மலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்
அமெரிக்காவில் வாழும் ரச்னாவும் – திருநெல்வேலியில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் விசாலினியும் சந்தித்தால்...
மலையோரம் வீசும் காற்று - நட்பால் இணைவோம்...!
நட்பு, காதல், குடும்பம், பிரச்சனைகள் என அனைத்தையும் இதமாய் அரவணைத்து செல்லும் நாவல்.
மலையோரம் வீசும் காற்று - 01
ஜனவரி 2009
சௌந்தரபாண்டியபுரம், திருநெல்வேலி.
கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வாழும் அந்த கிராமத்தின் சுவர்களில் எங்கு நோக்கினும் சுவரொட்டிகள்! விஜய், விக்ரம், சூர்யா என திரைப்பட நட்சத்திரங்களின் அணிவகுப்புக்கு இடையே, திருமண வாழ்த்து என கொட்டை எழுத்துக்கள் மின்னின.
“இவனுங்க கல்யாணம் செய்ததும் போதும் நம்ம சுவரை எல்லாம் நாசம் செய்ததும் போதும்” என பலர் புலம்பி கொண்டிருந்தனர்.
ஆனால் திருமண கோஷ்டியினர் அது எதையும் கவனிக்கவில்லை.
அன்று ஹரிக்கும், விசாலினிக்கும் திருமணம்.
ஹரி மேகமலை கிராமத்தில் மின்சார துறையில் டெக்னிஷியனாக பணி புரிபவன்.
“இவளுக்கு அடிச்ச யோகத்தை பார்த்தீயா, கவர்ன்மன்ட் மாப்பிளை. அது இதுன்னு பெருசா எதுவும் கேக்கவும் இல்லையாம். இவ என்னவோ பெரிய ரம்பைன்ல அவன் மயங்கி போய் ஒத்தை கால்ல நின்னு கட்டிக்குறான்”
“யாருக்கும் தெரியும் அக்கா, எல்லாம் இவங்க சொல்றது தானே. அவன் ஊருல எப்படி இருக்கானோ என்னவோ?”
இப்படி பொறாமை பிடித்த பெண்கள் ஒரு பக்கம் பேசி தங்களின் வயிற்றெரிச்சலை குறைத்துக் கொண்டிருக்க, விசாலினி மணமகள் அலங்காரத்தில் நடந்து வந்தாள்.
கிராமத்து பெண்ணுக்கு உரிய நாணம் அவளிடம் இருந்த போதும், அதையும் மீறி அவளின் முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
யாருமில்லாமல் உறவினரோட ஒட்டிக் கொண்டு வாழ்ந்திருந்தவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா! அவளால் நம்பவே முடியவில்லை.
கணவனாக போகும் ஹரியின் மீது காதல், நன்றி, அன்பு என எல்லாம் பிரவாகமாக அவளின் மனதினுள் பொங்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும் சில நிமிடங்களில் அவளுக்கு கணவனாக போகும் ஹரியை நிமிர்ந்து நேராக பார்க்கவும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.
ஹரியின் பாட்டி பொன்னம்மாள் மேடையின் ஒரு ஓரத்தில் நின்றிருந்தாள். சிறு குழந்தை முதல் அவள் எடுத்து வளர்த்த அவளின் பேரன் தான் எவ்வளவு வளர்ந்து விட்டான்.
விசாலினி அவனுக்கு சரியான ஜோடி தான்.
இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என பிரார்த்திட்டபடி அவள் இருக்க, சுபமுகூர்த்த நேரத்தில் விசாலினிக்கு தாலி அணிவித்து தன் திருமதியாக்கினான் ஹரி.
மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபம், சென்னை
அங்கே வெகு ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
ரச்னா பி.ஈ எம்பிஏ வெட்ஸ் ஷ்ரேயான்ஷ் எம்பிஏ என்ற அன்றைய நாளின் நாயகன் நாயகியின் பெயர் தாங்கி இருந்த பெரிய அறிவிப்பு பலகை கண்ணை பறிக்கும் அலங்காரத்துடன் மின்னிக் கொண்டிருந்தது.
மணமேடையில் இருந்த ஷ்ரேயான்ஷும் ரச்னாவும் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கானோரை மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மூன்று வருட காதலுக்கு பின் ஒரு வழியாக பெற்றவர்களின் சம்மதத்தையும் பெற்று நடக்கும் திருமணம்.
இரண்டு பெற்றோரும் தங்கள் வாரிசுக்காக அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும், அவர்களுக்கு முழு சம்மதமில்லை என்பதை ஒதுங்கி நின்ற அவர்களின் பாவம் காட்டியது.
ஆனால் ஷ்ரேயான்ஷும் ரச்னாவும் இது எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர்கள் வேறு ஏதோ தனி உலகத்தில் இருந்தார்கள்.
சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் நடக்க, திட்டமிட்டிருந்த முகூர்த்த நேரத்தில் திருமணம் நல்ல படியாக நடந்தது.
ரச்னா மிஸ்ஸர்ஸ் ரச்னா ஷ்ரேயான்ஷ் ஆக மாறி போனாள்.
ஜனவரி 2019
மேகமலை, திருநெல்வேலி
“ஏண்டா கிளி மாதிரி வீட்டுல ஒருத்தி இருக்க உனக்கு எப்படிடா இந்த கோட்டானை போயும் போயும் பிடிச்சது?”
திண்ணையில் சேரில் அமர்ந்திருந்த ஹரியை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள் பொன்னம்மாள்.
“ஹேய் கிழவி, என்னை பார்த்தால் உனக்கு கோட்டான் மாதிரி இருக்கா? வாயை அடக்கி பேசு” வீட்டின் முன் நின்றிருந்த அந்த பெண் பொன்னமாளுக்கு போட்டியாக பதிலுக்கு கத்தினாள்.
“எவடி அது என் வீட்டுக்கே வந்து என் பேச்சை பத்தி பேசுறது?”
பொன்னமாளுக்கும், ராகினிக்கும் சண்டை வலுக்க, என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தான் ஹரி.
வீட்டினுள் செல்லவே அவனுக்கு தயக்கமாக இருந்தது.
- மலையோரம்
- வீசும்
- காற்று
- பிந்து வினோத்
- வினோத்
- malaiyoram
- veesum
- kaatru
- Bindu Vinod
- Vinod
- Village
- Friends
- Family
- Romance
- Tamil
- Novel
- Drama
- Books
- from_Chillzee