Chillzee KiMo Books - உனக்கென பிறந்தேனே...! - பிந்து வினோத் : Unakkena piranthene - Bindu Vinod

உனக்கென பிறந்தேனே...! - பிந்து வினோத் : Unakkena piranthene - Bindu Vinod
 

உனக்கென பிறந்தேனே...! - பிந்து வினோத்

Second edition.

கதையைப் பற்றி:

இது ஒரு சிம்பிள் லவ் story :-)

நமக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ, தெரியுதோ தெரியலையோ வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்துக்கு பின்னாலேயும் ஒரு பெரிய கனக்ஷன் இருக்குன்னு அப்பப்ப தோணும்...

அப்படி சிலர் வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகள் அவங்களுக்கே தெரியாமல் எப்படி மற்றவர்களை தாக்கம் செய்கிறது என்பது தான் இந்த சிம்பிள் கதையின் ஒன் லைன் கரு :-)

Things we lose have a way of coming back to us in the end...!

ஃபீல் குட் லவ் ஸ்டோரி! படித்து மகிழுங்கள்!

 

உங்களுக்கும் கதை பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!

- பிந்து வினோத்

 

 

  

அ – அகிலா...

  

கிலா மேக கூட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

  

தூரத்தில் தெரிந்த ஒரு மேகம் ஒன்றாக கட்டப் பட்ட பலூன்கள் போல காட்சி தந்தது...

  

மற்றொன்று யானையை போல இருந்தது...

  

இன்னுமொன்று மலையாக தோன்றியது...

  

அவள் பயணம் செய்துக் கொண்டிருந்த பேருந்து நகர, நகர... மேகங்களும் மாறி மாறி புது உருவம் கொண்டு அவளை மகிழ்வித்துக் கொண்டிருந்தன.

  

சிறுப் பெண் போல மேகங்களை ரசித்துக் கொண்டிருக்கும் அகிலா இருபத்தி ஐந்து வயதான கன்னிகை. கிண்டியில் இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் கிளார்க்காக பணி புரிகிறாள்.

  

அகிலா அழகியா, இல்லையா என்ற ஆராய்ச்சி நம் கதைக்கு தேவையில்லை எனவே அவளை உங்களுக்கு பிடித்தது போல கற்பனை செய்துக் கொள்ளுங்கள்...!

  

டிரைவர் அடித்த சடன் ப்ரேக்கில் மேகங்களிடம் இருந்து பார்வையை திருப்பியவள், பஸ் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருப்பதை கவனித்தாள்.

  

அடுத்தது திருமங்கலம்... அவள் இறங்க வேண்டிய இடம்...

  

அவளிடம் இருந்து ஒரு பெரிய பெருமூச்சு வெளிப்பட்டது.

  

உண்மையில் அகிலா இப்போது சந்தோஷத்தில் இருக்க வேண்டும்... மறுநாள் அவளுக்கு நிச்சயதார்த்தம்.

  

பெற்றவர்கள் பார்த்து பிடித்து தேர்வு செய்திருக்கும் மாப்பிள்ளை...

  

அவனின் பெயர் அஸ்வின்!

  

அஸ்வினிடம் அவளுக்கு எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை. பார்க்க நன்றாக இருந்தான். சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை... ஒரே மகன்... நல்ல குடும்பம்...

  

எல்லாம் கேட்க நன்றாக தான் இருந்தது... ஆனால் அவளுக்கு தான் ஏனோ அந்த நிச்சயத்தில் சந்தோஷம் ஏற்படவில்லை...

  

முதலில் இருந்தே அம்மா அப்பா விருப்பம் என்று விட்டு விட்டவளுக்கு, அஸ்வினின் அம்மா கமலா வரதட்சணையாக மூன்று லட்சம் கேட்கவும் மொத்தமாக கசந்துப் போனது.

  

அதுவும் எப்படி, அவளின் ஜாதகத்தில் ஏதோ குறை என்று ஐந்து லட்சத்தில் ஆரம்பித்து, பேரம் பேசி மூன்று லட்சத்தில் வந்து முடிந்திருந்தது.

  

அகிலா பெண்ணியவாதி எல்லாம் இல்லை, ஆனால் அவளின் திருமணத்திற்காக நடந்த பேரம் அவளை கோபப் பட வைத்தது. அஸ்வின் தன்னை மற்றவர்கள் ஏலம் விடுவதை பார்த்து அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்து ‘கடுப்பாக’ இருந்தது.

  

அன்றே அத்துடன் முடிந்தது அவளுக்கு இந்த திருமணத்தின் மீதான ஆவல்!