ஹாப்பி கிறிஸ்துமஸ் - சசிரேகா : Happy Christmas - Sasirekha
 

ஹாப்பி கிறிஸ்துமஸ் - சசிரேகா

புதிய கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு குறுநாவல்.
 

ஹாப்பி கிறிஸ்துமஸ் – சசிரேகா

  

கிறிஸ்துமஸ்க்கு முதல் நாள்…..

  

கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் விழாவை கோலாகலமாக நடத்த பலவித ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வீடுமே களைகட்டியது. வீட்டில் இருப்பவர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது, கிறிஸ்துமஸ்க்காக அவரவர் வீட்டை தாங்களே அலங்காரம் செய்தார்கள், ஒவ்வொரு வீட்டிலும் அவர்களின் வசதிக்கேற்ப கிறிஸ்துமஸ் மரம் வாங்கி அதை அழகு படுத்தினார்கள், வண்ண வண்ண விளக்குகள் இருந்த சீரியல் செட்டை அந்த மரத்தை சுற்றி படரவைத்து அதற்கு ஒளி ஊட்டினார்கள், அந்த மரத்தில் ஆங்காங்கு சிறிய அளவிலான பெல்களையும், சின்ன சின்ன பரிசு பெட்டிகளையும் பொம்மைகளையும் சிறியது பெரியது என ஸ்டார்கள் கட்டி அழகு பார்த்து ரசித்தார்கள். இதில் ஒவ்வொரு வீட்டிற்கும் கண்டிப்பாக சான்டா க்ளாஸ் வரும் என்றும் அவரை வரவேற்க தேவையான சாக்லேட்கள் மற்றவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என கடைகளில் வாங்கி வீடுகளில் குவித்துக் கொண்டிருந்தார்கள்.

  

அதே போல கடைத்தெருவிலும் உள்ள கடைகள் அனைத்திலும் கிறிஸ்துமஸ் விழா சம்பந்தப்பட்ட பொருட்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன, ஏகப்பட்ட மக்கள் அங்கிருந்த பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தார்கள், ஒரு பக்கம் பொம்மை கடை இன்னொரு பக்கம் கேக் விற்பனை என ஜகஜோதியாக அங்கு வியாபாரம் நடந்துக் கொண்டிருந்தது. அந்த கடைவீதியில் மக்களின் மகிழ்ச்சிக்கு பொருத்தமில்லாமல் ஒருவன் மட்டும் தனது முகம் தெரியக்கூடாதென தலையில் தொப்பியை அணிந்தபடியே வலம் வந்தான். அவனது கண்கள் கூர்மையாக எதையோ தேடிக் கொண்டிருந்தது, மக்களும் பொருட்களை வாங்கும் ஆர்வத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மற்றவர்கள் பற்றி கவனியாமல் இருந்தார்கள். அவ்விடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவேயில்லை.

  

சின்ன டவுனாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் விழாவை பெரும் விமரிசையாக கொண்டாடுவார்கள் அந்த ஊர் மக்கள், அதனால் ஒவ்வொரு வருடமும் போல இந்த வருடமும் ஊருக்கு மத்தியில் பொதுவான ஒரு இடத்தில் ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதற்கு அலங்காரம் செய்துக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்கள் இதை வேலையாக செய்யவில்லை, கடமையாக செய்தார்கள் இது வழக்கம் போல நடக்கும் நிகழ்வு, அந்த ஊரில் உள்ளவர்கள் சிலர் கூடி தங்களிடம் உள்ள பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பது வழக்கம், இதை பத்திரமாக வைத்திருப்பது சர்ச்சில் உள்ள பாதிரியார்தான், டிசம்பர் மாதத்தில் வரும் முதல் ஞாயிறன்று அந்த உண்டியை உடைத்து அதில் உள்ள பணத்தை எடுத்து தருவார், அந்தப் பணத்தில் சர்ச்சை அலங்காரம் செய்வது, ஊருக்கு நடுவில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அதை அலங்காரம் செய்வது என்று செலவு செய்வார்கள்.

  

அவரவர்களுக்கு பிடித்தவாறு சர்ச்சையும் அதே போல இந்த உயரமான கிறிஸ்துமஸ் மரத்தையும் அழகு செய்வார்கள், யாரும் யாருடனும் கோபம் கொள்ளாமல் பொறாமையில்லாமல், பாகுபாடின்றி அனைவருமே ஓன்றாகச் சேர்ந்து வேலைகளை பகிர்ந்துக் கொண்டு சந்தோசமாக செய்வார்கள். ஆண்கள் கடினமான வேலைகளை செய்ய பெண்கள் கேக் செய்வது, சாக்லேட் செய்வது என இருக்க இளம் வயதினர் மற்றவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாற, சிறு குழந்தைகள் உற்சாகமாக விளையாட என அவ்விடமே சொர்க்கம் போல இருந்தது. ஒருவர் முகத்திலும் கவலையில்லை. ஒருவரின் மகிழ்ச்சி மற்றவருக்கும் மகிழ்ச்சியை வரவழைத்தது. முன்பின் தெரியதவர்கள் பார்த்துக் கொண்டாலும் சினேகமாக பார்த்து பேசி வாழ்த்து சொல்லிச் சென்றார்கள். அந்த விழா நாளில் மட்டும் எதிரி கூட நண்பர்களாவார்கள், வெறுப்பின்றி, கோபமின்றி சிறப்பாக அந்த விழாவை வருஷக்கணக்காக கொண்டாடிக் கொண்டிருந்தனர் அந்த ஊர் மக்கள்.

  

விழா மும்முரத்தில் இரவு வெகுநேரம் ஆகியும் கடைத்தெருவில் மக்களின் வரத்து குறையவேயில்லை. ஏதாவது ஒன்றை வாங்குவதுமாகவே இருக்க கடைக்காரர்களுக்கு கொண்டாட்டமே, வருடம் முழுக்க விற்றாலும் இந்த ஒரு நாளில் விற்கும் லாபமானது அதிகம் என்பதால் அவர்கள் விழாவை கொண்டாடுவார்களோ இல்லையோ கடையில் விற்பனைக்குத் தேவையான பொருட்களை அதிகமாக அடுக்கி வைத்திருந்தனர்.