நீயும் நானும் - சசிரேகா : Neeyum Naanum - Sasirekha
 

நீயும் நானும் - சசிரேகா

முன்னுரை

திரும்ப திரும்ப நடக்கும் கால சுழற்சியில் மாட்டிக் கொண்ட நாயகி அதில் இருந்து தப்பிக்க போராடி நிகழ்காலத்திற்கு வர எடுக்கும் முயற்சிகளும் அதனால் விளையும் பிரச்சனைகளும் எதிர்பாராத திருப்பங்களுமே இக்கதையின் கருவாகும்.

 

பாகம் 1.

  

போரூர்.

  

விடிந்தும் விடியாத காலை நேரத்தில் இந்துஜா அவசர அவசரமாக மெயின் ரோடில் செருப்பு கூட அணியாமல் பதற்றமாக ஓடிக் கொண்டிருந்தாள். அவளது உடல் முழுவதும் வேர்த்திருந்தது, அதை விட அவள் முகத்தில் தெரிந்த பயமும் கண்களில் இருந்த கண்ணீருக்குமான விடைதான் தெரியவில்லை, அழகான அவளின் முகத்தில் ஏகப்பட்ட குழப்ப ரேகைகள், அவள் அணிந்திருந்த நீல நிற ஜீன்ஸ்சும் வெள்ளை நிற டாப்சும் கூட ஈரத்தில் நனைந்திருந்தது. வேக வேகமாக ஓடி வருவதனால் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க சிரமப்பட்டுக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தாள்.

  

அந்தளவு ஓட்டத்தை அவள் வாழ்வில் என்றுமே ஓடியதில்லை மொத்தமாக சேர்த்து ஒரே நாளில் ஓடிக் கொண்டிருந்தாள், அவளின் ஓட்டத்தின் முடிவில் ஒரு அப்பார்ட்மெண்ட்  வர அவசர அவசரமாக அந்த அப்பார்ட்மெண்ட் கேட் முன்னால் நிற்க கூட நேரம் எடுக்காமல் கேட் கதவை அவசரகதியில் பாதி திறந்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.

  

லிப்ட் இருந்த இடம் வந்தாள், அன்று பார்த்து லிப்ட் ரிப்பேர் என்பதால் ஒரு அறிவிப்பு பலகையை லிப்ட்டுக்கு முன் வைத்திருந்தார்கள், அதை பார்த்து நொந்தபடியே லிப்ட்டுக்கு பக்கத்தில் இருந்த படிக்கட்டு வழியாக அவசர கதியில் ஏறினாள். அவசரத்தில் இரண்டிரண்டு படிக்கட்டுக்களாக தாவி தாவி ஏறினாள் வளைவுகளில் திரும்பும் போது கூட வேகத்தை குறைத்தபாடில்லை, வெகுநேரம் ஓடிய களைப்பில் சற்று தடுமாறினாலும் சமாளித்துக் கொண்டு அவசரமாக ஓடினாள்.

  

5வது அடுக்கில் இருந்த அவளது ப்ளாட்டிற்கு முன் சென்றாள். ஓடி வந்த வேகத்தில் வாசற்கதவில் சென்று டப்பென மோதிக் கொண்டாள். மோதியதில் அவளது தலையில் சற்று அடிபட்டாலும் அந்த வலிகூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை  ப்ளாட்டின் சாவியை தனது ஜீன்ஸ் பேண்ட் பேக்கெட்டில் இருந்து பதட்டமாகவே எடுத்து திறந்தாள்.

  

சட்டென உள்ளே நுழைந்தாள், இருளாக இருந்த ப்ளாட்டிலும் பழக்கப்பட்ட காரணத்தால் அவசரமாக அங்கிருந்த 2 அறைகளில் ஒரு அறைக்குள் சட்டென நுழைந்தாள் அடுத்த நொடி ஒரு துப்பாக்கி குண்டு இந்துஜாவின் உடலை பதம் பார்த்தது, அடுத்த நொடியே அவள் மெல்லச் சரிந்தாள். அவளின் கண்களில் அருகில் இருந்த கடிகாரத்துடன் கூடிய தேதி கேலண்டர் தெரிந்தது. நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி திங்கள்கிழமை காலை மணி 6 அதை பார்த்தபடியே கண்கள் மூடினாள்.

  

அடுத்த நொடி அவசரகதியில் படுக்கையில் இருந்து அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்தாள் இந்துஜா. முகம் முழுவதும் வியர்த்திருந்தது, தனது உடலை பரிசோதித்தாள், எங்கும் காயம் இல்லை, பயத்தில் அவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது,

  

சட்டென அவள் கண்கள் கடிகாரத்துடன் கூடிய கேலன்டரை நோக்கியது. அது அக்டோபர் 31 ஞாயிற்றுக் கிழமை காலை மணி 6 என காட்டவும் வேகவேகமாக மூச்சு இழுத்து விட்டபடியே தன்னை சமாதானம் செய்துக் கொண்டவள்.

  

”சே கனவா” என நொந்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள்.

  

தனது படுக்கையறையில் இருந்த பால்கனி திரைச்சீலையை விலக்கியவள் விடிகாலை வெளிச்சத்தை ரசித்தபடியே அங்கிருந்த பால்கனியில் நின்று வெளியே வேடிக்கைப் பார்த்தாள். பரபரப்பாக மக்களின் நடமாட்டம் இருப்பதைக்கண்டு வியந்தாள்.

  

”சன்டே கூட மக்கள் பரபரப்பா இருக்காங்க என்னதான் வேலையிருக்குமோ என்னவோ ப்பா” என சொல்லிக் கொண்டு அலுப்புடனே அறையை விட்டு