கண்டேன் காதலை - நந்தினி.S
அனைவருக்கும் வணக்கம்.
"கண்டேன் காதலை" ஒரு ரொமான்டிக் காமெடி கதை.
என் தோழிக்கு இந்த கதையை டெடிகேட் செய்ய விரும்புகிறேன் :-)
கண்டேன் காதலை.
அத்தியாயம் 01.
பீப் பீப் பீப்!
பினி டைம் டு வேக் அப்!
பினி டைம் டு வேக் அப்!
பினி படுக்கையில் உருண்டு மேசை மேல் இருந்த மொபைலில் நேரம் பார்த்தாள்.
5:45am!
அவள் எழுந்திருக்க வேண்டிய நேரம். இருந்தாலும் அலாரத்தை பத்து நிமிடம் கழித்து எழுப்ப ஸ்நூஸ் செய்து வைத்தாள். மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள்!
பத்து நிமிடம் என்பது பத்து வினாடிகளில் கழிந்துப் போனது.
மீண்டும், பீப் பீப் பீப்!
பினி டைம் டு வேக் அப்!
பினி டைம் டு வேக் அப் என்றது அலாரம்.
வேறு வழி இல்லாமல் படுக்கையில் இருந்து எழுந்துக் கொண்டாள் பினி.
பல் துலக்கி, சில்லென்ற நீரில் குளித்தப் போது தூக்கம் எல்லாம் காணாமல் போனது.
புத்துணர்ச்சியுடன் டவலை சுற்றிக் கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
பினியுடன் அறையை பகிர்ந்துக் கொண்டிருக்கும் சிவகாமி எப்போதாவது தான் அங்கே வந்து தங்குவாள். அதனால் பினிக்கு அடித்தது லக்!
இரண்டுப் பேருக்கு சொந்தமான அந்த அறை முழுவதையும் அவளே பெரும்பாலான நாட்கள் பயன்படுத்திக் கொண்டாள்.
உடை மாற்றிக் கொண்டே டி.வி.யை இயக்கினாள். சன் டிவியில் காலை செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
எப்போதும் போல லஞ்சம், ஊழல் என்று செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. புதிதாக ஒரு செய்தியும் இல்லை. சேனலை மாற்றலாம் என பினி யோசிக்க தொடங்கியப் போது,
"இன்றைய சிறப்பு செய்தி – இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்கள்" என்று டிவி செய்தி வாசிப்பாளர் கூறினார். யார் அந்த பத்து பணக்காரர்கள் என்று தான் பார்ப்போமே என்று சேனலை மாற்றாமல் வைத்தாள்.
மற்றவர்களை போல இல்லாமல் இவர்கள் முதல் பணக்காரரில் இருந்து தொடங்கினார்கள். அம்பானி, அதானி, என்று பினி கேள்விப்பட்டிருந்த பெயர்கள் வரிசையாக வந்தது.
நடுவில், "அடுத்து வருபவரை பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கேள்வி படாமலும் இருக்கலாம். இவர் இன்றைய தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் ராஜா, விஷால்! ட்வென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி சாப்ட்வேர் நிறுவனத்தின் உரிமையாளரான விஷால் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறார்! இவர் நம் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!”
"என்னது?" பினி அவளையும் அறியாமல் அலறினாள்.
அரைகுறை உடையுடன் தொலைக்காட்சிப் பெட்டிக்கு பக்கத்தில் சென்றுப் பார்த்தாள். அங்கே, அவளைப் பார்த்து தொலைகாட்சி வழியே புன்னகைத்துக் கொண்டிருந்தான் அழகான இளம் விஷால்.