மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
சசிரேகாவின் புதிய குறுநாவல்.
சிறுகதை – மேஹதூதம் பாட வேண்டும்- சசிரேகா,
ஸ்ரீரங்கத்தில் இருந்து சரவணன் மற்றும் அவனது தாய் வைதேகி இருவரும் தஞ்சையை நோக்கிப் பயணப்பட்டார்கள். வைதேகி பள்ளி ஆசிரியராக பணிபுரிவதால் பணி மாற்றம் காரணமாக இப்போது தஞ்சைக்கு செல்கிறார் அதனால் வீட்டை காலி செய்து பொருட்களை டெம்போவில் ஏற்றிக் கொண்டு அதே டெம்போவில் இவர்களும் ஏறிக் கொண்டார்கள்.
சரவணனும் 2 டிகிரி முடித்துவிட்டான், அதற்கேற்ப வேலையை தேடினான் இன்னும் வேலை கிடைத்தபாடில்லை. வைதேகிக்கும் அவரின் கணவருக்கும் பிரிவு ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லாமலேயே தனித்தனியாக வாழ ஆரம்பித்தார்கள், அதில் சரவணன் தாயிடம் வந்துவிட அவளது கணவரோ மறுமணம் செய்துக் கொண்டு தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவர் சென்றபின்பு வைதேகி தன் மகனை செல்லமாக வளர்த்தார்.
அவன் வளர்ந்து பெரியாளாகினாலும் வைதேகியைப் பொருத்தவரை அவன் குழந்தைதான், தாயிடம் இருக்கும் போதும் சரவணன் குழந்தை போலவே நடந்துக் கொண்டான் காரணம் ஒரு நொடி கூட தந்தையின் இழப்பு தாயை கவலையடைய வைக்க கூடாது, தந்தை இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் அதற்காக காலம் முழுவதும் குழந்தையாகவே தாயிடம் இருக்கலாம் என முடிவெடுத்தான்.
அவனுக்கு நிரந்தரமாக வேலை கிடைத்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணமும் வைதேகிக்கு உண்டு, எங்கே தனக்கென ஒரு மனைவி வந்தால் தன் தாயை அவள் தாய் போல நினைப்பாளோ மாட்டாளோ அதனால் திருமணமே வேண்டாம் இன்னும் நான் சிறுபிள்ளைதான் என சொல்லி தப்பித்து ஓடுவான் சரவணன், அதனால் வைதேகியும் திருமண பேச்சை தள்ளி வைத்தார் அதற்குள் பணிமாற்றம் வரவும் அந்த வேலையில் இறங்கினார்.
பல வருடங்களாக ஸ்ரீரங்கத்தில் இருந்துவிட்டு இப்போது தஞ்சைக்கு செல்வதில் சரவணனுக்கு ஈடுபாடில்லை ஆனாலும் வேறுவழியில்லாத காரணத்தால் ஒருமனதாக சம்மதித்தான், தஞ்சைக்கு சென்றாலாவது ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு, வைதேகியும் தனது காலம் முடிவதற்குள் தன் மகனுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து முடித்திட வேண்டும் என ஆசைக் கொண்டார்.
வைதேகியும் ஸ்ரீரங்கம் எல்லையை கடந்து செல்லும் போது ஒரு முறை திரும்பிப் பார்த்தார், என்னவோ இனி அந்த ஊருக்கே தான் வரப்போவதில்லை என்பது போன்ற எண்ணம், இனி தங்களின் வாழ்க்கை தஞ்சையில்தான் என நினைத்து நீண்ட பெருமூச்சுவிட்டபடியே சரவணனை பார்க்க அவனோ டெம்போவில் ஏற்றிய சாமான்களில் சோபா செட்டும் இருந்தது, விடிய விடிய உறங்காமல் வீட்டை காலி செய்து பொருட்களை வண்டியில் ஏற்றிய காரணத்தால் அலுப்புடன் சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க, அதைக்கண்டு மென்மையாக புன்னகை புரிந்தார் வைதேகி. வண்டியும் தஞ்சையை நோக்கி விரைந்தது. சிறிது நேரத்தில் தஞ்சை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையைக் கண்டதும் வைதேகி தன் மகனைப் பார்த்து,
”சரவணா சரவணா தஞ்சை வந்துடுச்சிப்பா எழுந்திரு” என எழுப்ப அவனோ,
”ம்ம்ம் போம்மா” என்றான் தூக்க கலக்கத்தில்,
”அட எழுப்பா ஊர் வந்துடுச்சி, அட்ரஸ் உனக்குதானே தெரியும் எழுந்து டிரைவர்க்கு வழி சொல்லுப்பா, என் கண்ணுல்ல என் ராஜா இல்லை எழுந்துருடா கண்ணா“ என கொஞ்ச சரவணனும் கொட்டாவி விட்டபடியே எழுந்து சோம்பல் முறித்தபடியே தாயைக் கண்டு மென்மையாகச் சிரித்தவன் அடுத்து டிரைவரிடம்,
”அண்ணா டிரைவர் அண்ணா” என சத்தமாக அழைத்தான் அவரும்,
”சொல்லுப்பா”,
”புது வீட்டு அட்ரஸ் சொல்லட்டுமா அண்ணா”,
”சொல்லுப்பா” என கேட்க இவனும் முகவரி சொல்ல டிரைவரும் புது வீட்டை நோக்கி விரைந்தார், ஆங்காங்கு இருந்த ஒரு சில மக்களிடம் முகவரியை விசாரித்தபடியே,