பெண் ஒன்று கண்டேன்...! - பத்மினி செல்வராஜ் : Pen ondru kanden...! - Padmini Selvaraj
பெண் ஒன்று கண்டேன்...! - பத்மினி செல்வராஜ்
அன்பான வாசக தோழமைகளே!!!
அனைவருக்கும் வணக்கம் !. எனது புதிய கதையுடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.
முதன்முறையாக காதலை குறைத்து நட்பை பற்றி எழுதிட வந்திருக்கிறேன். அதற்காக காதல் இல்லை என்றில்லை..காதல் இல்லாமல் மானிடமே இல்லையே..!
நட்பு- உலகில் அன்னையின் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன்/நண்பி காட்டும் தூய்மையான அன்புதான். காதலுக்கு இணையானது... அதையும் விடவே மேலானது.
நட்பு என்றாலே பொதுவாக பெண்களின் நட்புதான் கண் முன்னே நிற்கும். ஆனால் காலங்காலமாய் ஆண்களின் நட்புதான் பெரிதாக போற்றபட்டு வந்திருக்கின்றன.
நட்பு என்றதும் கண் முன்னே வருவது தமிழ் புராணங்களில் காட்டப்பட்ட துரியோதனன்-கர்ணன் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு. அதோடு நிஜ வாழ்க்கையிலும் பெரிதாக போற்றப்பட்ட கார்ல் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு... இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை வரிசைபடுத்தலாம்.
இன்றைய தலைமுறையிலும், அன்றாடம் பழகும் சமுதாயத்திலும் இவர்களைப் போன்ற நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படிபட்ட நட்பில், ஈருடல் ஓருயிராக பழகிய இருவரின் நட்பில் விரிசல் வந்தால்? அது எப்படி அவர்களை பாதிக்கும்? அந்த விரிசலில் சிக்கி கொண்ட இரு பெண்களின் வாழ்க்கை என்ன ஆனது?. ஒருமுறை விழுந்த விரிசல் மீண்டும் சரியாகுமா? சொல்ல வந்திருக்கிறேன் பெண் ஒன்று கண்டேன் பயணத்தின் மூலமாக.
இதுவும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிமையான நட்பு+ காதல் கலந்த ஜாலியான கதைதான். தொடர்ந்து படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். Happy Reading!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்!
அத்தியாயம்-1
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே...!
என்று நெஞ்சுருக, அந்த நமச்சிவாயத்தை உருகி பாடிக்கொண்டிருந்தார் அபிராமி.
பாலையும் தேனையும் சேர்த்து குழைத்ததைப் போன்ற குரலாக இல்லை என்றாலும், மனதை வருடும் இதமான குரல்தான் அவருடையது.
அந்த குரலில் நமச்சிவாயத்தையும், பரந்தாமனையும், சிங்காரவேலனையும் ஏன் சில நேரம் அம்பிகையையும் கூட விட்டு வைப்பதில்லை.
சமயத்துக்கு ஒன்றாய் என அனைத்து தெய்வங்களையும் வேண்டி, அவர் உருகி, கரைந்து பாடினார் என்றால், மனதில் எவ்வளவு பெரிய வலி, வேதனை, சோர்வு, அழுத்தம், கவலைகள், ஏக்கங்கள் என இருந்தாலும், அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் தலை தெறிக்க ஓடிவிடும்.
அந்த அளவுக்கு அவரின் குரல் வசீகரமாகவும், மனதை வருடுவதாகவும் இருக்கும்.
நன்றாக புலர்ந்திராத அந்த அதிகாலையிலேயே, தலைக்கு குளித்து, ஒரு டவலை அவசரமாக தலையில் சுற்றிக்கொண்டு ஈரம் சொட்ட சொட்ட அந்த பூஜையறையில் தன் இஷ்ட தெய்வங்களுக்கு முன்னால் அமர்ந்திருந்தார் அபிராமி.
சென்ற மாதம் தான் ஐம்பது வயதை தொட்டிருந்தார். ஆனாலும் யாராலுமே அவருக்கு ஐம்பது வயது என்று கணித்து சொல்லி விட முடியாது தான். நாற்பதின் ஆரம்பத்தில் இருப்பவரை போன்ற தோற்றம்.
தினம்தோறும் கடமை தவறாமல் செய்யும் பூஜை புனஸ்காரங்கள், ஒருநாளும் சோம்பி இருக்காமல், தினமும் கடைபிடிக்கும் உடற்பயிற்சியும் யோகாவும் மற்றும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரின் கொள்கை இவை எல்லாம்தான் அவரை என்றும் இளமையாக வைத்திருக்க உதவியது.
கஸ்தூரி மஞ்சள் பூசிய முகம், உச்சி வகிட்டில் வைத்திருந்த மீனாட்சி தாழம்பூ குங்குமம், நெற்றியின் நடுவில் அழகாய் சற்றே பெரியதான சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டும், அதற்கு மேல மெல்லியதாய் வைத்திருந்த சந்தனக் கீற்று, என பார்ப்பதற்கே மங்களகரமாய் இருந்தார்.
முதல் முறை பார்ப்பவர்கள, மறக்காமல் கையெடுத்து வணங்கும், அம்பிகையே நேரில் வந்ததை போல இருப்பார்.
அந்த பெரிய பூஜை அறையில் அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருக்க, அவர்கள் முன்னே கண் மூடி அமர்ந்திருந்தார் அபிராமி.
அவர் போட்டு வைத்திருந்த சாம்பிராணி மணம் வீடெங்கும் நிறைந்திருக்க, சற்றுமுன் ஏற்றி வைத்த ஊதுபத்தியின் மணம் இன்னுமே பூஜை அறையில் சுற்றி கொண்டிருந்தது.
பூஜை அறையையும் தாண்டி அதன் மணம் இப்பொழுது வெளியில் சென்று