மாப்பு வெச்ச ஆப்பு - முகில் தினகரன்
நகைச்சுவை நாவல்.
கிராமத்தில் நாடகம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை சிட்டிக்கு அழைத்துச் சென்று, நஷ்டக் கணக்கு காட்டுவதற்காக படம் எடுக்கச் சொல்கிறார் ஒரு தயாரிப்பாளர்.
ஆனால், அந்த இளைஞர்கள் எடுத்த படம் வெற்றி பெற்று விட, அந்த தயாரிப்பாளரின் வருமானம் இன்னும் அதிகமாகிறது.
அதைக் கண்டு வேறொரு பெரிய நிறுவனம் அவர்களுக்கு படம் எடுக்க வாய்ப்புக் கொடுக்க, பெருத்த நஷ்டத்தை சந்திக்கிறது அந்தப் பெரிய நிறுவனம்.
அத்தியாயம் - 1
“கோவலபுரி” கிராமம் இன்னும் நாகரீகமும், நவீனத்துவமும் எட்டிப் பார்க்காத “கேவலபுரி” யாகவே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது.
வெயில் காலங்களில் அதிக வெப்பமும், குளிர் காலங்களில் அதிக குளிரும், மழைக் காலத்தில் பேய் மழையும், காற்றுக் காலத்தில் சூறைக் காற்றும், அந்த ஊருக்குக் கிடைத்திருக்கும் நிரந்தர சாபங்கள்.
சினிமா என்றால் “ஆ”வென்று வாயைப் பிளக்கும் அப்பாவி ஜனங்களும், நாடகமென்றால் “ஈ”யென்று பல்லிளிக்கும் அழுக்கு மக்களும்தான், அந்த ஊரின் நிரந்தர பிரஜைகள். அவர்களைப் பொறுத்தமட்டில் சினிமா நடிகர்கள் தேவகுமாரர்கள். நடிகைகளோ தேவதைகள்.
அன்று சனிக்கிழமை. அந்த ஊரின் மொத்த ஜனத் தொகையில் முக்கால் சதவீதம் பேர், பண்ணையார் தோட்டத்துக்கு தெற்கேயிருந்த அந்த மைதானத்தில் கூடியிருந்தனர்.
அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் வண்டி கட்டிக் கொண்டே, டிராக்டரிலோ வந்து குவிந்திருந்தனர்.
காரணம்?
அங்குள்ள நாடகக் கொட்டகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று ஒரு நாடகம் நடைபெறவுள்ளது.
“பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே...தங்கச் சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே!” பழைய பாடலை கரகரப்புடன் ஒலித்துக் கொண்டிருந்தது நாடகக் கொட்டகையின் தலை மேல் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்.
கொட்டகையின் உள்ளே, நாடகம் நடத்துவதற்கென்று பிரத்யேகமாய்ப் போடப்பட்டிருந்த மேடை பெரிய நீலத் திரையால் மூடப் பட்டிருந்தது. அதில் ஆங்காங்கே கிழிசல் இருப்பதை மறைக்க, அன்றைய நாடகத்தில் விளம்வர நோட்டிஸைக் குத்தி வைத்திருந்தனர். மேடைக் கீழிருந்த இரண்டு ராட்சத லைட்டுகள் அந்தத் திரையின் மேல் வெளிச்சத்தைக் கொட்டிக் கொண்டிருந்தன. அவ்வப்போது ஆர்மோனிய சத்தம் கேட்டது.
அது முட்டை போடும் கோழியின் முக்கல் போலிருந்தது.
“கார முறுக்கு...கார முறுக்கு” முறுக்கு விற்பவன் நாடகம் ஆரம்பிக்கும் முன் பெரிய அளவில் வியாபாரத்தைச் செய்து விட வேண்டும், என்கிற ஆவேசத்தில் கூட்டத்தின் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவன் குரல் கார முறுக்கைக் கடிப்பது போலவே “கறுக்…முறுக்”கென்றிருந்தது. இயற்கையிலேயே அப்படியா?...இல்லை “கார் முறுக்”…“கார் முறுக்” என உச்சரித்து உச்சரித்தே அது அப்படி மாறிப் போனதோ தெரியவில்லை.
“யோவ் கார முறுக்கு...இப்ப எப்படி வேணா குறுக்க...நெடுக்க ஓடிக்கோ... மவனே...நாடகம் ஆரம்பிச்சதுக்குப் பிறகு சும்மாச் சும்மா குறுக்கால நடந்தே?...காலை வெட்டிக் காராசேவு பண்ணிடுவேன்” கடுப்புடன் கத்தினான் கருப்புசாமி.
“அட...ஏங்க அவனைப் போய் இந்த வெரட்டு வெரட்டறீங்க?..அவன் ஏதோ பாவம்...வியாபாரம் பண்ணணும்னு ஓடிக்கிட்டிருக்கான்...” அவன் மனைவி சரசு அவனை அடக்கினாள்.
அவளருகில் அமர்ந்திருந்த ஐந்து குழந்தைகளில் ஒன்று, இன்னொன்றின் தலை முடியைப் பற்றியிழுக்க, அது இதன் முகத்தில் குத்தியது. இரண்டும்