Chillzee KiMo Books - கனவுதான் இதுவும் கலைந்திடும் - சசிரேகா : Kanavu thaan ithuvum kalainthidum - Sasirekha

கனவுதான் இதுவும் கலைந்திடும் - சசிரேகா : Kanavu thaan ithuvum kalainthidum - Sasirekha
 

கனவுதான் இதுவும் கலைந்திடும் - சசிரேகா

சசிரேகாவின் புதிய குறுநாவல்.
 

கனவுதான் இதுவும் கலைந்திடும்.

  

சென்னை.

  

”காவ்யா காவ்யா” என கோபமாக அழைத்தபடி வந்தார் மஞ்சுளா.

  

”நான் இங்க இருக்கேன் அத்தை” என காவ்யாவும் தனது ப்ளாட் பால்கனியில் வளர்க்கும் ரோஜா செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க அவ்விடம் வந்த மஞ்சுளாவோ.

  

”உனக்கு கொஞ்சம் கூட பொறுப்புங்கறதே இல்லை, எந்த வேலை முக்கியம், அதை முதல்ல செய்யாம இங்க வந்து செடிக்கு தண்ணீர் ஊத்தற” என கோபம் கொள்ள அதற்கு காவ்யாவோ அவரின் முகத்தைப் பார்த்தாள், சிடுசிடுவென இருந்தார் மஞ்சுளா. .

  

அதைக்கண்டதும் தடுமாறியவள் அந்த செடியில் இருந்த முள்ளில் தனது விரலை வைத்துவிட அது நறுக்கென குத்திவிட்டது, அந்த சின்ன காயத்தை பொறுத்துக் கொண்டு மஞ்சுளாவின் முன் வந்து நின்று.

  

”இப்ப என்னாச்சி அத்தை” என அமைதியாக காவ்யா கேட்க.

  

”என்ன ஆச்சா பால் பாக்கெட் கொண்டு வராம என்ன செய்ற” என சத்தம் போட.

  

”இதோ அத்தை செடிக்கு தண்ணி ஊத்திட்டு போய் கொண்டு வரேன்”.

  

”பெரிய தாய்வீட்டு சீதனம் இது, இதுக்கு ஒரு நாள் தண்ணி ஊத்தலைன்னா என்ன வீணாவா போயிடும், சே யார் செய்த பாவமோ அதான் எனக்கு இப்படியொருத்தி  மருமகளா வந்திருக்கா, எல்லாம் என் தலை எழுத்து” என புலம்பியவர்.

  

”இதுவா முக்கியம் எல்லாரும் எழுந்திடுவாங்க போ போய் பால் பாக்கெட் கொண்டா போ” அதட்டிவிட்டு செல்ல காவ்யாவும் பெருமூச்சுவிட்டுவிட்டு செடிக்கு தண்ணீர் பாய்ச்சுவதை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறினாள். .

  

அவளது ப்ளாட் வாசல் கதவுக்கு பக்கத்தில் இருந்த சுவற்றில் காலிங்பெல் இருக்க அதற்கு பக்கத்திலேயே சின்ன கூடை போல செட்டப் செய்திருக்க அதில் பால் பாக்கெட் நியூஸ் பேப்பர் இருக்கவே அதை இரண்டையும் பார்த்தாள். மெல்ல கண்கள் மூடினாள்.

  

”காவ்யா காவ்யா” என அன்பாக அழைத்தபடி வந்தார் மஞ்சுளா .

  

அவரின் முகத்தில் அப்படியொரு அன்பு பொங்கி வழிந்தது, காவ்யாவோ பால்கனியில் உள்ள ரோஜா செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க மாமியார் அழைப்பைக் கேட்டு சட்டென செய்யும் வேலையை நிறுத்திவிட்டு நேராக அவரிடம் வந்தாள்.

  

”சொல்லுங்க அத்தை” என கேட்க அதற்கு அவரோ.

  

”என்னம்மா அப்படியே வந்துட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊத்து போம்மா“.

  

”இல்லை அத்தை நீங்க கூப்பிட்டீங்களே அதான் என்ன ஏதுன்னு கேட்க வந்தேன்”.

  

”அதெல்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லைம்மா, காபி போடலாம்னு பார்த்தா பால் இல்லை அதான் பால்பாக்கெட் எடுக்கலையான்னு கேட்க வந்தேன்”.

  

”அச்சோ இருங்க அத்தை, இப்பவே நான் போய் பால்பாக்கெட் கொண்டு வரேன்”.

  

”அடடே வேணாம்மா, நீ இரு நானே போய் எடுத்துக்கறேன், செய்ற வேலையை பாதியில விட்டுட்டு வராத, போம்மா போய் ரோஜா செடிகளை பாரு போம்மா”.

  

”இருக்கட்டும் அத்தை நானே”.

  

“அட பரவாயில்லை காவ்யா போ போய் ரோஜாவை பாரு”.

  

”அத்தை” என அன்பாக அழைக்க.