காளிங்கன் - சுபஸ்ரீ முரளி
வணக்கம்
நாக அரச பரம்பரையினர் வெளிநாட்டு சிலை திருடும் கும்பல் இந்த இரு பிரிவினரும் காளிங்கன் விக்ரகத்தை தேடுகின்றனர்.
இறுதியில் காளிங்கன் யாருக்கு வசமமாகிறான்? ஏன்? எதற்கு? என்பதே இக்கதை.
படித்து மகிழுங்கள்.
சுபஸ்ரீ முரளி
காளிங்கன்
1
கடிகாரம் ஐந்து நாப்பது எனக் காட்டியது.
பவித்ரா பால்கனி கதவைத் திறந்து வெளிவந்தாள்.
இன்னமும் இருட்டு விலகாத காலைப் பொழுது. சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டான் சிறுவன். பின்பு பெரிய பையிலிருந்துச் செய்தித்தாளை எடுத்து லாவகமாகச் சுருட்டி ஜவெளின் த்ரோ போல மிகச் சரியாக சில வீட்டினுள் எறிந்தான்.
இவனை ஒலிம்பிக்கு அனுப்பினால் பதக்கம் நிச்சயம். அடுத்த நொடி சைக்கிளில் பறந்துவிட்டான். அவன் செல்போனில் சன்னமாகப் பாட்டு ஒலித்தது. அதிகாலை நேர அமைதியில் பாட்டுத் துல்லியமாகக் கேட்டது. இவை எல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்தேறிவிட்டது.
பவித்ரா நம் கதையின் நாயகி. அவள் சற்றுமுன் கண்ட கனவு மீண்டும் பசுமையாய் மனதில் நிழலாடியது.
பெரிய மைதானம் பிரகாசமான ஒளியினால் ஜொலித்தது. அந்தப் பேரொளியின் தாக்கத்தினால் கண்கள்க் கூசப் பவித்ரா தன் தளிர் கரங்களால் முகத்தை லேசாக மறைத்துக் கொண்டாள்.
இமை தாழ்த்தியவளுக்குத் தரை முழுவதும் சிதறிக் கிடந்த வைரம், முத்து, பவழம் பளிச்சிட்டன. அவற்றிலிருந்தும் வண்ணமயமான கதிர் கீற்றுகள் மிளிர்ந்தன. மெல்ல மெல்ல பவித்ரா நடந்தாள். அது எந்த இடம் என்று தெரியவில்லை.
எங்குச் செல்கிறோம்?
இனி எப்படிச் செல்ல வேண்டும்?
இங்கிருந்து எப்படி வெளியேற வேண்டும்?
என்னும் இலக்கில்லாமல் கால்ப் போன போக்கில் நடந்தாள்.
“ஸ்ஸ்ஸ்” என்கிற சப்தம் கேட்டது. நொடிகள் செல்லச் செல்ல சப்தம் அருகில் கேட்டது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் கரிய முகடு போலத் தெரிந்தது. உற்றுப் பார்த்தவளுக்குப் பின்னர்தான் அது நாகம் சுருண்டு கிடப்பது புரிந்தது. பவித்ராவை கண்டதும் சீறி எழுந்தது. அவளையே உற்று நோக்கியபடி. படை எடுத்து நின்றது. தன் இரட்டை நாக்கை வெளியே அவ்வப்பொழுது நீட்டி கோபத்தைப் பறைசாற்றியது.
அதைக் கண்டவள் இதயம் துடிக்க மறந்து , நா உலர்ந்து மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது. அலற முயன்றுத் தோற்றாள். கால்கள் நகர மறுத்தன. நாகத்தின் கருமை தேகம் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் கவர்ச்சியுடன் காணப்பட்டது. நாகம் உருவத்தில் மிகப் பெரியதாக அச்சமூட்டும் வகையில் இருந்தது.
நாகம் மெல்ல ஊர்ந்து அவளை நோக்கி வந்தது. அது ஒரு ராஜ நாகம். சட்டெனக் கண் திறக்க அது கனவு என உணர்ந்தாள் பவித்ரா. அவள் அச்சப்படவில்லை ஏனெனில் இது பலமுறைக் கண்ட கனவு.
முதன் முதலில் கனவு கண்ட போது, உடம்பெல்லாம் நடுங்கிச் சில்லிட்டது வீல்லெனக் கத்திவிட்டாள். அதன்பின் பலமுறை கண்டாயிற்று. நீர்வீழ்ச்சியில், மலை முகட்டில், அந்தி சாயும் வேளையில் , கானகத்தில் என பலபல இடங்களில் நாகம் தோன்றியது. கனவு வந்து கொண்டே இருந்தது.
சில விஷயங்களை மீண்டும் மீண்டும் காண்கையில் அதன் மேலுள்ள அச்சம் சற்றே குறையும். அப்படிதான் பவித்ராவிற்கும் இது வெறும் கனவு என ஒரு கட்டத்தில் கனவின் மேலுள்ள அச்சத்தை துட்சமாய்த் தூக்கி வீசிவிட்டாள். அச்சத்தை துறந்தவளுக்கு அதன் நினைவை மறக்க இயலவில்லை.