சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - சசிரேகா
முன்னுரை
குடும்ப பரம்பரை பழக்கங்களினால் தன் காதலை ஜெயிக்கப் போராடும் ஒரு காதலனின் கதையிது.
பாகம் – 1
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கருப்புசாமி கோயில் முன்பு….
கிராம மக்கள் ஒரு பக்கம் திரண்டிருக்க, மறுபக்கம் சண்முக வேலனின் குடும்பமும் அவரின் சொந்த பந்தங்களும் கூடியிருந்தனர். இவர்களுக்கு நடுவில் நடுநாயகமாக ஒரு மர நாற்காலியில் அமர்ந்திருந்த சண்முகவேலனின் முகம் முழுவதும் குழப்பத்துடன் பலமாக யோசித்துக் கொண்டிருந்தார். இதில் கருப்புசாமிக்கு பூசை வேறு நடக்கவிருப்பதால் அதற்காகவே சண்முகவேலனின் குடும்பத்தாரால் வளர்க்கப்பட்ட கிடா ஒன்று ஒரு பக்கத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தது. அதை கவனிக்க ஒரு ஆள் வேறு, அந்த கிடாவோ மே மே என கத்திக் கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அந்த கிடாவின் வளமையைக் கண்ட சிலர் வாயில் எச்சில் ஊற காத்திருந்தனர்.
பூசாரியும் பூஜை சமயம் வந்தும் இன்னும் பெரியவர் உத்தரவு அளிக்கவில்லையே என்று ஒரு பக்கம் காத்திருந்தார். அவருக்கு துணையாக வேலை செய்ய அவரின் மகனையும் கூடவே நிறுத்தி வைத்துக் கொண்டார். அந்த சிறுவனும் அக்கம் பக்கம் வேடிக்கை பார்த்தபடியே அங்கு கைகட்டி நின்றுக் கொண்டிருந்த சுந்தரவேலனை கண்டு புன்சிரிப்பு சிரித்தான்.
சுந்தரவேலனும் தனது தாத்தா சண்முகவேலனுக்கு அருகில் நின்றிருந்தான். கைகட்டி பவ்யமாக நின்றிருந்தான், ஆனாலும் அவனது முகம் இறுக்கமாக இருந்தது. அவனின் கண்ணில் வலியின் வேதனை தெரிந்தது. ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. அவனுக்கு சற்று பக்கத்தில் அவனது குடும்பமே இருந்தது. பாட்டி தெய்வானை எப்போது தன் கணவர் சரியான முடிவு எடுப்பார் என எதிர்பார்ப்புடன் இருக்க அவருக்குப் பக்கத்தில் அவரின் மருமகளான சுந்தரவேலனின் தாய் அமுதரசியும் என்னாகுமோ ஏதாகுமோ என பதட்டமாக இருந்தார். அவருக்கு பக்கத்தில் அவரின் மகள் வள்ளி தனது தோழிகளுடன் உற்சாகமாக நின்றுக் கொண்டிருந்தாள். அங்கிருந்த கூட்டத்திலேயே மிகவும் தெளிவாக மகிழ்ச்சியாக இருந்தது வள்ளி மட்டும்தான். இன்று அவளின் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் நடக்கவிருக்கிறது, அதற்காக தயாராக காத்திருந்தாள், அடிக்கடி அங்கு கட்டிவைக்கப்பட்டிருந்த கிடாவை வேறு ஒரு பார்வை பார்த்தபடி இருந்தாள்.
அடுத்து அவளுக்கு சற்று தூரத்தில் அவளின் இரண்டாம் அண்ணன் சின்னவன் குமரவேலன் தனது சகாக்களுடன் நின்றிருந்தான், கூடவே அவனுக்கு ஆதரவான சொந்தங்கள் வேறு கூட இருக்க ஒருவித பயத்துடனும் ஆர்வத்துடனும் தாத்தா சண்முகவேலன் அளிக்கவிருக்கும் அறிவிப்புக்காக கால்கடுக்க நின்றுக் கொண்டிருந்தான். அவனது உடலில் அப்படி ஒரு பரபரப்பு இதற்காகவே பல வருடங்களாக காத்திருந்தவன் போல இன்று தனக்கு கிட்டுமா கிடைக்காதா என எதிர்பார்ப்புடன் காத்திருந்தான், அவனது பார்வையில் தாத்தா ஒரு நொடி என்றால் அடுத்த நொடியே தனது அண்ணன் சுந்தரவேலனையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு சற்றுப் பக்கத்தில் சண்முகவேலனின் மகனான பழனிவேலனும் இம்முறை பரப்பரப்புடன் நின்றுக் கொண்டிருந்தார். தனக்கு அது கிடைக்காதா என்ற பேராசை அவரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அவரின் கண்கள் நேருக்கு நேராக தனது தந்தையான சண்முகவேலனையே பார்த்த வண்ணம் இருந்தது.