Chillzee KiMo Books - நீ தானா...??? - பிந்து வினோத் : Nee thanaa...??? - Bindu Vinod

நீ தானா...??? - பிந்து வினோத் : Nee thanaa...??? - Bindu Vinod
 

நீ தானா...??? - பிந்து வினோத்

Second edition.

 

சாந்தி - அரவிந்த் காதல் திருமணம் fairy tale போன்ற ஒன்றாக இருக்கிறது. இனிதாக போகும் அவர்கள் வாழ்வில் கம்பெனியில் காணாமல் போகும் பணம் புயலை கிளப்புகிறது.

இந்த பெரும் புயலை சமாளித்து, அரவிந்தும் சாந்தியும் தங்கள் இனிய வாழ்வை தொடர்ந்தார்களா என்பதை கதையை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

இது குடும்பம் - காதல் - மர்மம் என அனைத்தும் நிறைந்த ஒரு ஜனரஞ்சக படைப்பு!

 

 

அத்தியாயம் 01

Don't depend too much on anyone in this world because even your own shadow leaves you when you are in darkness - Ibn Taymiyyah

  

நெக்ஸ்ட் ஜென் கம்பெனியின் லாப அறிக்கையை அந்த பெரிய திரையில் புள்ளி விவரங்களுடன் விவரித்துக் கொண்டிருந்தனர். சென்ற ஆண்டை விட இந்த வருடம் நிகர லாபம் அதிகமாகி இருந்தது. எதிர்பார்த்ததை விட கம்பெனியின் லாபம் பத்து சதவிகிதம் அதிகமாகி இருந்தது...

  

அந்த பெரிய திரையின் மீது கண்கள் பதித்திருந்த அந்த நிறுவனத்தின் தலைவன் அரவிந்தின் கவனம் அந்த அறிக்கையில் இல்லை... அவன் மனம் கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீட்டில் இருந்தது... இந்நேரம் அவளுக்கு விஷயம் தெரிந்திருக்கும்... அவளுடைய உண்மையான முகம் வெளிவர போகிறதா, இல்லை இப்போதும்...?

  

அதற்கு மேல் சிந்திக்க விருப்பமில்லாமல் கண்களை மூடி திறந்தான். ஆனால் என்ன முயன்ற போதும் அவனால் அவனுடைய கவனத்தை திசை திருப்ப இயலவில்லை. ஒருவழியாக அந்த மீட்டிங் முடிவுக்கு வரவும், பெயருக்காக கூட யாருடனும் பேசாது வெளியே வந்தவன் நேராக தன்னுடைய கேபினுக்குள் சென்றான். அவனை பின் தொடர்ந்து வந்த சந்தோஷ், அவனின் மனநிலை புரிந்துக் கொண்டவன் போல்,

  

“ரிலாக்ஸ் அரவிந்த்...” என்றான்.

  

“ப்ச்... எப்படி முடியும் சந்தோஷ்?” என்றான் அரவிந்த் அலுப்புடன்.

  

“கம் ஆன் மச்சான்... அஞ்சு வருஷம் கழித்து அவளின் முகமூடி கிழிந்தது தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு... சும்மாவா சொல்றாங்க நல்ல குடும்பத்துப் பொண்ணான்னு தெரிஞ்சு கல்யாணம் செய்யனும்னு... அவங்க அப்பா ஒரு திருடன் அந்த புத்தி அவளுக்கு இருக்காதா என்ன?”

  

மனைவியின் மீது அவனுக்கு கோபம் இருந்த போதும், தங்கையின் கணவனும், அவனுடைய நண்பனுமான சந்தோஷ் அவளைப் பற்றி பேசிய விதம் அரவிந்த்க்குப் பிடிக்கவில்லை... நண்பன் சொன்னது அவனுடைய மனதில் இருக்கும் அதே எண்ணம் என்ற போதும் கூட...!

  

பொறுமை இல்லாமல் மேஜையின் மீதிருந்த தொலைப்பேசியை எடுத்து எண்ணை தட்டிய அரவிந்த், அந்த பக்கம் அழைப்பை ஏற்க பொறுமையின்றி காத்திருந்தான். ஒரு வழியாக அழைப்பு ஏற்கப்பட்டு,

  

“ஹலோ அரவிந்த்!” என்ற வக்கீல் பவானியின் குரல் ஸ்பீக்கரில் கேட்டது.

  

“எங்கே இருக்கீங்க பவானி? இன்னும் வேலை முடியலையா?” என்ற அரவிந்தின் குரல் பொறுமையின்மையைக் காட்டியது!

  

“நீங்க சொன்ன வேலை காலையிலேயே முடிஞ்சிருச்சு மிஸ்டர் அரவிந்த்... ஒரு மணி நேரம் கூட ஆகலை... நீங்க ஈவ்னிங் மூணு மணிக்கு மேல போன் செய்ய சொன்னதால தான் நான் கால் செய்து இன்ஃபார்ம் செய்யலை...”

  

“அப்போ சாந்தி சைன் போட்டுக் கொடுத்துட்டாளா?” என்றுக் கேட்டப்போது அரவிந்தின் இதயம் படபடத்தது.

  

“யெஸ்...”

  

“ஓ! ஏதாவது சேஞ்சஸ் செய்ய சொன்னாளா...?”

  

“யெஸ், சில டெர்ம்ஸ் மாத்த சொன்னாங்க... அதை எல்லாம் மாத்தி புது வெர்ஷன்ல உடனேயே சைன் வாங்கியாச்சு...”

  

ஸ்பீக்கரில் அந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷ்,

  

“அது தானே பார்த்தேன்! உனக்கு எப்படியும் ஒரு பத்து லட்சமாவது எக்ஸ்ட்ரா செலவாக போகுது...” என்றான் ஏளனமாக.