வல்லமை தந்து விடு - Chillzee Originals
அமுதவள்ளியிடம் தேவைக்கு அதிகமான பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது! இருந்தாலும் அவள் விரும்புவதெல்லாம் அமைதியும், அவளுக்கே அவளுக்கான ஒரு இதயமும் தான்.
அப்படி ஒரு இதயமாக தான் பிரணயை அமுதவள்ளி நம்புகிறாள். ஆனால் பிரணய் வேறு திட்டங்கள் வைத்திருக்கிறான்.
இந்த நேரத்தில் எதிர்பாராமல் கதிரை அமுதவள்ளி சந்திக்க நேர்கிறது.
அமுதவள்ளி விரும்பும் வாழ்வு அவளுக்கு கிடைக்குமா?
அத்தியாயம் 01
"அம்மு! அம்மு! அம்மு!"
நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருந்த அமுதவள்ளியின் காதுகளுக்கு எங்கேயோ கேட்ட அந்த அழைப்பு தாலாட்டு பாடுவதுப் போல இருந்தது. ம்ம்ம் ம்ம்ம் என்று முனகிக் கொண்டே தூங்குவதை தொடர்ந்தாள்.
இப்போது கதவு சத்தமாக தட்டப் பட்டது. கூடவே திரும்பவும் "அம்மு! அம்மு! அம்மு!" என்ற அழைப்பும் தொடர்ந்தது.
கதவு சத்தம் அமுதவள்ளியை விழிக்க வைத்தது. யார் அது? கேள்வியுடனே எழுந்து அமர்ந்தாள்.
மீண்டும் "அம்மு! அம்மு! அம்மு!" என்ற குரல் கதவுக்கு வெளியே இருந்துக் கேட்டது.
அது ராதாவின் குரல். சித்தி எதற்கு அவளை எழுப்புகிறார்கள்?
"வரேன் சித்தி" – குரல் கொடுத்து விட்டு எழுந்துப் போய் கதவை திறந்தாள்.
"அம்மு, ஆயுஷ் கார் ஆக்சிடன்ட்டாம்" – அவள் கதவை திறக்க காத்திருந்தவளாக அவசர அவசரமாக ஒப்பித்தாள் ராதா.
"ஆயுஷுக்கு என்ன ஆச்சு? என்ன நடந்தது?" – புரியாமல் விசாரித்தாள் அமுதவள்ளி.
"அவனுக்கு ஒன்னும் ஆகலை அம்மு. எப்போவும் போல அவனோட வேஸ்ட்டா போன ப்ரெண்ட்ஸ் கூட குடிச்சுட்டு வந்திருக்கான். ஹைவேல முன்னாடி போன இரண்டுக் காரை இடிச்சிருககாங்க. நல்ல வேளை யாருக்கும் பெரிய அடி இல்லை. இருந்தாலும் சுத்தி இருந்த ஆளுங்க இவங்க மூணு பேரையும் அங்கேயே பிடிச்சு வச்சு போலீஸ் கிட்ட மாட்டி விட்டுட்டாங்க. இப்போ ஆயுஷ் ஸ்டேஷன்ல இருக்கான். என்ன அம்மு செய்றது?"
அமுதவள்ளி தூக்க கலக்கத்துடனே யோசித்தாள்.
"நான் பார்த்துக்குறேன் சித்தி. நீங்க கவலைப் படாதீங்க" – அமுதவள்ளி
"சாரிடா நீயே ரொம்ப லேட்டா தூங்கின மாதிரி இருந்துச்சு. எனக்கு வேற என்ன செய்றதுன்னு தெரியலை. உன்னை விட்டா வேற யார் கிட்ட போய் கேட்குறது?"
"நான் இருக்கும் போது நீங்க யார் கிட்டேயும் கேட்கக் கூடாது சித்தி. நான் பார்த்துக்குறேன். நீங்க டென்ஷன் இல்லாம படுத்து தூங்குங்க" – அமுதவள்ளியின் குரல் மஹாராணியைப் போல கம்பீரமும், அதிகாரமும் கலக்க ஒலித்தது.
ராதா அதற்கு மேல் பேசவில்லை. அமுதவள்ளி சொன்னதை செய்வாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அவள் வயிற்றில் பிறந்த ஆயுஷ் அமுதாவில் ஒரு சின்ன பங்காவது இருக்க மாட்டானா? அவளுக்கு பெருமூச்சு தான் வந்தது.
அமுதவள்ளி வக்கீல், இரண்டு ஊர் கவுன்சிலர்கள் என்ற படையோடு போலீஸ் ஸ்டேஷனுள் நுழைந்தாள். நேரம் விடிகாலை மூன்று ஆகி இருந்தது. ஸ்டேஷனில் பெரும்பாலானவர்கள் தூங்கி வழிந்துக் கொண்டிருந்தார்கள்.
பெரிய மீசையுடன் இருந்த இன்ஸ்பெக்டர் மட்டும் மேஜை மீதிருந்த பேப்பரில் கவனத்தை வைத்திருந்தார்.
"என்ன இன்ஸ்பெக்டர் எப்படி இருக்கீங்க?" – கவுன்சிலரின் கணீர் குரல் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியது.
"கவுன்சிலர் சார், நீங்க என்ன சார் இந்த நேரத்துல?" – இன்ஸ்பெக்டர் மரியாதையுடன் விசாரித்தார்.