காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - சசிரேகா
முன்னுரை
காதலிக்க நேரமில்லாமல் இருக்கும் கதாநாயகியும், காதலிக்க யாரும் கிடைக்காமல் இருக்கும் கதாநாயகனும், விதி வசத்தால் ஒருவரை ஒருவர் எதேச்சையாக நேரில் சந்தித்த போது, அவர்களுக்குள் தோன்றிய காதலை வெற்றி பெற வைத்தார்களா இல்லையா என்பதே கதையின் கருவாகும்.
காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - சசிரேகா.
பாகம் 1.
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கும் ரெயிலில் பயணிகளுடன் சக பயணியாக அமைதியாக பாந்தமாக அமர்ந்துக் கொண்டு யாரையும் தொந்தரவு செய்யாமல் ஜன்னல் வழியாக வெளி உலகத்தை ரசித்த படியே முதல் முறையாக தனியாளாக சென்னையில் வாழ வேண்டும், தனக்கான அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டும், தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய தன்னால் இயன்ற பண உதவியை செய்ய வேண்டும், அதற்கு வேலைக்கு செல்ல வேண்டும் இனி சென்னையில் தனது எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற குழப்பத்தில் மனம் தத்தளித்தாலும் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு மற்றவர்கள் அறியாத வண்ணம் எளிமையாக இயல்பாக தனது பயணத்தை ரசித்துக் கொண்டு வந்திருந்தாள் அகிலாண்டேஸ்வரி என்கிற அகிலா.
அழகிக்கெல்லாம் முதல் படியில் இருந்த பேரழகியவள் அவளுடன் பயணித்த ஆண்களும் பெண்களும் அவளை ஒரு முறை பார்த்து மறுமுறையும் பார்க்கத் தவறவில்லை. பெண்ணிற்கு பெண்ணே பேராசைக் கொள்ளும் அளவு அழகியாக இருந்தாலும் அவளிடம் எந்த ஒரு கர்வமும் அலட்டலும் இல்லை.
கல்லூரி பெண் போல வெள்ளை நிறத்தில் சிகப்பு ரோஜாக்களால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட காட்டன் சுடிதாரில் பாந்தமாக அமர்ந்திருந்தாள். வட்ட முகமும் இடுப்பு வரை நீண்டிருந்த கூந்தலை பின்னி முடிந்து தலையில் செருகியிருந்த மல்லிப்பூச்சரமும் அது சற்று வாடியிருந்தாலும் அவளுக்கு அழகாகவே இருந்தது.
பேரழகியாக இருந்தாலும் சிறிதும் ஒப்பனையின்றி இருந்ததே அவளது அழகுக்கு மகுடம் சூட்டியது போன்று இருக்கவே அலங்காரம் எதுவும் இல்லாமலே அவள் இளவரசியை போல் இருந்தாள்.
கழுத்தில் மெலிதான தங்க செயின், ஒரு கையில் கருப்பு நிற ஸ்ட்ராப் வாட்ச், இன்னொரு கையில் மெல்லிய தங்க ப்ரேஸ்லெட் அவளது கைகளுக்கு எடுப்பாக இருந்தது. காலில் அணிந்திருந்த மெல்லிய கொலுசும் அவள் காலை அசைக்கும் போதெல்லாம் கலகல என இனிமையான ஓசையையே அளித்தது.
சென்னையில் வேலை தேட வேண்டும் எவ்வளவு நாட்கள் ஆகுமோ உறவினர்கள் வீட்டை விட தனது தோழியின் வீடே ஆதரவாக இருக்கும் என நினைத்து அதற்காகவே 2 பெட்டிகளில் தனது முக்கியமான பொருட்கள் மற்றும் உடைமைகளை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
மடியில் ஒரு ஹாண்ட்பேக் சற்று பெரிதுதான் அதில் அவளது ஸ்மார்ட்போன், படித்த படிப்பிற்கான சர்டிபிகேட், சிறிய வாட்டர் பாட்டில், ஹைப்ரோ பென்சில், வீட்டிலேயே தயார் செய்த கண்மை, 2 பேனாக்கள் மற்றும் சிறிய டைரி குறிப்பெழுத வைத்திருந்தாள். அதில்தான் அவளது தோழியின் முகவரி இருந்தது.
அவளது அப்பா அம்மாவோ சென்னைக்கா வேண்டாம், வேலையா தேவையில்லை, திருமணம் செய்துக் கொள் என சொல்லியும் வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் முயற்சியை கைவிடுவதாக இல்லை என சொல்லிவிட்டு வந்தாயிற்று, தன் முயற்சிக்கு பலன் என்னவாகுமோ என நினைத்து நொந்துப் போன சமயத்தில் அகிலாவின் செல்போனிற்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தது.
அது சின்ன ஒலியை எழுப்பவே அகிலாவும் தனது பையை திறந்து உள்ளிருந்த செல்போனை எடுத்து வந்திருந்த மெசேஜை அமைதியாக படிக்கலானாள். அது அவளது தோழி அதாவது சென்னையில் வசிக்கும் அவள் சென்று தங்கவிருக்கும் தோழியிடமிருந்து வந்திருந்தது அந்த மெசேஜில்.
காதல் எப்படி வரும்? காதல் என்றால் என்ன? அது ஏன் வருகிறது? வந்தால் என்னவாகும்? இப்படி பல கேள்விகள் உலாவிக் கொண்டிருக்கும், முதலில் காதல் எப்படியிருக்கும் அதன் உருவம் என்ன என்பதை படிப்படியாக தெரிந்துக் கொள்வோம்...
1) தெரியாமல் ஒரு முறை பார்த்த ஒருவனையோ அல்லது ஒருத்தியையோ இன்னொரு முறை பார்ப்பது சாதாரணம் அதுவே மறுமுறை மற்றொரு முறை என பலமுறை பார்க்கத் தூண்டுவதே காதலின் முதல் படியாகும்.