Chillzee KiMo Books - காதல் தந்தாயே… உன் மொழியில் - சசிரேகா : Kadhal thanthaye... Un mozhiyil - Sasirekha

காதல் தந்தாயே… உன் மொழியில் - சசிரேகா : Kadhal thanthaye... Un mozhiyil - Sasirekha
 

காதல் தந்தாயே… உன் மொழியில் - சசிரேகா

புதிதாக நான் எழுதிய காதல் தந்தாயே… உன் மொழியில் எனும் குறுநாவலை உங்கள் அனைவருடன் பகிர்ந்திருக்கிறேன்.

 

 

 

காதல் தந்தாயே உன் மொழியில் – சசிரேகா,

  

ஒரு மாலை இளவெயில் நேரத்தில் தண்டவாளத்தில் இரயில் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது, அதில் பர்ஸ்ட் க்ளாஸ் ஏசி பெட்டியில் பயணம் செய்துக் கொண்டிருந்தான் ஆனந்த், அவனது முகமெங்கும் ஒரு சோகம், கையில் 3 மாத பெண் குழந்தை இனியாவை பத்திரமாக வைத்துக் கொண்டே எதை நினைத்தோ கவலைப்பட்டுக் கொண்டிருந்தான், இதில் ஏசி வேறு திடீரென பழுதானதால் ஒரே புழுக்கமாக இருக்க மிகவும் சிரமப்பட்டான் ஆனந்த்,

  

”என்னாச்சி ஏன் ஏசி வேலை செய்யலை” என சொல்லிக் கொண்டே தன் மகளைப் பார்த்தான்,  முதல் வேர்வை துளி அவளின்  நெற்றியில் இருப்பதுக் கண்டு துடித்துப் போனான்,

  

”ஆஹா என்ன இது, என் குழந்தைக்கு வேர்க்குதே, இந்நேரம் பார்த்து ஏசி வேலை செய்யலையே எப்படி இதை சரியாக்கறது, யாரையாவது பார்க்கிறேன்” என சொல்லிக் கொண்டே தனது மகளை பக்கத்தில் இருந்த சிறிய தொட்டில் போன்ற கூடையில் வைத்துவிட்டு,

  

”இனியா கவலைப்படாதம்மா நீ இங்கயே இரு, நான் இப்ப வந்துடறேன் ஏசியை சரியாக்கிடலாம்” என அவளிடம் பேசிவிட்டு கதவை திறந்துக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்தான்.

  

இரயில் ஓடிக் கொண்டிருந்தது, அந்த வராண்டாவில் யாருமில்லை, டிடிஆரைக்கண்டு பேச எண்ணியவன் வலது பக்கமாக சென்றான், அங்கு அவர் இல்லை சரி என திரும்பி மறுபக்கம் சென்றுப் பார்த்தான், அங்கும் அவர் இல்லை, எங்கெல்லாம் தேடுவது, யாரிடம் உதவி கேட்பது என தெரியவில்லை,

  

இதில் ஆனந்த் தனது வேலையில் ஏற்பட்ட இடமாற்றம் காரணமாக ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் சென்றுக் கொண்டிருந்தான். இப்போது இந்த பயணம் கூட கஷ்டமாகிப் போகவே எரிச்சலானான்.

  

ஏற்கனவே மனைவியை பறிகொடுத்த துக்கத்தில் இருந்தான், மகளை எப்படி வளர்ப்பது என தெரியாமல் கவலையில் இருந்தான், இதில் ஏசி பிரச்சனை வேறு, போதாக்குறைக்கு வேலைக்கு சென்று சேர வேண்டும், எத்தனை பிரச்சனைகளைதான் அவன் சமாளிப்பான், அதனால் புலம்பிக் கொண்டே அந்த பக்கம் இந்த பக்கம் என அலைந்து களைத்து ஓய்ந்துப் போய் தனது பெட்டிக்கே வந்தான்.

  

அங்கு அவனது குழந்தை இனியாவோ தனிமையில் புழுக்கத்தில் அழுதுக் கொண்டிருக்க அதைக்கண்டு திடுக்கிட்டவன் ஓடிச் சென்று தன் மகளிடம் பேசினான்,

  

”இனியா செல்லம், பயப்படாதம்மா அப்பா நான் வந்துட்டேன் அழாதம்மா” என பேச பேச இனியா தன் அழுகையை குறைத்தது, ஆனாலும் அவளுக்கு பயங்கரமாக வேர்க்க அதனாலேயே அவள் அசைய அதைப் புரிந்துக் கொண்ட ஆனந்தும் உடனே ஜன்னலை திறந்தான், வெளி காற்று பயங்கரமாக அடித்தது, அதில் மாசு இருக்கலாம் அதனால் குழந்தைக்கு ஏதாவது வந்துவிடுமோ என பயந்து மீண்டும் ஜன்னலை சாத்திவிட்டு குழந்தையிடம் வந்தான், அவளை சுற்றியிருந்த துணிகளை அவிழ்த்துவிட்டுப் பார்த்தான், உடலெங்கும் வியர்வை துளிகள் இருக்க, அதை நல்ல துணியால் துடைத்துவிட்டான், இப்போது இனியாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

  

”சே என்னால என் குழந்தையை சரியா பார்த்துக்க முடியலையே, சித்தாரா மட்டும் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமே, பாவம் இனியா என்கிட்ட அவள் கஷ்டப்படறாளே” என புலம்பிக் கொண்டே தன் மகளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

  

ஏசியின்றியும் ஜன்னல் திறக்காமலும் போக போக புழுக்கம் அதிகமாகி இப்போது ஆனந்தும் இனியாவும் வியர்வையில் குளிக்கலானார்கள், அதில் அவனுக்கு எரிச்சலாக இருந்தது, குழந்தையோ மீண்டும் அழத்தொடங்கியது, அவளை எப்படி சமாதானம் செய்வது என தெரியாமல் திகைத்தான்.

  

தாய் இல்லாத குழந்தையை பத்திரமாக வளர்க்குமாறு எச்சரிக்கை செய்தார்கள் மருத்துவர்கள், அதனால் மறுபடியும் டிடிஆரை கண்டுபிடித்து அழைத்துவரச் சென்றான், அவனது கடும் முயற்சியில் டிடிஆர் சிக்கினார் அவரிடம் ஏசி பிரச்சனையை எடுத்துக்கூறி கையோடு அவரை அழைத்துக் கொண்டு தனது பெட்டிக்கு வரப் பார்த்தான், ஆனால் டிடிஆரோ வரமறுத்தார்,