனுடைய அலுவலகம் போல் வேறு சில அலுவலகங்கள் இருந்தன.

  

மதியம் அவனின் நண்பன் கோபால் வந்து உணவு உண்ண அழைக்கும் வரை முழு ஈடுபாடுடன் வேலை செய்துக் கொண்டிருந்த விக்ரம், பசி வயிற்றை கிள்ளுவதை உணர்ந்து நண்பனுடன் சென்றான்.

  

அந்த வளாகத்தில் இருக்கும் அலுவலகங்களில் பணி புரிபவர்கள் அமர்ந்து உண்ண தனியே கேண்டீன் இருந்தது. கோபால் ஒரு ஆடிட்டர். கடந்த சில வருடங்களாகவே அங்கே அலுவலகம் வைத்திருந்தான். அவனின் பரிந்துரையின் பேரில் தான் விக்ரம் இந்த வளாகத்தை அவனுடைய அலுவலகத்திற்கும் தேர்ந்தெடுத்திருந்தான்.

  

உணவு உண்ணத் கேண்டீன் நோக்கி நண்பனுடன் சென்ற விக்ரமிற்கு, என்ன என்று புரியாத ஏதோ ஒன்று அவனின் மனதை உறுத்தியது! என்னவென்று தொடர்ந்து யோசிக்க விடாது அதிகமாக பசித்தது.

  

அவர்களின் நண்பர்கள் குழுவோடு இருவரும் இணைந்துக் கொண்டு டிஃபன் பாக்ஸை திறந்தார்கள்.

  

“ஹா விக்ரம், இன்னைக்கு தக்காளி சாதமா? அப்பா என்ன வாசனை! உன் வைஃப் செம குக்ப்பா...” என்றாள் நந்தினி. நந்தினி கோபாலின் புது தொழில் பார்ட்னர்.

  

“அது என்னவோ உண்மை தான் நந்து... புது புது வெரைட்டி சமையல் வேற” என்றாள் தேவி.

  

“நீங்க ரொம்ப லக்கி விக்ரம்...”

  

“ஆமாம், அவன் லக்கி ஆனால் அவன் வைஃப் தான் அன்லக்கி...” என்றான் ஷாஜஹான்.