கம்பன் ஏமாந்தான்... - பிந்து வினோத்
பாரதி - நம் கதையின் கதாநாயகி! மற்றப் பெண்களிடம் இருந்து கொஞ்சமே கொஞ்சம் மாறுப்பட்டு இருப்பவள்.
இயல்பாக சென்றுக் கொண்டிருக்கும் அவளின் வாழ்வில், ஒரு 'விபத்தின்' மூலம் உள்ளே நுழைகிறான் நம் கதாநாயகன் விவேக்.
விவேக் பாரதியின் மீது காதல் வசப்பட, அதை ஏற்க மறுக்கிறாள் பாரதி!
விவேக்கின் உண்மை அன்பை புரிந்துக் கொண்டு பாரதி அவனின் காதலை ஏற்றுக் கொள்வாளா?
கதையைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே.. கற்பனை செய்தானே.... கம்பன் ஏமாந்தான்......
பாரதியின் கைபேசி சத்தமாக அலறியது. யார் அழைப்பது என பார்த்து விட்டு, கைபேசியை எடுத்து பேசியவளை பார்த்து முறைத்தாள் அவள் அருகில் அமர்ந்திருந்த பவித்ரா. பாரதி பேசி முடித்தவுடன்,
"என்ன ரிங்டோன் பாரு இது?" என்றாள் பவித்ரா சற்று கோபமாக.
"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... ரொம்ப கஷ்ட பட்டு கம்ப்யுட்டர்ல இருந்து எடிட் செய்து நானே அப்லோட் செய்தேன்..."
"சரி ரிங் வால்யூமாவது கொஞ்சம் கம்மியா வைக்கலாம் இல்லை... எல்லா பசங்களும் திரும்பி பார்த்து சிரிக்கிறாங்க...."
"இது சொன்னியே ரொம்ப சரி... நான் வால்யூம வேணா குறைக்கிறேன்....."
சொன்னபடி கைபேசியை எடுத்து நோண்டிய தோழியை பார்த்து சிரித்தாள் பவித்ரா. அவர்கள் இருவரும் சென்னையை விட்டு சற்று தள்ளி இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிகிறார்கள். இருவரும் கல்லூரி காலம் முதலே தோழிகள். முதலில் இந்த கல்லூரியில் பணிக்கு சேர்ந்தது பாரதி தான். இரண்டு வருடம் கழித்து, பவித்ரா திருமணமாகி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த பின் அதிர்ஷ்டவசமாக அதே கல்லூரியில் ஒரு பணியிடம் காலியாக இருக்கவும், பவித்ரா வெற்றிகரமாக விண்ணப்பித்து அந்த வேலையில் சேர்ந்தாள். கடந்த மூன்று வருடமாக இப்படி காலையிலும் மாலையிலும் கல்லூரி பேருந்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம். ஆனால் தோழிகள் இருவருக்கும் தினமும் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்ததால் அலுக்கவில்லை.
அது மட்டும் அல்லாது, இந்த மூன்று வருடங்களில், பவித்ராவின் கணவன் ரமேஷை அண்ணா என்றும், ரமேஷின் தாயார் கமலாவை அம்மா என்றும் அழைக்கும் அளவிற்கு பாரதி பவித்ராவின் குடும்பத்தோடு நெருக்கமாகி இருந்தாள்.
"ஏன் பவி, நீ இன்னைக்கு பர்ஸ்ட் இயர் சி செக்ஷனுக்கு மதியம் மேல போன தானே?"
"ஆமாம்... லஞ்சுக்கு அப்புறம் ஃபர்ஸ்ட் ஹவர்.. நானே கஷ்டப்பட்டு தூங்காம கிளாஸ் நடத்தினால் பாதி பேர் தூங்கி வழியுறாங்க..."
"உன் கூட பேசினாலே எனக்கு தூக்கம் வருது பின்ன பசங்க என்ன செய்வாங்க பாவம்..." என்று தோழியை கிண்டல் செய்தாள் பாரதி.
"உனக்கு என்னம்மா, வேலையில இருந்து ஹாஸ்டலுக்கு போனால் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, நைட் மெஸ்ல ரெடியா இருக்க டின்னர் வாங்கி சாபிட்டுட்டு நிம்மதியா தூங்கலாம், நான் அப்படியா?"
"அப்புறம்.. நீங்க என்ன போய் சமையல் செய்யவா போறீங்க? அங்க அம்மா ஏற்கனவே எல்லாம் ரெடியா வச்சிருப்பாங்க... இதுக்கு இவ்வளவு அலட்டல்..."
"சமையல் இல்லை பாரு... என்னோட சின்ன வாலு ஒன்னு இருக்கே… ஒரு நிமிஷம் இருக்க விட மாட்டாள்...."
"பின்னே அம்மா ரோல்ன்னா சும்மாவா?"
"அது என்னவோ சரி தான்டீ… ரொம்பவே கஷ்டம் தான்…"
"ஆமாம் சின்ன வாலு நித்திலான்னா பெரிய வாலு யாரு அண்ணாவா? இரு இரு அண்ணா கிட்ட சொல்றேன்...."
"அடி பாவி நான் எப்போ இந்த மாதிரி ஏதாவது சொன்னேன்...."
- Bindu
- Bindu Vinod
- Vinod
- பிந்து வினோத்
- பிந்து
- வினோத்
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee