என்னமோ ஏதோ சிக்கித்தவிக்குது மனதில் - சசிரேகா
முன்னுரை:
மீன் சம்பந்தப்பட்ட தொழிலை ஆதாரமாக வைத்து வாழ்க்கையை ஓட்டும் நாயகனுக்கும் ஆச்சாரமான குடும்ப பின்னனியில் இருந்து வந்த நாயகிக்கும் நடுவில் ஏற்படும் கலப்படமான நிகழ்வுகளால் இறுதியில் இருவருக்குள்ளும் காதல் பிறந்ததா? என்பதே இக்கதையின் கருவாகும்.
கதையில் வரும் நாயகி ஆச்சாரமான குடும்ப பெண் என்பதால் அவர்கள் பேசும் மொழி சரியாக எழுத வராத காரணத்தால் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். அதே போல நாயகனின் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சுகளிலும் சாதாரண வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன். மன்னிக்கவும்.
இக்கதையில் குறையிருப்பின் சுட்டுக்காட்டுங்கள் எனது மற்ற கதைகளை போல இக்கதையையும் ஆதரவளியுங்கள். நன்றி.
பாகம் 1 ,
வியாழன் கிழமை,
கன்னியாகுமரி,
”கௌசல்யா அடியேய் கௌசல்யா எங்க போனா இவள் காலையில 6.00 மணி ஆகுது இன்னுமா அவள் குளிக்கறா” என திட்டிக் கொண்டே வீடு முழுக்க சுற்றி விட்டு பின்கட்டிற்கு வந்தார் கௌசல்யாவின் தாய் சிவகாமி. அங்கிருந்த கௌசல்யாவின் அக்கா ஸ்ரீவர்தினியிடம்,
”ஏன்டி உன் தங்கச்சியை பார்த்தியா” என கோபமாக கேட்க ஸ்ரீவர்தினியோ அப்போதுதான் குளித்துவிட்டு ஈரத்தலையை துவட்டிய படியே பேசினாள்.
”அம்மா அவள் குளிச்சிட்டு இருக்காள்மா”,
“எவ்ளோ நேரம் குளிப்பாளாம்”,
“இல்லம்மா இப்பதான் நான் குளிச்சிட்டு வந்தேன். இப்ப அவள் குளிக்க போனா சீக்கிரமா வந்துடுவாம்மா”,
”நல்ல நாள் அதுவுமா இப்படியே ஒவ்வொருத்தரா லேட் செஞ்சா எப்ப கோயிலுக்கு போய் அன்னதானம் முடிக்கறது”,
“அம்மா நீ மத்த வேலைகளை பாரும்மா அவள் வந்துடுவா”,
“என்னத்த வந்துடுவா ம்ஹூம் அவளை விட்டா பொழுது சாயறவரைக்கும் அந்த குளத்திலயே குளிச்சிட்டு இருப்பா” என சொல்ல அதைக்கேட்டு ஸ்ரீவர்தினி சிரித்தாள்.
“அம்மா அது ஸ்விம்மிங் பூல்” என்றாள் சிரித்தபடியே,
”எல்லாம் எனக்கு தெரியும் நீ வாயை மூடு அது ஒண்ணும் ஸ்விம்மிங் பூல் கிடையாது குளம்”,
“தெரியும்மா பெரிய பெரிய பணக்காரங்க வீட்டுல அழகா டிசைனா பூல் வைச்சிருப்பாங்க இங்க நம்ம வீட்ல ஆதிகாலத்து கொல்லைப்புறத்தில தொட்டி கட்டி விட்டிருக்கீங்க ஆனா அந்த தொட்டியை குளம்னு சொன்னீங்களே அது ஓவர்மா”,
“போதும் நிறுத்துடி இப்படியே ஈரத்தலையோட நிப்பியாக்கும் போ உன் பாட்டி அங்க சாம்பராணி போட்டு வைச்சிருக்காங்க அங்க போய் சீக்கிரமா தலையை காட்டிட்டு ரெடியாகற வழியை பாரு. ஈர உடையோட நின்னா காய்ச்சல் அடிக்கும் ஆம்பளைங்க வர்றதுக்குள்ள ட்ரஸ் பண்ணிக்க”,
“அம்மா பின் கட்டு வரைக்கும் எந்த ஆம்பளையும் வரமாட்டாங்க”,
“உன் அப்பா அண்ணா வருவாங்களே”,
“அம்மா அவங்க என்னிக்குமா இவ்ளோ பின்னாடி வந்திருக்காங்க இந்த வீடே ரெண்டு தெரு அடைக்கற அளவுக்கு கட்டிட்டீங்க முன் பக்கம் ஒரு தெரு பக்கவாட்டுல ஒரு தெரு இதுல பின்பக்கம் இந்த கட்டு இதுல குளம் வேற பொண்ணுங்க இருப்பாங்கன்னு யாரும் இந்த பக்கம் வரமாட்டாங்கம்மா”,
“சரி சரி நீ கிளம்பு நான் போய் உன் தங்கச்சியை கூட்டிட்டு வரேன் பெத்தது ரெண்டு ஒண்ணாவது என் பேச்சை கேட்டாதானே, காது வரைக்கும் பேச வேண்டியது செயல்ல ஒண்ணையும் காணலை” என திட்டிக்கொண்டே குளம் இருக்கும் பின்கட்டு பக்கம் செல்ல ஸ்ரீவர்தினி சிரித்தாள்,
”இன்னிக்கு அம்மாகிட்ட நல்ல டோஸ் வாங்கப் போறா பாவம் கௌசி” என சொல்லிக் கொண்டே தன் அறைக்கு சென்றாள் ஸ்ரீவர்தினி.