நான் அவன் இல்லை! - பத்மினி செல்வராஜ்
அன்பான வாசகர் தோழமைகளே!!!
எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் நம் கதையின் நாயகி...எப்பொழுதும் தேனி போன்ற சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், கூடவே கொஞ்சமாய் அசட்டுதுணிச்சலும் மிக்கவள். காலத்தின் கணக்கால் பட்டாம்பூச்சியாய் சுற்றி திரியும் தருணத்தில் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை.
அதையும் இன்முகத்துடனே சுமக்க தயாராகிறாள் அந்த பட்டாம்பூச்சி. . கூடவே அவளுடைய அசட்டு தைர்யத்தில் யோசிக்காமல் அவள் செய்யும் ஒரு செயல் அவள் வாழ்க்கையையே புரட்டி போட இருக்கிறது.
அவளுக்கு பல இன்னல்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது. அந்த இன்னல்களை எல்லாம் சமாளித்து வெளிவருவாளா? அவள் வாழ்க்கையில் மீண்டும் பட்டாம்பூச்சியாய் வலம் வருவாளா?
தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்...
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான, கலகலப்பான, ஜாலியான காதல் கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
நான் அவன் இல்லை!
அத்தியாயம்-1
“தரமணி, சென்னை !!
சென்னையில் முதல் ஐ.டி பார்க் வந்த இடம் தரமணி. மென்பொருள் நிறுவனங்கள் மட்டும் அல்லாது பல மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அமைந்துள்ள இடமாகும்.
எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் சுறுசுறுப்பான பகுதி தரமணி.
அங்கு அமைந்திருக்கும் பல பெரிய நிறுவனங்களில் ஒன்றாய், மற்ற நிறுவனங்களை விடவே இன்னுமாய் கம்பீரத்துடனும் மிடுக்குடனும் பிரம்மாண்டமாய், வானை தொட்டுவிடும் உயரத்தில் நின்றிருந்தது அந்த வணிக கட்டிடம்.
அதன் நுழைவாயிலிலும் பக்க வாட்டிலும் விக்ரமன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெரிதான பொன்னிற எழுத்துக்கள் மிடுக்காய் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
அந்த கட்டிடத்தின் பளபளப்பும், கம்பீரமுமே அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை பறைசாற்றுவதாய் இருந்தது.
வளர்ச்சி மட்டுமின்றி, அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் அதிக மாதச்சம்பளம், பல வித சலுகைகள் என்று எல்லாவற்றிலும் விக்ரமன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் தனித்து நிக்க, அதனாலயே ஒவ்வொருவரின் மனதிலும் ட்ரீம் கம்பெனி என்ற பெயரை பெற்றிருந்தது விக்ரமன் க்ரூப் ஆப் கம்பெனிஸ்.
*****
அது ஒரு திங்கட்கிழமை காலை பத்துமணி.
இரண்டு நாட்கள் விடுமுறையில் ஓய்வெடுத்துவிட்டு, தங்களை ரெப்ரெஸ் பண்ணிக் கொண்ட மக்கள், பரபரப்பாய் உற்சாகத்தோடு அந்த வாரத்தின் முதல் நாளை துவக்கி இருந்தனர்.
அந்த உற்சாகம், பரபரப்பும் கொஞ்சமும் குறையாமல், சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்தது தரமணியில் இருந்த விக்ரமன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் தலைமையகம்.
அன்று விக்ரமன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் பல நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.
மற்ற நிறுவனங்களைப் போல ஆண்டு முழுவதும் ஆட்களை சேர்ப்பது இல்லை இங்கே. ஒவ்வொரு கால் ஆண்டின் முடிவிலும் யாரெல்லாம் அந்த நிறுவனத்தில் இருந்து விலக விரும்புகிறார்களோ அவர்கள் விலகிக் கொள்ளலாம் என்ற அறிக்கை வரும்.
அப்படி விலகுபவர்களின் பட்டியலின் படி, பிறகு அவர்களின் இடத்தை நிரப்புவதற்கும் மற்றும் புதிதாக உருவாக்கியிருந்த பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவும் காலாண்டில் முதல் வாரத்தில் ஆள் சேர்ப்பு பணி நடைபெறும்.
அதுவும் வளவளவென்று பல நாட்கள் இழுப்பதில்லை. ஒவ்வொரு காலாண்டின் ஆரம்பத்தில், முதல் நாள் திங்கட்கிழமை இந்த தேர்வு நடைபெறும்.
விக்ரமன் க்ரூப் ஆப் கம்பெனிஸ் ன் பல நிறுவனங்களில், பல்வேறு துறைகளில் இருக்கும் காலியிடங்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்டும்.
அதில் தகுதியான விண்ணப்பங்களை முன்னரே தேர்வு செய்து அவர்களை தேர்வுக்கு