Chillzee KiMo Books - மௌனம் பேசியதே - சசிரேகா : Mounam pesiyathe - Sasirekha

மௌனம் பேசியதே - சசிரேகா : Mounam pesiyathe - Sasirekha
 

மௌனம் பேசியதே - சசிரேகா

முன்னுரை:

திருமணத்தை வெறுக்கும் நாயகன் மற்றும் நாயகியின் நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பல திட்டங்கள் தீட்டி அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைக்கும் கதைதான் இது.

 

 

 

மௌனம் பேசியதே – சசிரேகா,

  

பாகம் 1,

  

சென்னை,

  

ஒரு பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் தொழிலதிபர்கள் தங்களின் தொழில் விருத்தி மற்றும் பல்வேறு திட்ட ஆலோசனைகளை கலந்தாலோசிக்க பயன்படுத்தும் பிரத்யேகமான அறையில் ஒரு பெரிய சதி ஆலோசனை அன்று நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்த சதி ஆலோசனையில் கலந்துக் கொண்டவர்கள் மிகவும் பதட்டமாகவும் தங்கள் திட்டம் நிறைவேற வேண்டும் என்ற வெறியுடனும் இருந்தார்கள். ,

  

அந்த குளிர்சாதனம் அமைக்கப்பட்ட அறையிலும் வந்திருந்தவர்களின் முகத்தில் வேர்வைத் துளிகள் அரும்பி இருந்தது. ஒரு இடத்தில் அமராமல் அங்கும் இங்கும் நடந்தபடியே தங்கள் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு யோசனைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ,

  

அதிலும் ஒரு பக்கத்தில் 3 ஆண்கள் கௌதம், அசோக், ஆதவன் இருக்க அவர்களோ ஏதோ நாளையே உலகமே அழிந்துவிடும் என நினைத்து அதற்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்துவது போல பரபரப்புடன் இருக்க மறுபக்கம் 3 பெண்கள் ஹர்ஷா, ராதா, அஞ்சலி இவர்களும் பலமாக யோசித்தபடியே இருந்தார்கள், அனைவரின் யோசனைகளும் ஒரு விசயத்தை பற்றியே இருந்தது, எப்படி எப்படியோ யோசித்தும் சரியான திட்டம் வகுக்க முடியாமல் தத்தளித்தார்கள்,

  

அதிலும் ஒருவர் சொல்லும் திட்டம் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை குறிப்பாக ஆண்கள் சொல்வதை நிராகரித்தனர் பெண்கள், அதே போல பெண்கள் சொல்வதை கேட்டும் அதை ஏற்க மறுத்தார்கள் ஆண்கள், அதனாலேயே 3 மணி நேரமாக அந்த இடத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறுதியில்,

  

”போதும் இதோட நிறுத்திக்கலாம், ரொம்ப பேசியாச்சி, ரொம்ப யோசனையும் செய்தாச்சி, இனி யோசிக்க கூட முடியலை” என அசோக் பொறுமையிழந்து பொங்கி எழுந்து கத்தவும் மற்றவர்கள் அவனின் பேச்சைக் கேட்டு இயல்புக்கு வந்தார்கள்.

  

”சே வாழ்க்கையில எவ்வளவோ திட்டங்களை நான் நொடியில யோசிச்சி செயல்படுத்தியிருக்கேன் ஆனா, இன்னிக்கு ஒரு நல்ல திட்டம் கூட கிடைக்க மாட்டேங்குது, அப்படியே நான் யோசிச்சி வைச்ச திட்டத்திலும் பல ஓட்டைகள் இருக்கு, இப்படியே விட்டா வேலைக்காகாது, ஏதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகனும், வேற வழியில்லை ப்ரெண்ட்ஸ்” என  ஆதவன் சொல்ல அதற்கு ஹர்ஷாவோ,

  

”நீங்க சொல்றதும் சரிதான், சாதாரண விசயமா இருந்தா இந்நேரம் பல திட்டங்கள் வந்திருக்கும் ஆனா, இது ரொம்ப சென்ஸிட்டிவ் மேட்டர், கொஞ்சம் சொதப்பினாலும் 2 பேரோட வாழ்க்கையே கேள்விக்குறியாயிடும், அதனால ரிஸ்க் எடுக்காம பார்த்துக்கனும்” என்றாள் எச்சரிக்கையாக அதைக்கேட்ட ராதாவோ,

  

”ஓகே களத்தில இறங்கியாச்சி, ரிஸ்க் கண்டிப்பா வரும், அதுக்காக பின்வாங்கறது கோழைத்தனம்” என சொல்ல உடனே கௌதமோ,

  

”கரெக்ட், பின்வாங்கறது கோழைத்தனம்தான், அதனால நாம பின் வாங்க கூடாது, முன்னேறி போகனும், இந்த விசயத்தில எந்தளவுக்கு ரிஸ்க் இருக்குன்னா உண்மை மட்டும் வெளிய தெரிஞ்சது நாம 6 பேருமே காலி, அதை முதல்ல மனசுல வைச்சிக்குங்க ஓகே” என அவனும் எச்சரிக்கையுடன் சொல்ல அதற்கு அஞ்சலியோ,

  

”பயந்துக்கிட்டே இருந்தா வேலைக்காகாது, நம்மள்ல சிலருக்கு இதுல அனுபவம் இருக்கு, நம்ம அனுபவத்தை வைச்சே செயல்படுத்தலாமே, எதுக்காக புதுசு புதுசா திட்டங்களை உருவாக்கனும், வழக்கம் போல இருக்கற திட்டங்களை செயல்படுத்தினாலே ஒர்க் அவுட் ஆகாதா என்ன”,

  

”கண்டிப்பா ஆகாது அஞ்சலி” என்றாள் ராதா சட்டென,

  

”ஏன் ஆகாது முயற்சி செய்யலாமே” என அஞ்சலி சொல்ல அதற்கு ஹர்ஷாவோ,