பாசமென்னும் தீபமேற்றும் இல்லம் தெய்வீகம் - சசிரேகா
முன்னுரை
அண்ணன் தம்பி பாசத்திற்கு இலக்கணமாக திகழ்ந்த இருவர், அக்கா தங்கை பாசத்திற்கு முன் கட்டுண்டுப் போனார்கள். அனைவரின் பாசத்திற்கும் பிரிவு வராமல் ஒற்றுமையாக இருக்க பல முயற்சிகள் செய்தார்கள். அதன்படி வாழ்ந்து காட்டினார்களா அவர்களின் பாசம் நிலைத்ததா என்பதே இக்கதையாகும்.
Chillzee Reviews
Check out the Paasamennum deepametrum illam deiveegam story reviews from our readers.
பாசமென்னும் தீபமேற்றும் இல்லம் தெய்வீகம் – சசிரேகா.
பண்ரூட்டி,
பலாமர தோட்டத்திற்கு வரும் பாதையில் 80 வயதான பாட்டி ஒருவர் தனது முதிய வயதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஏதோ பருவமங்கை ஓடிவருவது போல குடுகுடுவென ஓடி வந்துக் கொண்டிருந்தார், அவரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி அவரைப் பார்த்தவர்கள் கூட,
”ஏய் அப்பு தாய்கிழவி என்னத்துக்கு இம்புட்டு வெரசா ஓடிக்கிட்டு இருக்கு”,
”தெரியலையே முகத்தை பார்த்தா சந்தோஷமா இருக்கு ஏதோ நல்ல விசயம் நடந்திருக்கு”,
”ஒருவேளை ஓடிப்போன புருஷன் திரும்பி வந்துட்டான்னு சந்தோஷப்படுதோ“,
”அட நீ ஒண்ணு அந்தாளு ஓடிப்போனதுக்காக சந்தோஷப்பட்டிச்சி இந்த கிழவி, திரும்பி வந்தா இப்படியா சந்தோஷப்படும் வேற என்னவோ இருக்கு, வா போய் தெரிஞ்சிக்கலாம்” என சொல்லிக் கொண்டே வேலையாட்கள் இருவர் பாட்டியை பின்தொடர்ந்து சென்றார்கள்.
பாட்டியும் தோப்பின் ஆரம்ப எல்லைக்கு வந்து நின்று மூச்சிரைத்தவர் சில நொடிகள் கழித்து இயல்பாகி,
”எலேய் பாண்டியா” என சத்தமாக அழைத்தார், அதைக் கேட்டு முருகவேல் பாண்டியனும் ரத்தினவேல் பாண்டியனும் சத்தம் வந்த திசையில் என்னவென பார்த்தார்கள்,
”ஏய் கிழவி என்னத்துக்கு இப்படி வந்து நிக்கற என்ன சங்கதி” என முருகவேல் கேட்க அதற்கு பாட்டியோ ஏதும் சொல்லாமல் சிரிப்புடனே அவர்களை தேடிச் சென்றார்.
முருகவேல் பாண்டியனோ தனது 10 வயதான மகன் ரத்தினவேல் பாண்டியனிடம்,
”எலேய் ரத்தினவேலு கிழவி வர்ற விதமே தினுசா இருக்குல்ல சிரிச்ச மேனிக்கு வருதே”,
”ஆமாங்கய்யா ரொம்ப சந்தோஷமா இருக்கு போல”,
”என்னவா இருக்கும்”,
”தெரியலைங்கய்யா வரட்டும் கேட்போம்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த பாட்டியும் அவர்களிடம் வந்து கலகலவென சிரித்தார், அந்த சிரிப்பைக்கண்டு முருகவேல் பாண்டியனுக்கும் ரத்தினவேல் பாண்டியனுக்கும் ஏதும் விளங்கவில்லை,
”ஏய் கிழவி, என்னத்துக்கு இந்த சிரிப்பு சிரிக்கற, என்னன்னு சொல்லிட்டுதான் சிரியேன்” என சொல்ல அவரோ ரத்தினவேலைப் பார்த்து,
”ஏய் அப்பு நீ என்ன இங்க பள்ளிக்கூடத்துக்குப் போகலையா நீ”,
”இன்னியில இருந்து ஒரு மாசத்துக்கு பள்ளிக்கூடம் லீவு”,
”ஓ சரி சரி”,
”ஆமா என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க”,
”பின்ன எவ்ளோ நல்ல விசயம் நடந்திருக்கு, அதான் சந்தோஷமா இருக்கேன்”,
”அப்படி என்ன நல்ல விசயம் நடந்திருக்கு ஊருக்குள்ள ஏதாவது” என முருகவேல் கேட்க,
”ஊருக்கென்ன கேடு அது எப்பவும் போல கிடக்கு, அதை விட்டுத்தள்ளு பாண்டியா நான் உன் வீட்டு விசயத்தை சொல்ல வந்தேன்”,
”அதுசரி என் வீட்டுக்கென்ன நல்லாதானே இருக்கு”,