Chillzee KiMo Books - நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் - சசிரேகா : Naan enthan jeevanai nerinil parthen - Sasirekha

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் - சசிரேகா : Naan enthan jeevanai nerinil parthen - Sasirekha
 

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் - சசிரேகா

முன்னுரை
விருப்பத்திற்கு மாறான பெண்ணை மணக்க மறுக்கும் நாயகனும் அதனால் உண்டான அவமானத்தில் வாடும் நாயகியோ தனக்கு நடந்த அவமானத்திற்காக தான் விரும்பிய நாயகனை பழி வாங்க 5 முறைகளை கையாளுகிறாள், அவற்றில் இருந்து தப்பித்தானா நாயகன், நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டு அவளின் கரம் பிடித்தானா இல்லையா என்பதே இக்கதையாகும்.
 

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் – சசிரேகா.

  

பாகம் – 1,

  

மதுரை,

  

”ஏம்பா சந்திரா, இது உனக்கே நியாயமா இருக்கா, கடந்த 3 வருஷமா நானும் பார்க்கறேன், நீ கொண்டு வர்ற ஜாதகத்தில ஒண்ணாவது எங்களுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கா, எல்லாத்திலயும் குறையாவே கொண்டு வர்றியேப்பா” என பாட்டி மங்கையற்கரசி கோபமாக கேட்க அதற்கு எதிரில் இருந்த புரோக்கர் சந்திரனோ,

  

”ஆமாம் உங்க பேத்தி ப்ளஸ்டூ முடிச்சப்ப என்னை கூப்பிட்டீங்க, நானும் 3 வருஷமா இங்க வந்துப் போறேன், எத்தனை ஜாதகம் கொடுத்தேன், இந்த 3 வருஷத்திலயே தமிழ்நாடு முழுக்க இருக்கற பையன்களோட ஜாதகத்தைக் கொடுத்துட்டேன், ஒவ்வொரு ஜாதகத்தையும் வாங்கறீங்க, ஒரு வாரம் கழிச்சி வான்னு சொல்றீங்க, அதுக்குள்ள உங்க வீட்ல இருக்கற வேலைக்காரங்களை விட்டு மாப்பிள்ளையைப் பத்தி நல்லா விசாரிக்கிறீங்க, நான் வந்ததும் வரனை பத்தி குறை சொல்லி இது வேஸ்ட்ன்னு சொல்றீங்க, ஒண்ணு கூடவா உங்களுக்குப் பிடிக்கலை”,

  

“ஆமாம் நீ கூட போன வாரம் ஒரு ஜாதகத்தை கொண்டாந்து கொடுத்த, ஆளுங்களை விட்டு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது, அவனுக்கு புகை பிடிக்கற பழக்கம் இருக்குன்னு, என் பேத்தி கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை எந்த தப்பான பழக்கமும் இல்லாதவரா இருக்கனும், இப்படி அவன் புகை பிடிச்சி கேன்சர் வந்து செத்துட்டா என் பேத்தி நிலைமை என்னாகிறது” என அலற,

  

“அம்மா இந்த காலத்தில யாரு புகை பிடிக்காம இருக்காங்க”,

  

“ஏன் என் பையன் நடராஜன் இருக்கானே ஒழுக்க சீலன், அவனை போல மாப்பிள்ளையை கொண்டாந்து கொடு”,

  

”நல்ல வேளை உங்க புருஷன் போல மாப்பிள்ளையை பாருன்னு சொல்லாம போனீங்களே அதுவே சந்தோஷம்”,

  

“சந்திரா எதுக்கு இப்ப உயிரோட இல்லாதவரைப் பத்தி பேசற, உன்னால ஒழுங்கா ஒரு மாப்பிள்ளையை பார்க்க முடியாதா”,

  

“இதப் பாருங்கம்மா, உங்க பேத்தி காலேஜ் படிக்க ஆரம்பிச்சப்ப நான் ஜாதகம் கொடுக்க ஆரம்பிச்சேன், இப்ப 3 வருஷம் ஆகுது, பாப்பாவும் காலேஜ் முடிக்கப் போகுது. இதுவரைக்கும் நான் 100 ஜாதகங்களை கொடுத்துட்டேன், பொறுமையா ஒவ்வொரு ஜாதகத்தையும் பார்த்து ரிஜக்ட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க, உங்களுக்காக தமிழ்நாடு முழுக்க எல்லா இடத்திலயும் நான் ஜாதகம் கொண்டாந்துட்டேன், இனிமே எங்கயும் மாப்பிள்ளை இல்லை தமிழ்நாடு விட்டு அடுத்த ஸ்டேட்டுக்குதான் நான் போகனும்” என அவன் அலுத்துக் கொள்ள பாட்டியோ,

  

”ஓ என்ன அலுத்துக்கற, இப்ப நீ வாழற இந்த சொகுசான வாழ்க்கை யாரால கிடைச்சதுங்கற, எல்லாம் எங்களாலதானே, 3 வருஷம் முன்னாடி பஞ்ச பரதேசி போல ஓட்டை சைக்கிள்ல ஓட்டிக்கிட்டு என் வீட்டு முன்னாடி வந்து நின்னு ”அம்மா”ன்னு பரிதாபமா கூப்பிட்டியே அதை மறந்துட்டியா, சரி நம்ம வீட்லயும் பொண்ணு இருக்கே, இப்ப இருந்து பார்த்தாதானே நல்ல மாப்பிள்ளை கிடைப்பான்னு நானும் உன் கிட்ட பொறுப்பு கொடுத்தேன். ,

  

நீயும் அக்கம் பக்கம் எல்லாம் பார்த்து ஜாதகம் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போன ஆனா என்னாச்சி, நாங்க வரனைப் பத்தி விசாரிச்சப்ப தப்பாதானே சொன்னாங்க, ஒவ்வொரு முறையும் நீ தர்ற வரனோட ஜாதகத்தை சரிபார்த்து, அந்த பையனோட குடும்பம் சொந்த பந்தம், பழக்கவழக்கம் முதற்கொண்டு எல்லாத்தையும் பக்காவா விசாரிச்ச பின்னாடிதானே நாங்க வேணாம்னு சொல்றோம், என்னவோ அவங்களை கூப்பிட்டு பொண்ணு பார்க்க வைச்சி, அப்புறம் நாங்க வேணாம்னு ஒண்ணும் சொல்லலையே”,

  

“எல்லாம் சரிதான் அம்மா, ஆனா இப்ப வரைக்கும் ஒரு பையனையுமா உங்களுக்குப் பிடிக்கலை, நீங்க ரிஜக்ட் பண்ண பையன்களுக்கு இப்போ கல்யாணம் ஆகி அவங்களுக்கு குழந்தையே பிறந்துடுச்சி, அவங்க எல்லாம் நல்லபடியா வாழ்க்கை நடத்தலையா என்ன”,