புரியாத புதிர் தான் காதல் - சசிரேகா : Puriyatha puthir than kadhal - Sasirekha
 

புரியாத புதிர் தான் காதல் - சசிரேகா

முன்னுரை
முன்பின் தெரியாத இருவருக்கும் திடீரென ஏற்பட்ட விபத்தினால் அனைத்து நினைவுகளும் இழந்து தங்களை காதலர்கள் என தவறாக எண்ணி திருமணம் செய்துக்கொண்டு கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்கிறார்கள், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பழைய நினைவுகள் திரும்பி வரவும் அவர்களின் வாழ்க்கை என்னவானது? அதன்பின் வந்த பிரச்சனைகளை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட காதலும் கணவன் மனைவி என்ற உறவும் கேள்விக்குறியாகிவிட அவர்களின் புதிரான காதலுக்கு விடையை கண்டறிந்தார்களா இல்லையா? வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா? என்பதே இக்கதையாகும்.

 

 

புரியாத புதிர்தான் காதல் – சசிரேகா.

  

கேரளா,

  

ஒரு குக்கிராமத்தில் விடிகாலை பொழுதில் அங்கு வாழ்ந்த மக்கள் வழக்கமாக அவர்கள் செய்யும் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்கள்,  அந்நேரம் பலத்த சத்தம் கேட்டது, இடியுடன் கூடிய மழை பொழியத் தெடங்கவும் அதில் மக்கள் அனைவரும் பதட்டமானார்கள், காரணம் இப்படி மழை பெய்தால் ஆற்றில் வெள்ளம் ஓடி தங்களது குடிசைக்குள் நீர் புகுந்துவிடும், அதனால் சட்டென தங்களது குடிசைக்குள் சென்று தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டனர், ஆற்று நீர் உள்ளே வந்தாலும் அதற்காக என்னென்ன செய்யலாம் என  ஏற்கனவே வெள்ளம் வந்த போதெல்லாம் என்ன செய்தார்களோ அதையே இப்போதும் செய்துக் கொண்டிருந்தார்கள், நாகரிகத்தின் சாயல் படாமல் இன்னும் பழமையாகவே வாழ்ந்து வந்தார்கள்,

  

மழை நின்றதும் மற்ற வேலைகளைப் பார்க்கலாம் என எண்ணினார்கள், சிறிது நேரத்தில் பெரிய இடி சத்தம் கேட்டது, அதைக் கேட்கவும் இடி என சிலர் நினைத்தார்கள், சிலரோ பயந்தார்கள், அந்த சத்தத்தை தொடர்ந்து ஏதோ ஒரு பொருள் மலையில் இருந்து உருண்டு விழுவது போன்ற சத்தம் கேட்கவும் மக்களுக்கு அச்சம் வந்தது,

  

அவர்கள் என்னவோ ஏதோவென பயத்தில் இருக்க அதே சமயம் கார் ஒன்று உருண்டபடியே    மலையடிவாரத்தில் இருந்த இக்கிராமத்தின் ஒரு பக்கமாக வந்து விழுந்தது, நல்லவேளையாக அந்த பக்கத்தில் மக்கள் யாருமில்லாத காரணத்தால் உயிர்சேதம் ஏற்படவில்லை, கார் விழுந்த வேகத்தில் தலைகீழாக திரும்பியது, காரே பயங்கர சேதப்பட்டு இருக்க அதில் உள்ளே பயணப்பட்டு வந்திருந்த இருவரின் நிலைமையோ மிகவும் பயங்கரமாக இருந்தது, இருவருக்கும் ஏகப்பட்ட அடிகள், ரத்தம் வழிய வழிய பேச்சு மூச்சின்றி கிடந்தார்கள்.

  

சட்டென நடந்த நிகழ்வால் முதலில் கிராமத்துக்காரர்கள் பயந்து விலகினார்கள், பின் மெதுவாக அந்த காரிடம் சென்று பார்க்கையில் உள்ளே ஆண் பெண் என இருவர் இருப்பதையும் அவர்களுக்கு பலத்த காயம் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ந்து துரிதமாக அவர்களை காப்பாற்ற முடிவு எடுத்தார்கள், அதன்படி நான்கைந்து கிராமத்தாள்கள் ஒன்றாக சேர்ந்து கவிழ்ந்திருந்த காரை சரியாக நிமிர்த்தி வைத்தார்கள்,

  

சிலர் காரின் கதவை திறக்க முயன்றார்கள், சிலர் உடைந்திருந்த கண்ணாடி வழியாக உள்ளிருந்தவர்களை எழுப்ப முயன்றார்கள், உள்ளிருந்தவர்கள் அசைவற்று இருக்கவும் எப்படியோ கார் கதவை உடைத்து அவர்கள் இருவரையும் காப்பாற்றினார்கள், ஏதோ தங்களுக்கு தெரிந்த மூலிகை மருத்துவத்தை வைத்து அவர்கள் இருவரின் காயங்களுக்கும் மருந்திட்டார்கள், ரத்த போக்கை நிறுத்தினார்கள், உடலில் ஏகப்பட்ட இடங்களில் காயங்கள் பட்டாலும் இருவரின் தலையிலும்தான் பலத்த அடியே, கார் குப்புற விழுந்தால் காரின் டாப் ஷீட்டில் இருவரின் தலையும் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது, அங்கும் மருந்திட்டு கட்டுக்கட்டிவிட்டனர் கிராமத்தினர்.

  

24 மணி நேரமாகியும் இருவரும் கண் திறக்காமல் அசைவில்லாமல் இருக்கவே கிராமத்தினருக்கு பயமே வந்தது, தலையில் அடிபட்ட காரணத்தாலும் திடீரென்ற அந்த விபத்தை எதிர்கொண்டதாலும் அவர்கள் இருவருமே கோமாவிற்கு சென்றுவிட்டார்கள், அவர்கள் கோமாவிற்கு சென்றது கூட கிராமத்தினருக்கு தெரியவில்லை.

  

அதோடு இவர்களின் நிலைமையை பற்றி ஒரு கிராமத்தான் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் சொல்லிவைத்தான், காவல் அதிகாரிகளும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஆராய்ந்தார்கள், அந்த கார் அதிகளவு சேதமானதால் உருப்படியாக எந்த தகவலையும் அவர்களால் அறிய இயலவில்லை, காரில் இருந்த பொருட்களை கிராமத்தினர் தனியாக எடுத்து வைத்திருந்தார்கள், அதில் ஒரு தாலியும் இருவரின் துணிப்பையும் இருந்தது, அந்த தாலியை வைத்து இவ்விருவரையும் கணவன் மனைவி என்று முடிவு எடுத்தார்கள் காவல்துறையினர், அந்த துணிப்பையில் இருந்து எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை துணிகள் மட்டுமே இருந்தது.

  

காயம் பட்ட இருவரையும் முறையாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை செய்து பார்த்ததில் அவர்கள் கோமாவில் இருப்பதாக சொல்லிவிட்டனர், அவர்களை பற்றிய தகவல்களை மற்ற காவல் நிலையத்திற்கு அனுப்பினார்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட யாராவது வருவார்களா என எதிர்பார்த்தார்கள் காவல் துறையினர்,